
Post No. 11,511
Date uploaded in London – 6 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன மொபைல் போன், வீடியோ பூதங்கள்!
ச.நாகராஜன்
பிசாசு, பேய், பூதம், அரக்கன் – இல்லை என்று யார் சொன்னது?
இந்த நவீன டெக்னிகல் உலகிலும் இருக்கிறார்கள்.
மொபைல் போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு செய்திகள்! ஆசை காட்டும் செய்திகள் பல!
‘உனக்குக் கொடுக்கிறோம் போனஸ் 9000 ரூபாய்.இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!’
நம்பி ஆசைப் பட்டு க்ளிக் செய்தால் வெளிப்படுவது அலாவுதீனின் பூதம் தான்!
எத்தனை ரூபாய் இழப்போ! அது அந்த வேளையில் க்ளிக் செய்த நபரின் மோசமான காலத்தைப் பொறுத்து இருக்கும்!
வீடியோவில் நீ ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சியை அனைவருக்கும் ஷேர் செய்யவா அல்லது ரூபாய்…. அனுப்புகிறாயா?
தூக்கிவாரிப்போட்டு அந்த வீடியோ பூதத்தைச் சமாளிக்க அந்த பூதத்திடம் அகப்படுபவர் படும் பாடு…..!!!!?
நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றாலும் ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஒரு அரசல் புரசலான மங்கிய காட்சியை அனுப்பி மிரட்டும் போது யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?
OTP, Passcode, Bank account Number, Aadhaar no, Pan No, Transaction details உள்ளிட்ட எதையும் வெளியிடக் கூடாது!
*
ஒரு பெரிய நாடு தழுவிய நிறுவனத்தின் மேலாளராக அறிமுகப் படுத்திக் கொண்டு என்னிடம் மியூச்சுவல் ஃபண்ட் போடுமாறு அழைத்தார் ஒருவர். நல்ல ஆங்கிலம். குழையும் குரல். மரியாதையான பேச்சு.
நம்பினால் அதோகதி தான்!
நான் அவரது நிறுவனத்தின் முகவரியைக் கேட்டேன். ஆன்லைனில் தான் என்றார். நான் உஷாராகி விட்டேன்.
இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு ஒரு ஆபீஸ் இல்லையா என்றேன்.
தொழில்நுட்ப வேகம் என்றார். தொடர்ந்து நாள் தோறும் பேசுவார். ஆபீஸ் முகவரி, மேனேஜர் பெயர், அவர் போன் நம்பர் கேட்பேன். வைத்து விடுவார்.
*

ஒரு பெண்மணி. எனது முக்கிய பேங்க் பெயரைச் சொல்லி அதில் அக்கவுண்ட் இருக்கிறதா என்றார். ஆம் என்றேன். அவர் அந்த பேங்கில் தான் வேலை செய்வதாகச் சொன்னார். ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் அனுப்பினால் போதும், டெபாஸிட் செய்யலாம், எக்ஸ்ட்ரா பெனிஃபிட் உடனே பெறலாம்” என்றார்.
நான் சொன்னேன் – “இந்த பேங்க் என் வீட்டிலிருந்து பத்து கட்டிடம் தான் தள்ளி இருக்கிறது. இதோ நேரில் வருகிறேன். எக்ஸ்ட்ரா பெனிபிட்டை தயார் செய்து வையுங்கள். பத்து நிமிடத்தில் பார்க்கிறேன் என்றேன்.”
அவ்வளவு தான்! போன் கட்!
நண்பர்களே, யாரிடமும் போனில் எந்தத் தகவலையும் தராதீர்கள்!
நேரடியாக இதோ வருகிறேன் என்று சொல்லுங்கள், அவ்வளவு தான், போன் கட் ஆகி விடும்!
*
இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி 2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சம்பவம் இது!
யூனியன் மினிஸ்டர் அஜய் மிஸ்ரா தேனி (Union Minister Ajay Mishra Teni) அவர்களுக்கு ஒரு போன் கால் வந்தது. இரண்டு கோடி ரூபாய் கேட்டார்கள்! எதற்காக?
2021, அக்டோபர் 3ஆம் தேதி தேனியும் அவரது மகனும் காரில் செல்லும் போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் புரட்சி.
அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அதைப் பற்றிய ரகசிய வீடியோ ஒன்று இருக்கிறது என்றும் அது தேனியின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்றும் இரண்டு கோடி தந்தால் வீடியோவைத் தருவதாகவும் ப்ளாக்மெயில் கால் வந்தது.
யூனியன் மினிஸ்டருக்கே ஒரு மிரட்டலா?
அவர் பயப்படவில்லை. நேரடியாக டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானாவிடம் ஒரு புகார் கொடுத்தார். எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.
இதில் ஐந்து டெக்கிகள் இணைந்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ப்ராக்ஸி செர்வர்கள்- proxy servers for dynamic, jumping IPs and Virtual Private network – VPN ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸாரையே திணற அடித்தது இந்த டெக்னிகல் கும்பல்.
போன் செய்த இடம் நாய்டாவில் உள்ள ஒரு பார்க். அதன் அருகில் இரு டெலிபோன் டவர்கள் இருப்பதால் எங்கிருந்து கால் வந்தது என்று குழப்பம் ஏற்படும். இன்னும் பல உத்திகள்.
அனைத்தையும் ஆராய்ந்து ஐவரையும் பிடித்தது போலீஸ். பணம் தருவதாகச் சொல்லி குறிப்பிட்ட இடம் செல்ல, அங்கு வந்து சிக்கினான் ஒருவன். அதே சமயம் பல இடங்களில் ரெய்டு நடத்தி மற்ற நால்வரையும் பிடித்தனர் போலீஸார்.
மத்திய மந்திரிக்கே இப்படி ஒரு மிரட்டல் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்!
ஆகவே போனில் நமக்கு அறிமுகம் இல்லாத யாரிடமும் நமது நிதி மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கூறவே கூடாது. தெரிந்த உறவினர்களுக்கும் இப்படிப்பட்ட விவரங்களைத் தரக்கூடாது. ஏனெனில் அவர்களின் கவனக்குறைவாலும் நாம் பாதிக்கப்படலாம்!
ஆன்லைனில் பணம் அனுப்புவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதி நவீன தொழில் நுட்பங்களை மிகுந்த ஜாக்கிரதையாக கையாண்டு அதன் நல்ல அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – எச்சரிக்கையுடன்!
பழைய கால பூதங்களை கட்டுக் கதை என்று சொல்பவர்கள் கூட இந்த நவீன கால பூதங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், பயப்பட்டு ஜாக்கிரதையாக இருக்கத் தான் வேண்டும்.
ஜாக்கிரதை, போன், வீடியோ பூதம் ஜாக்கிரதை!
***tags- நவீன, மொபைல் போன், வீடியோ, பூதங்கள்,