ராமாயணத்தில் நதிகள் – 6 (Post.11527)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,527

Date uploaded in London – 10 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி

 ராமாயணத்தில் நதிகள் – 6

ச.நாகராஜன்

கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:

 3. கங்கை (தொடர்ச்சி)

கங்கைக்கு நிகரான நதிகள் ஐந்து என ஏராளமான ஸ்லோகங்கள் வெவ்வேறு நதிகளைக் கூறுகின்றன.

காவேரிதுங்கபத்ரா,க்ருஷ்ணா,கௌதமிபாகீரதி ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

பாகீரதிகோதாவரிக்ருஷ்ணாபினாகினிகாவேரி

ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

பாகீரதிஅலக்நந்தாமந்தாகினிஆஹ்னவிவிஷ்ணுகங்கா ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

இப்படி இன்னும் பல ஐந்து நதிகளை பஞ்ச கங்கா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

இதிலிருந்தே கங்கையின் மகத்தான புனிதம் நன்கு வெளிப்படுகிறது.

4. கோதாவரி

ஆரணிய காண்டத்தில் ஐந்தாவது படலமாக அமைவது சூர்ப்பணகைப் படலம்.

இதில் முதல் பாடலே கோதாவரியின் பெருமையைப் பேசுகிறது.

கோதாவரி நதியை கவிச் சக்கரவர்த்தி கம்பன், சான்றோர் கவிக்கு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாடல் இது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

பாடலின் பொருள் ;

பூமிக்கு ஓர் அலங்காரமாய், சிறந்த பொருள்களைக் கொடுத்து, அறிவினிடத்ததாய் (வயல்களுக்கு உரியதாய்), அமைந்த அகப்பொருளிலக்கணத் துறைவகைகளை உடையதாய், (வெப்பந்தணியத் தக்க இடத்தை உடைய நீராடு துறைகளை உடையதாய்) ஐந்திணை நெறி அளாவி – ஐந்து திணைகளின் இலக்கணத்தைத் தழுவி  (ஐவகைகளின் நிலங்களின் வழியைச் சேர்ந்து), சவி உற தெளிந்து – செவ்வையாகத் தெளிந்து தண் என்ற ஒழுக்கமும் தழுவி – குளிர்ச்சியான நல்லொழுக்கத்தையும் கொண்டு, (குளிர்ச்சியாயப் பெருகும் தன்மையை உடையதாய்) சான்றோர் கவி என கிடந்த – சான்றோர் செய்த கவி போலப் பொருந்தி உள்ள கோதாவரியினை – கோதாவரி நதியை வீரர் கண்டனர்.

பலவகை அலங்காரம் கொண்டிருத்தல், உலகில் உயர்ந்தோரால் கொண்டாடப்படுதல், சிறந்த அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருளை உணர்த்துதல், தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை விளைத்தல், அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்யச் செய்ய நன்கு புலப்படும் ஆன்ற பொருளை அறிவுக்கு உரியதாதல், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருளின் பகுதியாகிய அகம், புறம் என்ற இரண்டில் அகத்தில் களவு கற்பு என்னும் ஒழுக்கங்களைக் கூறுதல்,குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்தின் ஒழுக்கங்களைக் கூறுதல், விளங்க வைத்தல் என்னும் அழகை முழுதுமாகத் தருதல், தண் என்று நல்லொழுக்கத்தை உணர்த்துதல் என இப்படி கவிதையின் சிறப்பைக் கூறி அது அப்படியே பெருகி ஓடும் கோதாவரி நதிக்கு ஒப்பிடுவது  மிக்க சிறப்புடையதாகும்.

கோதாவரி நங்கை இராமன் முதலியோர் வருவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். தெய்வ நதியான அவள் தனது தாமரை போன்ற முகம் மலர தனது அலைகளான கைகளால் பூக்களை வாரித் தூவி அவர்களை வணங்குகிறாள்.

இதை இரண்டாம் பாடல் விவரிக்கிறது:

“வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய வாசம்

உண்டுறை குவளை யொண்கணொருங்குற நோக்கி ஊழின்

தெண்டிரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவி”

என்று கூறுகிறான் கம்பன்.

இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல, சீதை பல பொருள்களைப் பார்த்து இரங்கிப் புலம்புகிறாள்.

சீதை கோதாவரியைப் பார்த்து

‘கோதாவரியே குளிர்வாய் குழைவாய்

மாதாவனையாய் மனனே தெளிவாய்

ஓதாதுணர்வாருழையோடினை போய்

நீதான் வினையேனிலை சொல்லலையோ

என்கிறாள்.

கோதாவரி நதி இயல்பாகக் குளிர்ந்துள்ளது.

உள் நெகிழ்ச்சி உடையது. ஆகவே அன்னை போன்றது. அகம் தெளிந்துள்ளது.

இப்படிப்பட்ட அரும் நதியிடம் தன் நிலைமையைப் பற்றிக் கூறுமாறு சீதை வேண்டுகிறாள்.

ஆக கம்பனின் கவித் திறம் கோதாவரியை வர்ணிக்கும் போது உச்சகட்டத்தை அடைகிறது.

ஏனெனில் கவிதையின் இலக்கணத்தையும் கோதாவரியை காரணமாக வைத்துச் சொல்லி விடுகிறான் இல்லையா?!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: