
Post No. 11,548
Date uploaded in London – 15 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxx
குறைந்தாலும் பயன்படல்
Arappalisura satakam Verse 23
தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்
சார்மணம் பழுதா குமோ!
தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு
சாரமது ரங்கு றையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்
நீள்குணம் மழுங்கி விடுமோ?
நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
நிறையுமாற் றுக்கு றையுமோ?
கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு
கதிர்மதி கனம்போ குமோ?
கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனிற்போ குமோ?
அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
—அறப்பளீசுர சதகம் by அம்பலவாணர்
(இ-ள்.) அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே –
அறிவுடையோரைப் பிரிந்து செல்லாத தலைவனே!, ஐயனே – முதல்வனே!,
அருமை………..தேவனே!, தறிபட்ட சந்தனக்கட்டை பழுதாயினும் சார்
மணம் பழுது ஆகுமோ – வெட்டப்பட்ட சந்தனக்கட்டை குறைபட்டாலும்
அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ?, தக்க பால் சுவறிடக்
காய்ச்சினும் அதுகொண்டு சார்மதுரம் குறையுமோ – நல்ல பால் வற்றிடக்
காய்ச்சினாலும் அதனாலேயே அதனிடம் உள்ள சாரமான இனிமை
வற்றுமோ?, நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்
நீள்குணம் மழுங்கிவிடுமோ – நிறைந்த பேரொளியை உடைய மணி
அழுக்குப்பட்டாலும் அம் மணியின் உயர்ந்த ஒளிப்பண்பு
குறைந்துவிடுமோ?, நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்
நிறையும் மாற்றுக் குறையுமோ – பொன்னை நெருப்பிலே உருக்கினாலும்
(தகடாக) அடித்தாலும் அதனிடம் நிறைந்த மாற்றுக் குறைந்துவிடுமோ?,
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு கதிர்மதி கனம்
போகுமோ – கருமைபொருந்திய கார்முகிலானது ஞாயிற்றையும்
திங்களையும் மறைத்தாலும் அக்காரணத்தால் அவற்றின் பெருமை
கெடுமோ?, கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும் காசினிதனில்
போகுமோ – படித்த பெரியோரின் மேன்மையை அறிவிலார்
அறியாவிட்டாலும் அதனால் உலகிலே அவர் பெருமை நீங்குமோ?
(வி-ரை.) பசுமை + புயல் – பைம்புயல். பசுமை இங்குக்
கருமையையே உணர்த்தும், பசுமை நிறமுடைய முகிலே இல்லாமையால்.
இறைவன் வடிவம் அறிவே ஆகையால் அவர், ‘அறிவுற்ற பேரைவிட்டு
அகலாத மூர்த்தி’ ஆனார். கதிர் – ஞாயிறு, மதி – திங்கள்.
(க-து.) சான்றோர் பெருமை அற்பரால் அழிவுறாது.
Xxxx

ஒப்பிடுக:
அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை
அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்
வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்
கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் – வாக்குண்டாம்
Xxx
ஒப்பிடுக:
பர்த்ருஹரி நீதி சதகம்
பாடல் 63
விபதி³ தை⁴ர்யம் அதா²ப்⁴யுத³யே க்ஷமா
ஸத³ஸி வாக்யபடுதா யுதி⁴ விக்ரம: ।
யஶஸி சாபி⁴ருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ
ப்ரக்ருதிஸித்³த⁴ம் இத³ம் ஹி மஹாத்மனாம் ॥ 1.63 ॥
विपदि धैर्यं अथाभ्युदये क्षमा
सदसि वाक्यपटुता युधि विक्रमः ।
यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ
प्रकृतिसिद्धं इदं हि महात्मनाम् ॥ 1.63 ॥
தாழ்வு வரும்போது திட உறுதி;
வாழ்வு வருகையில் அடக்கம், பணிவு;
அறிஞர் சபையில் வாக்கு வன்மை ;
புகழில் விருப்பம்;போரில் துணிவு;
கற்பதில் பேரார்வம் ; இவையே அறிஞற்கு இலக்கணம்
XXX
பாடல் 66 பர்த்ருஹரி நீதி சதகம்
सम्पत्सु महतां चित्तं
भवत्युत्पलकौमलम् ।आपत्सु च महाशैलशिला
सङ्घातकर्कशम् ॥ 1.66 ॥
ஸம்பத்ஸு மஹதாம் சித்தம்
ப⁴வத்யுத்பலகௌமலம் ।ஆபத்ஸு ச மஹாஶைலஶிலா
ஸங்கா⁴தகர்கஶம் ॥ 1.66 ॥
உயர்வு வருகையில் நல்லோரின் இதயம் தாமரை இதழ் போல மென்மையாவும்
துன்பம் வருகையில் மலைப் பாறை போல கடினமான உறுதியுடனு ம் இருக்கும்
XXX
மேலும் சில ஸம்ஸ்க்ருத பொன்மொழிகள்/ சுபாஷிதங்கள்
சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்
ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்
பெரியோரின் குணமும் அப்படித்தான்.
Xxxx
ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்
ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்
தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை
ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்
Xxx
அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்
இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.
ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல
Xxxx
SAIVAITE SAINT MURTHY NAYANAR USED HIS HANDS TO MAKE SANDAL PASTE

.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா
கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்
(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச் செல்வர்)
——subham——
Tags–அறப்பளீசுர சதகம், அம்பலவாணர், சந்தனம் , அரைத்தாலும், குறைவுபடாதவை, மேன்மக்கள், பர்த்ருஹரி , நீதி சதகம்