
Post No. 11,513
Date uploaded in London – 6 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Arappalichura Satakam verse 13- my commentary
13. செய்ய வேண்டும்
வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
வளரறஞ் செய்ய வேண்டும்;
சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
செய்யா திருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி
னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!
அனக! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இ-ள்.) ஆலம் அமர்கண்டனே – நஞ்சு பொருந்திய
கழுத்தையுடையவனே! பூதி அணி முண்டனே – திருநீறு பூசிய நெற்றியை
யுடையவனே!, அனக – குற்றம் இல்லாதவனே!, எமது…….. தேவனே!,
வாலிபந்தனில் வித்தை கற்கவேண்டும் – இளமையிலேயே கலைகளைக் கற்றல் வேண்டும், கற்ற வழியிலே நிற்கவேண்டும் – கற்றவாறே நன்னெறியிலே நடத்தல் வேண்டும், வளைகடல் திரிந்து பொருள்
தேடவேண்டும் – (உலகை) வளைந்திருக்குங் கடலிலே (கலம் ஊர்ந்து) அலைந்து பொருளைச் சேர்த்தல் வேண்டும். தேடி வளர் அறஞ் செய்யவேண்டும் – சேர்த்துப் பெருகும் அறங்களை இயற்றல் வேண்டும், சீலம் உடையோர்களைச் சேரவேண்டும் – ஒழுக்கம் உடையவர்களிடம் நட்புக் கொள்ளவேண்டும், பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் – (அவர்களை) நீங்காது இருத்தல் வேண்டும். செந்தமிழ்ப் பாடல் பல கொள்ளவேண்டும் – பல செந்தமிழ்ப் பாக்களைப் (புகழ் மாலையாக) ஏற்றல் வேண்டும், கொண்டு தியாகம் கொடுக்கவேண்டும். ஏற்றுப் (புலவர்களுக்கு) நன்கொடை அளித்தல் வேண்டும். ஞாலம்மிசை பல தருமம் நாட்டவேண்டும் – உலகிலே பல அறநிலையங்களை நிறுவுதல் வேண்டும். நாட்டி நன்றாய் நடத்தவேண்டும் – நிறுவியதோடு நில்லாமல், அவற்றை ஒழுங்காக நடத்தல் வேண்டும். நம்பன் இணையடி பூசை பண்ணவேண்டும் – சிவபெருமானாகிய (உன்) இரு திருவடிகளினும் வழிபாடு செய்தல் வேண்டும், பண்ணினாலும் மிகுபத்தி வேண்டும் – வழிபாடு செய்தாலும் பேரன்பு வேண்டும்.
(க-து.) இங்கே கூறியவாறு கல்வி கற்றல் முதலியவை வேண்டும்.
இதில் சொன்ன எல்லா விஷயங்களும் மிக மிக எளிய அறிவுரைகள் . அவ்வையாரின் ஆத்திச் சூடியிலும் அதிவீர ராம பாண்டியனின் வெற்றிவேற்கையிலும் காணப்படும் அறிவுரைகளே !
இளமையில் கல் ,
கற்கக் கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக (குறள் )
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
குந்தித் தின்றால் குன்றும் கரையும் (தமிழ்ப் பழமொழி)
xxxx

பாரதியாரும் கொஞ்சு தமிழில் அழகாக இவைகளை அடுக்குகிறார்:
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்
Xxx
பாரதியின் பேராசை
“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”
–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை
என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!
பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான். குறள் 1062)
பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?
“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.
அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!
செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை—உலகில்
இல்லையாக வைப்பேன்
தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!
இன்னொரு இடத்தில்,
“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.
கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!
“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி—நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”
Xxx
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்;
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி
வேல் சக்தி வேல் சக்தி வேல்!
Xxxx

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
Xxx
அபிராமி பட்டரும் நல்லோர் சேர்க்கை, கடவுள் பக்தி பற்றிப் பாடுகிறார்
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
Xxxx
இறுதியாக வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சொன்னதையும் ஒப்பிட வேண்டும்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
xxxx
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
xxx
பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
பார்முகம் பார்த்திரங்கும்
பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
—- தெய்வ மணி மாலை , வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்
Xxx
இதிலுள்ள ஒரு விஷயம் உலகில் வேறு எங்கும் ஆதிகாலத்தில் இல்லை ; அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்தல் என்று பாரதியாரும் குறிப்பிடுவார் ; ஊருக்கு ஊர் தர்ம சத்திரங்கள் நிறைந்த நாடு இந்தியாதான். மனிதர்களுக்கு மட்டுமின்றி பிராணிகளுக்கு ஆஸ்பத்திரிகளையும் நிறுவினர் சமண மதத்தினர். அசோகர் கல்வெட்டு முதல் சத்திரங்கள் பற்றி அறிகிறோம். அவற்றைப் பராமரிக்க மன்னர்கள் மான்யம் கொடுத்ததையும் கல்வெட்டுகள் பகர்கின்றன. மாடுகள் முதுகைச் சொறிந்து கொள்ள கற்கள் நடவேண்டும் என்றும் அவற்றில் சொல்லப்பட்டுள்ளது.
Xxx subham xxxxx
Tags- என்ன வேண்டும் , அறப்பளீசுர சதகம்