
Post No. 11,488
Date uploaded in London – 30 November 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பாடல் 7
This is verse 7 of Arappaleechchura Satakam with London swaminathan’s commentary
பொருள்செயல் வகை பற்றி அறப்பளீச்சுர சதகம்
புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;
பொருளைரட் சிக்க வேண்டும்
புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்
உடலில்த ரிக்க வேண்டும்;
உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி
ஓங்குபுகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே
மார்க்கம்அறி யாக்குரு டராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அண்ணலே – தலைவனே!, கங்காகுலத் தலைவன்
மோழைதரும் அழகன் – கங்கை மரபின் முதல்வனான மோழை யீன்ற
அழகனான, உமது ……… தேவனே!, செல்வமது புண்ணிய வசத்தினால்
வரவேண்டும் – செல்வமானது நல்ல நெறியிலே கிடைத்தல் வேண்டும்,
பொருளை ரட்சிக்க வேண்டும் – (அவ்வாறு கிடைத்த) செல்வத்தைக்
காப்பாற்றல் வேண்டும், புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும் – அறிவின் திறத்தால், அப்பொருளை
ஒன்று நூறாகுமாறு புரிந்து நன்றாகப் பெருக்குதல் வேண்டும்; உண்ண
வேண்டும் – சாப்பிடவேண்டும், பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில்
தரிக்க வேண்டும் – பிறகு, அழகிய ஆடைகளையும் அணிகளையும்
மெய்யிலே அணிதல் வேண்டும், உற்ற பெரியோர் கவிஞர் தமர்
ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் – தம்மையடைந்த
பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்குங் கொடுத்து மிக்க புகழை யீட்டல் வேண்டும், மண்ணில் வெகு தருமங்கள்
செயவேண்டும் – உலகிலே வேறுபல அறங்களையும் இயற்றுதல் வேண்டும்,
உயர் மோட்ச வழிதேட வேண்டும் – மேலான வீட்டுக்கு நெறியாராய்தல்
வேண்டும், அன்றி – (இவ்வாறு) அல்லாமல், வறிதில் புதைத்து வைத்து
ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் – வீணிலே (மண்ணில்)
புதைத்து வைத்துவிட்டுப் (பிறர்க்கு) அளிக்காதவர்களே நெறியறியாத
குருடர்கள் ஆவர்.
(வி-ரை.) கங்கை – நீர். வேளாளர் உழவுக்கு நீரையே விரும்பி
நிற்பார்கள் என்பதனாற் கங்கா குலத்தவர் எனப்பட்டனர். இச் செய்யுளால்
மதவேளின் தந்தை மோழை யென்றறியப்படும். புண்ணியம் – நன்மை.
வசம் – ஆதரவு. வத்திர ஆபரணம் : வத்திராபரணம் (தீர்க்கசந்தி).
கம்அறி யாக்குரு டராம்
(க-து.) நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப்
பிறர்க்கும் அளித்தல் வேண்டும்..
xxx

எனது உரை
நல்லதொரு பாடல் இது; காசு வேண்டும்; அதை நல்ல வழியில் பெற வேண்டும் ;அதை பாதுகாப்பதோடு 100 மடங்காக அதிகரிக்க சொல்லிக்கொடு; அதை அனுபவிக்க வேண்டும். பிறருக்கு தருமம் செய்து புகழ் ஈட்ட வேண்டும்.
நம்மில் பலரும் இறைவனிடம் வேண்டுவது இதுதான் . தமிழர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ; அதாவது தானும் பயன்படுத்ததாத படி, பிறரையும் அனுபவிக்க முடியாதபடி மண்ணில் புதைத்துவைத்து பின்னர் இறந்து போவான். ஒருவேளை அது பற்றி யாருக்காவது சொல்ல நினைக்கும்போது, வாயில் கடைசி விக்கல் வந்து சொல்லாமலே இறந்தும் போவான்.
