
Post No. 11,550
Date uploaded in London – 16 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 5
ச.நாகராஜன்
கவியரசு கண்ணதாசன் பன்மொழி விற்பன்னர் என்பது பலருக்கும் தெரியாது.
அவர் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?
கேள்விகள் நியாயமானவை தான்.
ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கவிதை இது:
“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்
திணறுகிறான்!
அத்திம் பேரும்
பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்
பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”
– தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்
–
ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:
“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”
“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”
அவர் எழுதிய வடமொழிப் பாடல் இது:
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்
சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்
ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை! மிகச் சிறந்த சம்ஸ்கிருத கவிஞர்களையும் புறம் தள்ளி விடும் சொல் ஜாலங்களும் அர்த்த கோலங்களும் கொண்ட அழகிய பாடல் இது!
‘கடவுளே, இன்னும் சிறிது காலம் என்னை வாழவிட்டால் ஆங்கிலத்தில் ஒரு காவியமும் சம்ஸ்கிருதத்தில் ஒரு காவியத்தையும் படைப்பேன்’ என்று எழுதினார் அவர்.
சமயத்திற்கேற்றபடி உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் அவர்.
‘அடடா இது என்ன கண்ணா, இவள் அந்தர லோகத்துப் பெண்ணா’ என்று அவர் கூறிய போது மகிழ்ந்தது நடிகையர் திலகம் சாவித்திரி மட்டுமல்ல; முழு தமிழகமுமே மகிழ்ந்தது.
இசைஞானி இளையராஜா அற்புதமாக தனது கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-
“இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதே ‘அருண் பிரசாத் மூவிஸில்’ எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளிக்கு’ப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணு’ என்ற பாடலில்,
“வா, ராஜா, வா!”
என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.
கண்ணதாசனின் சொல் விளையாட்டு அபூர்வமான ஒன்று.
‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படிச் சொல்வேனடி?!’
பாவ மன்னிப்பு படத்தில் சாவித்திரியும் தேவிகாவும் இணையும் காட்சியில் இடம் பெறும் இப்பாடல் எத்தனை ஆயிரம் பெண்களின் மனங்களில் என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்தியதோ! இளம் பெண்களின் மனதை வருடும் பாடலுக்கு மன்னன் கண்ணதாசன் அல்லவா! எப்படி சொல்வேனடி என்பதை இன்னொரு படத்தில் இன்னொரு பாடலிலும் சொல்லி விடுகிறார். மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் ‘என்னை நிலாவினில் துயர் செய்தான், அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்’ என்றார். இது போல அகத்துறையை விளக்கும் இன்னொரு பாடலை எந்த மொழியிலாவது காட்டுங்கள் பார்ப்போம். முடியவே முடியாது!
‘பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு! இந்தப் பிள்ளை, யாரு?!’
பாகப்பிரிவினை படத்தில் வரும் இந்தப் பாடலில், பிள்ளையார் என்ற வார்த்தை பிள்ளையாரையும் இந்தப் பிள்ளை யார் என்ற கேள்வியையும் எழுப்பும் சிலேடையை ரசிக்காமல் இருக்க முடியாது.
அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
காய்களை வைத்து சொல் விளையாட்டை நடத்தும் கவிஞரின் பாடலில் காய்ச்சீர் அருமையாக அமைந்திருப்பதையும் வியந்து ரசிக்கலாம்! எத்தனை காய்கள், எத்தனை அர்த்தங்கள்!! பலே பாண்டியா படத்தில் இடம் பெறும் இப்பாடலில் தேவிகாவும் சிவாஜி கணேசனும் காய்களின் இரு பொருள் அர்த்தங்களை விளக்கும் பாவமும் அதற்குக் கவிஞர் இடம் தந்திருப்பதையும் எந்தக் கால ரசிகர்களும் ரசிக்கலாம்!
சிவாஜி கணேசன் சொல்வாராம், கவிஞரின் பாட்டிற்குத் தக என் முகபாவமும் நடிப்பும் அமைய வேண்டுமே என்று!
தேன் சொட்டும் பாடல் ஒன்று வேண்டுமா? இதோ:
பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பாடல் முழுவதும் சிலேடை வார்த்தைகள்! வீர அபிமன்யு படத்தில் கவிஞர் சிலேடை பாடல் அமைப்பின் சிகரத்தில் ஏறி விடுகிறார்!
YOU TUBE LINK
https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –
கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.—நாகராஜன்
மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி பாடலுக்காக சுரங்களை அவரே அமைத்தார். இசை வளம் கொண்ட இசை மேதை அவர் என்பதை நிரூபித்தார்.
தொடரும்