
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,524
Date uploaded in London – 9 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எங்கோ கிடைத்த பொருளை அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கவிபாடிய ஒரே புலவர் அம்பலவாண கவிராயர் ஒருவர்தான்
இரண்டு சம்பவங்கள் — நேர்மைக்குப் பரிசு
1,000 வெள்ளியுடன் பணப்பையைத் தொலைத்த வெளிநாட்டு ஊழியரிடம் அதைப் பத்திரமாக ஒப்படைத்த மற்றொரு ஊழியர் (பிப்ரவரி 2022 செய்தி)
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஹபிப் கான், இந்த மாதம் 14ஆம் தேதி, தமது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் 1,000 வெள்ளி ரொக்கம், வங்கி அட்டை, வேலை அனுமதி அட்டை அனைத்தும் இருந்தன.
உடனடியாக தமது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றைச் வெளியிட்டார்.
பணப்பையைக் கண்டால் தம்மை உடனே தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அவரது பதிவைப் பார்த்த பலர், உடனடியாக அதைப் பகிர்ந்தனர்.
பதிவு கிட்டத்தட்ட ஆயிரம் முறை பகிரப்பட்டது.
பணப்பையைக் கண்டெடுத்த ஜாகிர் ஹுசைன் எனும் மற்றொரு வெளிநாட்டு ஊழியரையும் அந்தப் பதிவு எட்டியது.
உடனே ஹபிபைத் தொடர்பு கொண்டு அவரிடம் பணப்பையைத் திருப்பிக் கொடுத்தார் ஜாகிர்.
பணப்பையில் அனைத்தும் பத்திரமாக இருந்ததைக் கண்டு ஹபிப் நெகிழ்ந்துபோனார்.
ஹுசைனை மனமாரப் பாராட்டி அவர் வெளியிட்ட பதிவும் இணையவாசிகளிடையே பரவியது.
“உழைத்து ஈட்டிய பணம் நிச்சயம் பத்திரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இவ்வளவு பேர் மனமுவந்து உதவுவர் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.”
என்று நெகிழ்ச்சியுடன் பதிவில் குறிப்பிட்டார் ஹபிப்.
XXXX
நேர்மைக்குப் பரிசு
“நேர்மைக்கு கிடைத்த பரிசு” – வீதியில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பெண் JANUARY 2022 NEWS
ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால் சவரன் தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார். இந்த நகையை அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் கண்டெடுத்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ருக்மணியின் செயலை பாராட்டும் விதமாக காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இப்படி வாரம் தோறும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளன .கண்டெடுத்த பொருளைத் திருப்பிக்கொடுக்க பெரிய மனது இருக்க வேண்டும் .அம்பலராயக் கவிராயர் தவிர யாரும் இதைப் பாடலில் எவரேனும் வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே .
XXX
உண்மை என்பதை மதிக்கும் ஒரே நாடு பாரதம் தான். சத்யமேவ ஜயதே என்ற உபநிஷத வாக்கியத்தை நாட்டின் சின்னத்தில் பொறித்த நாடு இந்தியா . இதைத் தமிழில் மொழிபெயர்த்து, வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழ்நாடு அரசும் பொறித்துள்ளது தாயார் சொன்ன ஹரிச்சந்திரன் கதை மஹாத்மா காந்திஜியின் வாழ்வை எப்படி மாற்றி, உலகப் புகழ்பெற வைத்தது என்பதை நாம் அறிவோம்.
வேத பாட சாலைக்குள் சிறுவன் நுழைந்த வயதில் முதல் பாடம் சத்யம் வத / உண்மையே பேசு என்பதாகும்.
குலம் கோத்திரம் தெரியாத சத்யகாம ஜாபாலா என்ற சிறுவன் கதை உபநிஷதத்தில் உள்ளது. எனக்கு அம்மா பெயர் மட்டுமே தெரியும்; அப்பா பெயர் தெரியாது; இதை அம்மாவே சொன்னாள் என்று சிறுவன் ஜாபாலா சொன்னதைக் கேட்ட குரு நெகிழ்ந்து போனார். நீ உண்மை பேசுவதால் வேதம் பயில அருகதை உடையவன் நீ என்று அவர் அறிவிக்கிறார்.
XXX
வி ஜி எஸ் என்ற வி ஜி சீனிவாசன் எங்களுக்கு மதுரை சேதுபதி உயர்நிலைப்பலள்ளியில் தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்படுத்திய குருநாதர் ஆவார். அவர் சொல்லிக்கொடுத்த நேர்மைக்கான வழி ஒன்றையும் நினைவு கூறுதல் பொருத்தம். யாராவது கள்ள நாணாயம் அல்லது கள்ள ரூபாய் கொடுத்து உங்களை ஏமாற்றினால் நீங்கள் அதை நைஸாக வேறு ஒருவரிடம் கொடுத்து ஏமாற்றாதீர்கள் ; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள் என்றார் . இதன் மூலம் ஏமாற்றும் சுழற்சியை நாம் வெட்டிவிடுகிறோம்
ரோட்டில் பணம் கிடைத்தால், அதை இழந்தவரிடம் சேர்ப்பிக்க முடியாவிட்டால், ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது கோவில் உண்டியலில் போட்டுவிடலாம். பணத்தை இழந்தவரிடம் கடவுளே சேர்ப்பித்து விடுவார்.

செய்நன்றி
மேற் கூறிய இரண்டு பணம், நகை கண்டெடுப்பு சம்பவங்களிலும் அவர்கள் செய்த உதவிக்கு உடனே நன்றி மறக்காமல் பதில் உதவியும், நன்றி யும் கிடைப்பதை பார்க்கலாம்.
வள்ளுவனும்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு –குறள் 110
xxxx
புறநானூறு
“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7) என்று புறநானூறு இயம்பும். இது வால்மீகி இராமாயண சுலோகத்தின் மொழிபெயர்ப்பு (See my earlier article)
Xxxx
அறப்பளீச்சுர சதகம்-16
செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை……….தேவனே!, செய்ந்நன்றி மறவாத பேர்களும் –
(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய் தீமையை
மறந்தபேரும் – ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், திரவியம்
தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல் சித்தம் வையாத பேரும் –
பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்
செலுத்தாதவர்களும், கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்
பொருளாளர் கையில் கொடுத்தபேரும் – கையினாலே கண்டெடுத்த
பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்
கொடுத்தவர்களும், காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும் – உலகில் ஒருவர் செய்த அறம்
கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், பொய் ஒன்று நிதி கோடிவரினும்வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும் – நிலையற்ற செல்வத்தைக்
கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை
உரையாத பேரும் – உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்
அகம் மகிழ்வர் – இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.
இந்தப் பாடலில் உள்ள ஏனைய கருத்துக்களை முன்னரே விளக்கியுள்ளேன். பிறன்மனை நோக்காதவரை பேராண்மை — மஹா வீரம் — உடையவர் என்றான் வள்ளுவன். இந்தியாவில் இருவருக்கு மட்டுமே இந்த மாவீரர் பட்டம்; ஜிதேந்திரியர்களான — ஐம்புலன் வென்ற — சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் — அனுமன் — ஆகிய இருவருக்கு மட்டுமே மாவீரர் பட்டம் கிடைத்தது என்பதை முன்னேரே சொன்னேன்.
— சுபம் —-
tags- செய் நன்றி, நேர்மைக்கு பரிசு, உண்மை, பிறர் பொருள்