மற் றொரு வகை இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை. சர்க்கரை வியாதிக்கும் (Diabetes and Heart disease) இருதய நோய்க்கும் பணக்காரர் வியாதி என்று பெயருண்டு. தனது மகன்/ மகள் கல்யாணத்தில் கூட லட்டு, அல்வாவை சாப்பிட முடியாத நிலை பெரும் பணக்காரர்களுக்கு இருப்பதை நானே பார்த்து இருக்கிறேன். என்னுடன் வேலை பார்த்த ஒருவருக்கு லண்டனில் 7 வீடுகள் சொந்தம்; ஆனால் இருதய நோய்; காப்பியில் பால் விடக்கூடாது; சர்க்கரையும் போடக்கூடாது . அடடா ! ஆண்டவா ! என் வாழ்க்கையில் நான் இனிமேல் எண்ணெய்க் கத்தரிக்காய் கறி சாப்பிட முடியாதே என்று சொல்லி அங்கலாய்ப்பார்
இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் அம்பலவாணர் எழுதிய அறப்பளீச்சுர சதகம் பொருளைக்கொடு ; அதை அனுபவிக்கும் உடல் நலம், மன நலம் ஆகியவற்றையும் கொடு ; அது பன்மடங்கு பெருக வேண்டும்; பிறருக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக — தான தருமம் செய்வதாக — அது இருக்கட்டும் என்று வேண்டுகிறார்.
.Xxxx
பணத்தை முதலீடு செய்யாமல் செலவிட்டால் அது கரைந்து போகும். குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது தமிழ்ப் பழமொழி ; பணத்தை 100 மடங்காக மாற் றும் வித்தை பெண்களுக்குக் கூடத் தெரியும்
TAMIL WOMAN’S REINVESTMENT PLAN
புத்திசாலி தமிழ்ப் பெண்கள்
Post No. 9445;Date uploaded in London – –1 APRIL 2021
சங்க கால தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும் (independent and business oriented) வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது சங்க காலப் பாடல்களில் இருந்து தெரிகிறது.
பெணகள் பாடுவதும் ஆடுவதும் உலகம் முழுதும் இருந்துள்ளது. அதில் வியப்பொன்றுமில்லை. இது நிறைய பாடல்களில் வருகிறது. ஆனால் பூ வியாபாரம், உப்பு வணிகம், மோர், பால் , நெய், கள் , எண்ணெய் போன்றவற்றை விற்கும் பெண்களையும் காண்கிறோம். இவைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு செய்தியை சங்க கால நூலான பெரும்பாணாற்றுப் படை (வரிகள் 154-165) அளிக்கிறது.
ஒரு ஆயர் மகள் (Yadava woman) , அதாவது இடைக்குலப் பெண், தயிரிலிருந்து வெண்ணை கடைந்து எடுத்துவிட்டு மோரை விற்கிறாள். அவளே வெண்ணையைக் காய்ச்சி நெய்யாகவும் விற்கிறாள். அந்த நெய்க்கு பண்ட மாற்றாக பொற்காசு ஒன்றை ஒருவர் கொடுக்க முன் வருகிறார். ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கு’மென்பது பழமொழி. தங்கம் என்றால் பெண்கள் சொக்கிப் போய், மயங்கி விடுவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ எனக்கு பொற் காசு வேண்டாம்.அதற்குப் பதிலாக ஒரு எருமை, ஒரு பசு , ஒரு கன்றுக்குட்டி கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறாள்.அந்த புத்திசாலிப் பெண்ணைக் கண்டு வியக்கிறோம். அவளுக்கு தங்கக் காசை வாங்கி நகை செய்து போட்டுக்கொள்ளுவதை விட தன்னுடைய வருவாயை மறு முதிலீடு (Re investment) செய்வதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது! அவளுடைய அறிவு இக்காலத்தில் MBA, M.Com. எம்.பி.ஏ. எம்.காம் படித்த பெண்ணுக்கு நிகர் என்று சொல்லத் தோன்றுகிறது.
இதோ அந்தப் பாடல் வரிகள் :–
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச் . . . . .160
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை . . . .170
—பெரும்பாணாற்றுப்படை வரிகள் 154-165
அந்தப் பெண் செய்யும் பண்ட மாற்று வணிகத்தில் (Barter Tade) நெல் கிடைக்கிறது. அதைக் கொண்டு தன் உற்றார் உறவினர்க்கெல்லாம் உணவிடுகிறாள் என்ற செய்தியும் அப்பாடலில் வருகிறது. ஆக தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தையே நடத்திய புத்திசாலி அவள் என்பதையும் அறிகிறோம்.
