
Post No. 11,530
Date uploaded in London – 11 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாள். சிறப்புக் கட்டுரை!
பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 8 மற்றும் 9வது பாடல் : ஒரு பார்வை!
ச.நாகராஜன்
முந்தைய கட்டுரைகளின் தொடர்ச்சியாக தொடர் எண் 124லிருந்து தரப்படுகிறது.
பாரத மாதா பாடல்
124) முன்னர் இலங்கையில் இருந்த அரக்கர் அழிவு பட அவர்களை முடித்த வில் யாருடையது? அது எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்.
125) இந்திரசித்தனை இரண்டு துண்டாக ஆக்க எடுத்த வில் யாருடைய வில்? அது எங்கள் மந்திர தெய்வம் பாரத ராணியான வயிரவியின் வில்.
126) ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்: உலகம் இன்பக் கேணி என்று நல்ல வேதம் வரைந்த கை பாரத நாயகியின் திருக்கை.
127) ‘இவ்வுலகம் சித்த மயம். நம் சித்தத்தில் உறுதி ஓங்கி விட்டால் துன்பம் அத்தனையையும் வெல்லலாம்’ என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல்.
128) சகுந்தலை பெற்ற சிங்கப் பிள்ளையை தட்டி விளையாடி நன்று உகந்த பிள்ளையானவன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளையாகும்.
129) காண்டிவம் வில்லினை ஏந்தி உலகினை வென்ற கல்லொத்த தோள் யாருடைய தோள்? எம்மை ஆண்டு அருள் செய்து பெற்று வளர்ப்பவளான ஆரிய தேவியின் தோள்!
130) சாகும் பொழுது கொடையாக இரு செவி குண்டலங்களை கொடுத்த கொடைக் கை எவருடையது? சுவையான பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கையாகும்.
131) போர்க்களத்தில் பர ஞான மெய் உரைக்கும் கீதை புகன்றது எவருடைய வாய்? பகையைத் தீர்க்கத் திறந்தரு பேரினளாம் பாரத தேவியின் மலர் போன்ற திரு வாயாகும்.
132) ‘தந்தை இனிதுறந்தான்; அரசாட்சியும் தையலர் உறவும் இனி இந்த உலகில் விரும்ப மாட்டேன்’ என்றது எம் அன்னை செய்த உள்ளமாகும்.
133) ‘அன்பு சிவம்; உலகத்தில் உள்ள துயர் யாவையும் அன்பினால் போகும்’ என்று இங்கு முன்பு மொழிந்து உலகை ஆண்டவன் புத்தன். அவன் மொழி எங்கள் அன்னை மொழியாகும்.
134) மிதிலையே பற்றி எரிய அப்போது வேதப் பொருளை வினவுகின்ற சனகனின் மதியானது தன் மதியில் இருப்பதைக் கொண்டு நின்று முடிக்க வல்ல நம் அன்னையின் மதியாகும்.
135) தெய்வீக சாகுந்தலம் என்னும் நாடகத்தை செய்தது யாருடைய கவிதை? அயன் செய்வது அனைத்தையும் குறிப்பால் உணரும் பாரத தேவியின் அருள் கவிதையாகும்.

எங்கள் தாய் பாடல்
136) ஆதி காலத்திலிருந்து நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்திடும் அனைத்துக் கலையும் அறிந்த நிபுணர்களும் கூட இவள் என்று பிறந்தவள் என்பதை உணர முடியாத படி இருக்கும் இயல்பினைக் கொண்டவள் எங்கள் தாய்!
137) யாருமே கூறுவதற்கு அரிதான வயதினை உடையவள் எங்கள் தாய். இந்த உலகில் எந்த நாளும் ஒரு கன்னிகையாக இருப்பவள் எங்கள் தாய்!
138) முப்பது கோடி முகம் கொண்டவள் என்றாலும் கூட உயிர் ஒன்றே எனக் கொண்டவள்; இவள் செப்பும் மொழிகள் பதினெட்டு; எனில் சிந்தனை ஒன்றையே கொண்டவள்.
139) நாவினில் வேதத்தைக் கொண்டவள். கையில் நலம் தரும் வாளை உடையவள்; தன்னை அண்டியவருக்கு இன்னருள் செய்பவள்; ஆயின் தீயர் என்றால் அவர்களை அழிக்கும் தோளை உடையவள் ஆவாள்.
140) அறுபது கோடி தடக்கைகள் கொண்டு அறங்களை நடத்துபவள் எங்கள் தாய். தன்னை வெல்வதற்காக போரிட வருபவரை துகள் துகளாக்கி கீழே கிடத்துவள் எங்கள் தாய்!
141) பூமியை விட அதிக பொறுமையைக் கொண்டவள் எங்கள் தாய். பெறுகின்ற புண்ணிய நெஞ்சினைக் கொண்டவள். என்றாலும் தவறு இழைப்பவர் முன் துர்க்கை அனையவளாகத் திகழ்வாள் எங்கள் தாய்!
142) கற்றைச் சடைமதி கொண்டு இருக்கும் துறவியை கை எடுத்துத் தொழுவாள் எங்கள் தாய். கையில் ஒரு சக்கரத்தைக் கொண்டு ஏழு உலகத்தையும் ஆளும் ஒருவனையும் அவள் தொழுவாள்.
143) யோகத்திலே நிகரற்றவள். உண்மையும் ஒன்றே தான் என்பதை நன்கு அறிவாள். உயர் போகத்திலும் அவள் நிறைந்தவள். எண்ண முடியாதபடி அரும் பொன் குவியலைத் தன்னுடையதாகக் கொண்டவள் அவள்.
144) நல்லறம் நாடி அதன் படி நடக்கும் மன்னரை வாழ்த்தி அவர்களுக்கு நலம் புரிவாள். அப்படி அல்லவர் எனில் அவரை விழுங்கி,, பின்னர் ஆனந்தக் கூத்தாடுவாள்.
145) வெண்மை நிறத்தைக் கொண்ட வளர்கின்ற இமயாசலன் தந்த விறன் மகள் எங்கள் தாய். ஒருவேளை இமயத் திண்மை குறைந்தாலும் கூட ஒருபோதும் தான் மறைய மாட்டாள். நித்தமும் சீரைக் கொண்டிருப்பாள் எங்கள் தாய்!
***