
WORLD LEADERS FELL ASLEEP WHEN SOME SPEAKER WAS DELIVERING A BORING SPEECH.
Post No. 11,508
Date uploaded in London – 5 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலா தவனொரு பதர்;
வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
மனக்கோழை தானொரு பதர்;
ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்
றிகழநிற் பானொரு பதர்;
இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ
டிணங்கிவாழ் பவனொரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
வீண்பேசு வானொரு பதர்;
வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை
விட்டுவிடு வானொரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல!
– தணியாத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள்புரியும் தூயவனே!
‘எமது ……. தேவனே!’ மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே வாய்
இலாதவன் ஒரு பதர் – திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர்,
வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் மனக்கோழைதான் ஒரு பதர் –
எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்
மனவுறுதியற்றவன் ஒரு பதர்,
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி!
என்று இகழ நிற்பான் ஒரு பதர் –
செல்லாத வழக்கைச் செப்பி, யாவரும்
சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர்,
இல்லாள் புறம்செலச்
சம்மதித்து அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் –
தன் மனையாள் அயலானிடத்திற்போக மனம் ஒப்பி, அவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர்
– தன்னை மற்றவர் புகழாமல், தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர்,
வேசையர்கள் ஆசை கொண்டு
உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் –
பரத்தையரிடங் காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.
(க-து.) இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்
தக்கவர்கள்.
நெற்பயிரில் பதர் என்பதன் உள்ளே ஒன்றுமிராது. காலியாக இருக்கும். ஆயினும் வெளியே அது தெரியாது. இது போல மனிதர்கள் போல தோற்றம் தரும் ‘காலி’ கள் , வெற்று வேட்டுக்கள் உண்டு. அவை வெடிக்காத புஸ் வாணங்கள் ; அவர் யாவர்?
1.பேசத் தெரியாதவன்
2.போரில் புறமுதுகு காட்டுவோன்
3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்
4.மனைவியை வாடகைக்கு விடுவோன்
5.தன்னைத்தானே புகழ்பவன்
6.பிற பெண்களை நாடுவோன்
XXX
1.பேசத் தெரியாதவன்
நன்கு படித்து என்ன பயன்? அதைப் பிறருக்கு சொல்லத் தெரியவேண்டும். அதை வள்ளுவர் அழகாக ஒரே குறளில் சொல்கிறார்; பேசத் தெரியாதவர்களை மலர்ந்தும் மணம் வீசாத மலர்கள் என்கிறார்
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் —குறள் 650
நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் .
XXX
“எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் – உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)
XXX
பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர் (குறள் 649)
சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)
XXX
கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றிவேற்கை
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்
பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை
பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.
XXX
பேச்சுக் கலை பற்றி சாணக்கிய நீதி
அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய
நல்ல விஷயங்களைச் சொல்பவரும் கேட்பவரும் அரிது.
XXX
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது
XXXX
2.போரில் புறமுதுகு காட்டுவோன்
புற முதுகு காட்டாமல் போரிட வேண்டும் என்பது இந்து மரபு; அப்படி நெஞ்சில் புண்படாமல் முதுகில் புண்பட்டுவிட்டால் அவர்கள் வடக்கிருந்து உயிர் துறப்பர் ; புனிதமான இமயமலை, மேரு மலை, கயிலாயம் உள்ள வடதிசை நோக்கி உண்ணாவிரதமிருந்து கோப்பெ ருஞ்சோழன் சொர்க்கம் சென்றதை புறநானூறு காட்டும்.
வீரத்தாய் பற்றி ரிக் வேதம் முதல் பாரதி வரை பலரும் பாடியுள்ளனர். அவர்கள் புறமுதுகு காட்டாமல் போரிட்டவர்கள்.
புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:
புறம் 86 (காவற்பெண்டு)
சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்
யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.
ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.
காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.
ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).
உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:
“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி
விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”
பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
Xxx
3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்
பொய் சாட்சியம்
பொய் சொல்வோரைக் கண்டுபிடிக்கும் முறை பற்றி உபநிஷதம் மற்றும் கலித்தொகை நூல்கள் பல அதிசயச் செய்திகளை உரைக்கின்றன .பாலைபாடிய பெருங் கடுங்கோ கலித்தொகையில் ஒரு உவமை சொல்கிறார்.
கரிபொய்த்தான் கீழ் இருந்த மரம்போல கவின்வாடி — என்பது அது. அதாவது பொய் சொன்னவன் கீழே நின்றால் அந்த மரமும் வாடிவிடுமாம் இதை ஆதி சங்கரர்- மண்டனமிஸ்ரர் சம்வாதத்தில் முதல் மாலை வாடுபவரே தோற்றார் என்று சரசவாணி சொன்ன சம்பவத்திலும் எடுத்துக் காட்டியுள்ளேன்
Xxxx
4.மனைவியை வாடகைக்கு விடுவோன்
13: காமம் வலியது
உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி,
வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி,
அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச்,
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.
—–விவேக சிந்தாமணி
ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.(ஆகவே எச்சரிக்கையாயிரு.)
சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை —குறள் 57
”நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்த லாகா”— (பழமொழி 30)
“உண்டியுட் காப்புண் டுறுபொருள் காப்புண்டு
கண்ட விழப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” —-(வளையாபதி)
xxxxx
6.பிற பெண்களை நாடுவோன்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு—குறள் 148
மார்க்சீயவாதிகளும் பயங்கரவாதிகளும் யார் யாரை எல்லாமோ மாவீரர் என்று புகழ்வர். ஆனால் இந்தியாவில் இரண்டு மாவீரர்தான் உண்டு. புலன்களை வென்று நிமிர்ந்த பார்வையுடன் நிற்கும் சமண மத தீர்த்தங்கரர் மஹாவீரர், ஜிதேந்த்ரியன் என்று புகழப்படும் அனுமன் ஆகிய இருவர்தான் மாவீரர். புலன்களை வெல்லா தோர் செய்யும் இழி செயல் பிறர் மனை நாடுதல் . ராவணன் பட்ட கஷ்டத்தை ராமாயணம் புகலும் . கோவலன் பட்ட கஷ்டத்தைச் சிலப்பதிகாரம் புகலும்; அவன் மாதவியிடம் போகாமல் இருந்தால் சிலம்பு விற்கப் போய் கொலையுண்டு இருக்கமாட்டான் .
திருவள்ளுவரும் ஆடவர்களைச் சுண்டி இழுக்கும் பெண்களைத் தாக்கி பாடுகிறார்.
தினசரி நாளேடுகளில் வரும் கிரைம் CRIME //குற்றச் செய்திகளில் இதுவே முதலிடம் வகிப்பதால் நான் விளக்கத் தேவையே இல்லை
கீழ்மக்கள் யார் ? என்று விவேக சிந்தாமணியும் விளக்கும்
தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான் சொல் வோரும், பொன்னைத்தான் தேடியறம் புரியாமல் அவை காத்துப் பொன்றி னோரும், மின்னைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும், அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறமில்லாக் கசட ராமே,
தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.
5.தன்னைத்தானே புகழ்பவன்
உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)
வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439)
பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு
மனு நீதி நவில்வது
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-163
Xxxx subham xxxxxxxx
tags-பேசத் தெரியாதவன், புறமுதுகு காட்டுவோன், பொய் வழக்கு ,பொய் சாட்சிய, மனைவி வாடகை,தன்னைத்தானே புகழ்பவன், பிற பெண்களை நாடுவோன்