****

JAIN WOMAN’S REINVESTMENT PLAN
கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை (Post No.7031)
Date: 29 SEPTEMBER 2019;Post No. 7031
சமண மத நூல்களில் நல்ல கதைகள் உள. அவை பிராக்ருத மொழியில் இருப்பதால் பிரபலமாகவில்லை. இதோ ஸ்வேதாம்பர பிரிவு சமண (ஜைன) மத நூலில் இருந்து ஒரு நல்ல கதை.
ஐந்து தானிய (நெல்) மணிகள்
முன்னொரு காலத்தில் ‘தன’ என்ற வியாபாரி அவனுடைய மனைவி ‘பட்டா’வுடன் வசித்துவதான். அவனுக்கு நான்கு மகன்கள். அவர்களுடைய பெயர்கள்–தன பாலெ, தன கோவெ, தன தேவெ, தன ரக்கியெ. அவர்கள் நால்வரும் கல்யாணம் கட்டிய பின்னர் வீட்டுக்குள் நான்கு மருமகள்கள் புகுந்தார்கள். அவர்களுடைய பெயர்கள்- உஜ்ஜீயா, போகவையா, ரக்கையா , ரோகிணீயா.
மகன்கள், மருமகள்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளுடைத்து. அவர்கள் பின்னர் என்ன செய்யப்போகிறார்கள், அவர்களுடைய குண நலன்கள் என்ன என்பதை விளக்கும் பிராக்ருதச் சொற்கள் அவை. பிராக்ருதம் என்பது பேச்சு மொழி; அதாவது கொச்சையான சம்ஸ்க்ருதம் ரக்ஷிதா என்பதை ரக்கையா என்பர், தேவ என்பதை தேவெ என்பர்.
தன என்னும் செல்வந்தருக்கு ஒரு கவலை வந்தது. இவ்வளவு செல்வம் சேர்த்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மருமகள்கள் இதைப் பாது காத்து வருங்கால சந்ததிக்கு வழங்க வேண்டுமே என்று கவலைப்பட்டார். மேலும் அவரும் மகன்களும், திரைகடல் ஓடித் திரவியம் தேடச் சென்றால் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திரும்பி வருவர்.
ஆகையால் வீட்டுக்கு வந்த மகராசிகளில் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஒரு சோதனை வைத்தார். நாலு மருமகள்களையும் அழைத்து ஐந்து அரிசி (நெல்) மணிகளைக் கொடுத்து இவற்றை ஜாக்கிரதையாகப் பாது காத்து வாருங்கள்; நான் திரும்பி வர ஐந்து ஆண்டுகள் ஆகும் . பின்னர் உங்களைச் சந்திக்கிறேன் என்று தானிய மணிகளைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
அவர் போனவுடன் உஜ்ஜீயா என்ற மா/நாட்டுப்பெண் (மருமகள்) அட, வீடு நிறைய சாக்கு சாக்காக நெல் கிடக்கிறது. இதை எவள் பாதுகாத்து வைப்பாள்? என்று சொல்லி ஐந்து நெல் மணிகளையும் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
அதேபோலக் கருதிய போகவையா அவைகளைத் தூக்கி எறியாமல் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டாள்.
மூன்றாவது நாட்டுப் பெண் ஆன ரக்கீயா அவகளை ஒரு நல்ல பட்டுத் துணியில் மடித்து ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பெட்டியில் வைத்து படுக்கை அறையில் தலைமாட்டில் வைத்துப் பாதுகாத்து வந்தாள்
நாலாவது மருமகளா ரோகிணி, ஐந்து நெல் மணிகளையும் வேலைக் கார்களிடம் கொடுத்து இவைகளை மிகவும் கவனமாக வளருங்கள் என்றார். அவை காய்த்துக் குலுங்கியவுடன் புதிய வித்துகளைப் பயிரிட்டாள். அவை மேலும் வளர, வளர பயிர் வளம் பெருகியது; நல்ல அறுவடையும் கிடைத்தது.
