
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,538
Date uploaded in London – 13 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 2
ச.நாகராஜன்
உவமைகளை அடுக்குவதில் தான் ஒரு கவிஞனின் சாமர்த்தியம் ஒளிரும். ஆண் :மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
நீதிக்குப் பின் பாசம் படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலில் உவமைகளின் அடுக்கைப் பார்க்க முடிகிறது. வில்லிப்புத்தூரார் தனது ஒரு செய்யுளில் பல உவமைகளை அடுக்குவது வழக்கம். அதே போல கண்ணதாசனும் திறம்பட உவமையின் சிகரத்தில் ஏறி அமர்கிறார்.
கம்பனை விமரிசிப்பதற்காக கம்பனைப் படிக்க ஆரம்பித்த கவிஞர் அவனது ‘எல்லையொன்றின்மை’ என்று பாரதி வியந்த அதே INFINITY தன்மையை அவனது கவிதைகளில் கண்டு வியந்தார். அவனைத் தனது மனதிலே இருத்தினார். சொற்களிலே தோய்த்தார்; கருத்துக்களிலே வார்த்தார்.
எடுத்துக்காட்டிற்காகசொல் விளையாட்டுப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
கம்பன் பாடினான் இப்படி:-
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ? மைவண்னத் தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்
கை வண்ணம் அங்கே கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்”
தாடகையை வதைத்த போது உன் வில் வண்ணம் கண்டேன். கல்லிலிருந்து அகலிகை எழுந்த இந்தச் சமயத்தில் உன் கால் வண்ணம் கண்டேன் என்கிறார் விஸ்வாமித்திரர்.
இப்படி ஒரு வண்ணத்தைக் கம்பன் காட்டியவுடன் தன் கை வண்ணத்தை கவியரசு பாசம் படத்திலே காட்டுகிறார் இப்படி:
‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்!
கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’
கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா
மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!
சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் மட்டுமா வண்ணம் கண்டு மகிழ்கிறார்கள். காலத்தை வென்று இன்றும் தமிழ் மக்கள் கண்ணதாசனின் பாடல் வண்ணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள்
To Sophia என்ற கவிதையில் ஷெல்லி கூறும் வார்த்தைகள் இவை :
Thy Deep Eyes A Double Planet. ஷெல்லிதாசனாக மிளிர்ந்த மஹாகவி பாரதி “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணமா, சூரிய சந்திரரோ” என்றான்.
ஆகப் பெரும் உயரிய மனங்கள் இடத்தாலும் காலத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் கருத்தால் ஒன்றோடு ஒன்று இணையும்; ஒன்றை விட இன்னொன்று விஞ்சும்.
இதையே கண்ணதாசன் கவிதைகளிலும் காண்கிறோம். ஆங்கிலக் கவிஞர்கள், பாரசீகக் கவிஞர்கள், வடமொழிக் கவிஞர்கள் என்று பலரைச் சுட்டிக் காட்டலாம். தீயினில் அகப்பட்ட தீ என்பான் ஆதிகவி வால்மீகி. தீயே உன்னைத் தீயில் போட்டு வாட்டோமோ என்பான் கண்ணதாசன்.
தமிழின் ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான்.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!
ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.
தமிழின் சிறப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அருட்பிரகாச வள்ளலார் தமிழ் பற்றி அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க வேண்டும்.
தமிழ் மொழியில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற பரம்பரைச் சொத்து! தமிழ்ச் சொத்து!
எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.
கற்கக் கசடற – குறள் 391
செய்க பொருளை – குறள் 759
உண்ணற்க கள்ளை – குறள் 922
நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241
பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.
அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.
வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;
அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!
இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.
கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; நேரம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாழிய செந்தமிழ்!
சுடரே போற்றி!
விதியே வாழி!
செய்க தவம்!
சாகாவரம் அருள்வாய்!
வந்தேமாதரம் என்போம்!
நெஞ்சு பொறுக்குதிலையே!
ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள இப்படிப்பட்ட உவமைகளைக் காண்பது அரிது!
இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.
கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல். கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!
கலங்காதிரு மனமே! – நீ
கலங்காதிரு மனமே! – உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே!
அடுத்து சில பாடல்களையும் படங்களையும் பார்ப்போம்!
தொடரும்