
Post No. 11,539
Date uploaded in London – 13 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
ARAPPALISURA SATAKAM VERSES 20 AND 21 ON LAKSHMI AND HER ELDER SISTER
20. திருமகள் இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்
நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
நாகரிகர் மாமனை யிலே,
நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
நறைகொண்ட பைந்துள விலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
கல்யாண வாயில் தனிலே,
கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
கதிபெறு விளக்க தனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
பொய்யாத பேர்பா லிலே,
பூந்தடந் தன்னிலே, பாற்குடத் திடையிலே
போதகத் தின்சிர சிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அண்ணல் – தலைவனே!, எமது………..தேவனே!, நல் பரி
முகத்தில் – அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் –
அரசரின் இடத்திலும், நாகரிகர் மாமனையில் – நாகரிகம் அறிந்தவர்களின்
வீட்டிலும், நளின மலர் தன்னில் – தாமரை மலரிலும், கூவிளந் தருவில் –
வில்வ மரத்திலும், நறைகொண்ட பைந்துளவில் – மணமுடைய பசிய
திருத்துழாயிலும், கற்புடையர் வடிவில் – கற்புடைய மங்கையரின்
வடிவத்திலும், கடலில் – கடலிலும், கொடியில் – துகிற்கொடியிலும்,
கல்யாணவாயில் தனில் – திருமண வீட்டின் வாயிலிலும், கடிநகர் இடத்தில்
– காவலுடைய நகரத்திலும், நல்செந்நெல் விளைவில் – நல்ல செந்நெல்
விளைவிலும், கதிபெறு விளக்கதனில் – ஒளிவீசும் விளக்கிலும், பொற்பு
உடைய சங்கில் – அழகுறும்சங்கிலும், மிக்கோர்கள் வாக்கில் – பெரியோர் மொழியிலும், பொய்யாத
பேர்பாலில் – பொய் மொழியாதவரிடத்திலும், பூந்தடந்தன்னில் – மலர்ப்
பொய்கையிலும், பாற்குடத்திடையில் – பாற் குடத்திலும், போதகத்தின்
சிரசில் – யானையின் தலையிலும், அல்பெருங்கோதை மலர்மங்கை
வாழ்இடம் என்பர் – இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும் இடம் என்பர் அறிஞர்.
நீண்ட பட்டியல் ; எளிய தமிழ்; விளக்கமே தேவை இல்லை . பல வீடுகளில் வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்திருப்பதற்கும், தோட்டத்தில் வில்வ மரம், துளசி மாடம் வைத்திருப்பதற்கும் இப்போது காரணம் தெரியும் .
தாமரை மலர் கொண்டு தேவியரை பூஜிக்கவேண்டும். கற்புடைய மங்கையரைப் போற்ற வேண்டும். சினிமாக்காரிகளை அல்ல..
மூ தேவி வசிக்கும் இடங்களை அறிந்து தவிர்க்க வேண்டும் இதே கருத்தை வேறு புலவர்கள் எப்படி விளம்புகிறார்கள் என்று ஒப்புநோக்குவோம்.
XXXXX
21. மூதேவி இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்
மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
மிகுபாடையோர் இடத்தும்,
மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்
மிக்க பாதகரிடத்தும்,
கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோர் இடத்தும்
கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
கன்னி வாழ் மனைஅகத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
சார்ந்த ஆட்டின் திரளிலும்
சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி
தவ்வை வாழ் இடம் என்பர் காண்!
அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்
அழகன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
(இ-ள்.) அதிரூப மலைமங்கை நேசனே – பேரழகுடைய
மலைமகளின் கணவனே! மோழை தரும்அழகன் – மோழையென்பான்
பெற்ற அழகனான, எமது…………தேவனே!, அன்னம் மிதம் இன்றிப்
புசிப்போரிடத்திலும் – சோற்றை அளவின்றி உண்பவரிடத்திலும், மிகு
பாடையோரிடத்தும் – மிகைபடப் பேசுகின்றவரிடத்திலும், மெய் ஒன்று
இலாமலே பொய் பேசியே திரியும் மிக்க பாதகரிடத்தும் – ஒரு மெய்யும்
கலவாமல், எப்போதும் பொய்யையே கூறியலையும் மிகவும்
கொடியவரிடத்திலும், கதியொன்றும் இலர்போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோரிடத்தும் – சிறிதும் வழியற்றவரைப்போலக் கிழிந்த
பழைய கந்தையை உடுப்பவரிடத்திலும், கடி நாய் எனச் சீறி எவரையும்
சேர்க்காத கன்னிவாழ் மனையிடத்தும் – கடிக்கின்ற (வெறி) நாய்போலச்
சினந்து பேசி ஒருவரையும் அணுகவிடாத பெண்ணொருத்தி வாழும்
இல்லத்திலும், ததிசேர் கடத்திலும் – தயிர்ப்பானையிலும், கர்த்தபத்
திடையிலும் – கழுதைகளின் குழுவிலும், சார்ந்த ஆட்டின் திரளிலும்
– கூடிய ஆட்டுமந்தையிலும், சாம்பிணம் முகத்திலும் – இறந்த பிணத்தின்
முகத்திலும், இவையெலாம் கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் –
இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று
அறிஞர் கூறுவர்.
கற்புள்ள பெண்களுக்கு நேர் எதிரி= வீட்டிற்குள் எவரையும் வரவிடாமல் எரிந்து விழும் பெண்கள். கணவனைத் திட்டும் பெண்கள் = கழுதை =ஆட்டுமந்தை= கந்தலாடை தரித்திரன்= பிணம்= பொய்யன்= வாயாடி= வயிறா வண்ணான் தாழியா என்று வியக்கும் வண்ணம் சாப்பிடும் சாப்பாட்டு ராமன்கள்= மூதேவி
XXX
பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்
கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை
நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது
நிற்பிட நல்லோர் நெஞ்சுமே
–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்
பொருள்
லெட்சுமி வசிக்கும் இடங்கள்:- பதுமம்= தாமரை; கொடி – த்வஜம்; நகர் = நகரம்; மின் = மின்னல் ஒளி; பைந்துளவு = பச்சைத் துளசி; வில்வம் = வில்வம்; கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்; சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு);; கடல் = சமுத்திரம்; தீபம் = விளக்கு; வதுவை மனை = கல்யாண வீடு; நற் பரி = நல்ல குதிரை; பால் பாண்டம் = பால் பொங்கும் பானை. இவை = இவை எல்லாம், நாண்மலராள் = மஹலெட்சுமி, நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம். நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)
xxxx
பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது.
ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா
கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா
கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்
பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா
பொருள்
மஞ்சள் பூசிக் குளிப்பது
குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது
கண்ணுக்கு மை தீட்டுதல்
ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)
காது, மூக்குகளில் நகை அணிதல்
வாரின தலை
முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்.
Xxx
இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்
யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி
தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா
எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி, கோலமிட்டு அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.
அது என்ன பூரண கலை?
நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.
Xxxx
: புறநானூறு தகவல் (Post No.3560)
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
பொருள்:
இந்தப் பாட்டில் பல சுவையான செய்தி-
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.
Xxxx
முகடி= தவ்வை= மூதேவி= Lakshmi’s Elder Sister=Alakshmi
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே
–விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது
xxxxx

செய்யாள், தவ்வை பற்றி வள்ளுவன் (from S Nagarajan’s post in my blogs)
திரு எனப்படும் லக்ஷ்மி தேவி
குறள் எண்கள் 179, 519, 617, 920
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்
திறன் அறிந்தாங்கே திரு (குறள் 179)
அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு (குறள் 519)
தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள் (குறள் 617)
தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)
இருமனப் பெண்டிர் என்றால் பொது மகளிர் – வேசிகள்! பொது மகளிர், கள், சூது ஆகிய இந்த மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் தொடர்பு ஆகும்.
Xxx
குறள் எண்கள் 617, 936
குறள் 617ஐ மேலே கண்டோம்.
அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப் பட்டார்
சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.
செய்யவளும் தவ்வையும்!
லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.
இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
—- subham—-
Tags லெட்சுமி , பற்றி, வள்ளுவன், அம்பலவாணர் , அறப்பளீசுர சதகம், புறநானூறு, செய்யாள், தவ்வை, மூதேவி , உவமான சங்கிரகம், வசிக்கும் இடங்கள்