ஐந்து ஆண்டுகள் உருண்டோடின. வணிகரும் திரும்பி வந்தார். மருமகள்களை அழைத்தார். 5 தானிய மணிகளையும் கொண்டு வாருங்கள் என்றார். உஜ்ஜீயா என்ன செய்தாள் தெரியுமா? நெற் குதிரில் உள்ள தானியத்தில் ஐந்து புதிய மணிகளைக் கொணர்ந்தார். இவை நான் கொடுத்த தானிய மணிகள் என்று சத்தியம் செய்வாயா? என்று கேட்டார். அவள் பயந்துபோய் உண்மையைக் கக்கினாள். அடச் சீ நீ போ! இனிமேல் வீட்டைக் கழுவி, மெழுகி, வறட்டி தட்டும் வேலைதான் உனக்கு என்று சொல்லி அனுப்பினார்.
போகவையா, இதைப் பார்த்து பயந்து போய், தான் 5 தானிய மணிகளையும் கொடுத்த அன்றே சாப்பிட்ட உண்மையைக் கக்கினார்.
அடச் சீ நீ போ; சரியான சாப்பாட்டு ராமி நீ! இனிமேல் உனக்கு சமையல் அறை வேலைதான். தினமும் எல்லோருக்கும் சமைத்துக் கொட்டு; பாத்திரங்களைக் கழுவி, அடுப்பை மெழுகி, சமையல் அறையிலேயே வசி என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அடுத்ததாக ரக்கீயா வந்தார். படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் பாதுகாத்துவைத்த ரத்தினப் பெட்டியைக் கொணர்ந்து ஐந்து நெல் மணிகளையும் பட்டுத் துணியில் சமர்ப்பித்தார். வர்த்தகருக்கு மெத்த மகிழ்ச்சி. நீ இந்த வீட்டு பண்டக சாலை ( பொக்கிஷ அறை); அனைத்துக்கும் அதிகாரி. இந்தா, சாவி. அவைகளைப் பாதுகாப்பது உன் பொறுப்பு என்றார்.
GOOD INVESTMENT
நாலாவதாக ரோகிணி வந்தாள்- தந்தையே 5 தானிய மணிகளையும் கொணர நிறைய வண்டிகள் வேண்டும்; ஏனெனில் அவைகளைப் பயிரிட்டுப் பெருகவைத்தேன். நல்ல அறுவடை கிடைத்தது என்றார். பின்னர் வண்டி வண்டியாக, மூட்டை, மூட்டையாக தானியக் குவியல்களைக் கொணர்ந்து கொட்டினார். வியாபாரிக்கு பெரும் சந்தோஷம். நீதான் இனி இந்த வீட்டுக்கு மஹாராணி; தலைவி; குடும்பத்தை நிர்வகிக்கும் முழு அதிகாரத்தையும் உனக்குத் தருகிறேன் என்றார்.
இந்தக் கதையின் நீதி என்னவென்றால்– சமண மதத்தினர் போற்றும் அஹிம்சை, பிறர்பொருள் நயவாமை, உண்மை, பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடாமை, கெட்ட வழிகளில் செல்வம் சேர்க்காமை ஆகிய ஐந்து கொள்கைகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களே பெரும் பேறு அடைவர் என்பதாம்.
xxxxx
நாய் பெற்றதெங்கம் பழம்
பர்த்ருஹரி நீதி சதகம் ஸ்லோகங்கள் 38, 39
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.
அதாவது,
“செல்வத்தை, காசு பணத்தை, ஒருவன் தனக்கோ பிறருக்கோ பயன்படுத்த வேண்டும் அல்லது அது வீணாகிப் போகும். பணக்காரன், தானும் அனுபவியாமல் தர்மமும் செய்யாமல் இருந்தால் அது நாசமாகும்.-38”
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.
4.WHAT MISERS HAVE HOARDED THE WICKED WILL TAKE
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
என்று கொன்றை வேந்தனில் அவ்வையாரும் கூறுவார்
நாம் எல்லோரும் மைடாஸ் (Midas, the Miser) கேட்ட வரம் பற்றிய கதையை அறிவோம்.
xxx
நல்ல வழியில் ஈட்டாத பொருள் பற்றி திரு வள்ளுவர் அழகாகக் கூறுகிறார்:
வினைத் தூய்மை
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (குறள் – 656)
தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது
பலர் ஏன் திருடுகின்றனர் என்ற கதைகளில் ஒருவர் துன்பத்தைத்த துடைப்பதற்காக அவர்கள் திருடினார்கள், கொள்ளை அடித்தார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். அது தவறு என்று வள்ளுவன் சொல்லிவிட்டான் .
இன்னும் பலர் மற்றவர்களை அழவைத்து பொருளைச் சேர்க்கிறார்கள்; அப்படிப்பட்ட செல்வம் அவர்களை அழ , அழ வைத்துவிட்டுப் போய்விடும் என்றும் வள்ளுவன் செப்புவான்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ( – 659)
பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்;
தீய வழிகளில் சேர்த்த செல்வத்தைக் காப்பாற்றவும் முடியாது; பச்சை மண்கலத்தில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது போன்றது அது என்று வள்ளுவன் சொல்லும் உவமை சாலப்பொருந்தும்
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. ( 660)
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
Xxxx
ஈயென்று ஒருவர்
ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்– என்று அருட் பிரகாச வள்ளளார் வேண்டுகிறார் .
xxxx
தான, தருமம் பற்றிய பொன்மொழிகள்
தானத்தின் இலக்கணம்
அநந்தஸ்ரூணி ரோமானி பஹுமானம் ப்ரியம் வச:
கிஞ்சானுமோதனம் தானம் தான் பூஷண பஞ்சகம்.
ஆநந்தஸ்ரூணி – தானம் கொடுத்தபின் ஆநந்தக் கண்ணீர்,
ரோமாணி – மயிர்க்கூச்சம் எடுத்தல்,
பஹுமானம் – மரியாதை காட்டல்,
ப்ரியம் வச: – பிரியமான சொற்களைச் செப்பல்,
அனுமோதனம் – தானத்தை மறுக்காமல் ஏற்றல்
xxx
நல்ல தானம் (சாத்விகம்) எது?
தகுதியான இடத்தில், தகுதியான காலத்தில், தகுதியுள்ள ஆளுக்கு (பாத்ரம்) கொடுப்பதே உத்தம தானம்; உயர்ந்த தானம் (17-20)
தாதவ்யமிதி யத்தானம் தீயதே அனுபகாரிணே
தேசே காலே ச பாத்ரே ச தத்தானம் சாத்விகம் ஸ்ம்ருதம்
இந்த ஸ்லோகத்தில் இன்னொரு வரியையும் சேர்த்துள்ளார்
நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும்.
அதாவது ஏற்கனவே நமக்கு ஏதோஒரு வகையில் உதவி செய்தததால் அந்த நபருக்கு தானம் கொடுத்தால் அது தானம் இல்லை. அது நன்றிக் கடன் ஆகும்.
Xxx
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
பிறருடைய பசியைத் தீர்ப்பதே பெரிய தருமம்/அறம். அப்பொருள் பிற்காலத்தில் தனக்குச் சேர்த்து வைக்கும் இடமாகும்.
ஆனால் இப்படிச் செய்வது இரண்டாம் வகை தானம் (தாமசம்).
புறநானூற்றில் தானம்
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணின்கன் ஆய் அல்லன்;
என்று ஆய் அண்டிரனை முடமோசியார் பாராட்டுகிறார் (புறம் 184)
அதாவது அடுத்த ஜன்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக ஆய் அண்டிரன் தானம் செய்யவில்லை. பிறருடைய வறுமையைக் கண்ட மாத்திரத்தில் இயல்பாகப் பொங்கி எழும் மனிதாபிமான அடிப்படையில் வாரி வழங்குவானாம்! இது முதல் வகைத் தானம். ஆய் அண்டிரன், பேகன், கர்ணன், பாரி வள்ளல் போன்றோர் சாத்வீக (உத்தம) தானம் செய்தோர் ஆவர்.
Xxx subham xxxx
Tags-பொருள் ,தேடுதல் ,ஈட்டல், தகனம், தருமம், முதலீடு , கதைகள் , தமிழ்ப் பெண் , சமண பெண்