
Post No. 11,556
Date uploaded in London – 17 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
வீடணன் அடைக்கலப் படலம்
விபீஷண சரணாகதி படலத்தில் கம்பனுக்கும் வால்மீகிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன .கண்வர் மகனான கண்டு மகரிஷி ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி அதையே தான் பின்பற்றப்போவதாக ராமபிரான் அறிவிக்கிறார் என்பது வால்மீகி சொல்லும் கதை
(நேற்றைய கட்டுரையில் விவரம் காண்க )
ஆனால் கம்பனோ, ராமபிரான் வாய் மூலமாக, விபீஷணனுக்கு முன்னர் சரண் அடைந்த 7 பேர் பட்டியலைத் தருகிறான் இரண்டு பேர் சொன்ன பாடல்களிலும் நமக்கு புதிய விஷயங்கள் கிடைக்கின்றன .
இன்னும் ஒரு வேறுபாடு, ராமனின் உறுதிமொழியில் காணப்படுகிறது..நான் உன்னவன் என்று யாரேனும் ஒரே ஒரு முறை சொன்னாலும் போதும் ; அவரைக் காப்பது என் விரதம் / கொள்கை என்று வால்மீகி ராமன் சொல்கிறான் . கம்பனிலோ இந்த உறுதி மொழி முன்னரே கிஷ்கிந்தா காண்ட சுக்ரீவன் சரணாகதியில் வந்து விடுகிறது . இதோ அந்த உறுதி மொழி
கிட்கிந்தா காண்ட நட்புக்கு கோட் படலத்தில் சுக்ரீவன் சொல்கிறான்
சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்
உடனே ராமன் சொல்கிறான்
என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்
சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன
நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.
பொருள்:- FRIENDSHIP TREATY BETWEEN SUGREEVA AND RAMA
நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-
1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்
2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை
3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்
4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்
5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே
6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).
7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்
எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!
Xxx
இப்போது யுத்தகாண்டத்துக்குச் செல்வோம் –
அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609)
மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்
‘பேர் அறிவாள! நன்று! நன்று!!’ எனப் பிறரை நோக்கிச்
‘சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்’என்ன
ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார். 6.4.104
அனுமன் சொன்னதே சரி . VERY, VERY GOOD வெரி,வெரி குட் என்று ஆரியன் ராமன் சொன்னான்
XXX
‘மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.
இனி உரைப்பதற்கு என்ன உண்டு? அனுமன் கூறிய ஆலோசனையே மேலான ஆலோசனை; வீடணனை ஏற்றுக் கொள்வதால் வெற்றியே உண்டாகட்டும்; நாம் தோற்கட்டும் அழியட்டும் அழியாது வாழட்டும்; – அபயம் என்று வந்தவனை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறேதும் உள்ளதோ?
XXXX
‘இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்றான்;
தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ? 6.4.107
நம்மிடம் அடைக்கலம் என்று கூறி வந்த இவன்;
இன்றுதான் வந்தான் என்று விலக்குதல் உண்டோ;
எனது தந்தையையும், தாயையும் முன்பு கொன்றுவிட்டு வந்த
ஒருவனானாலும் விலக்குவதுண்டோ; நம்மை நெருங்கி வந்து
நமக்கு அன்பு செய்கின்ற துணைவன் அவனே; பின்பு நம்மிடம் மாறுபடுவான் என்ற போதிலும்; இவனை ஏற்றுக்கொள்ளும் நமக்கு புகழ்தானே அல்லாது; வேறு பழி
உண்டாகுமோ?
XXX
1.முதல் சரணாகதி –புறா
‘பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என்று வாழ்கின்றானைத்
துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சி யாலே
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான். 6.4.108
பிறந்தநாள் முதலாக; ஒரு புறாவுக்காகத்தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ இல்லை அன்றோ? என்னை அடைக்கலம் என்று கூறி வந்து வாழ இருக்கும் இந்த வீடணன் செயல்களால்; நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; நான் என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன்கூறினான்.
XXX
இரண்டாவது சரணாகதி –சிவனிடம் தேவர்கள்
‘இடைந்தவர்க்கு”அபயம் யாம்” என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? 6.4.109
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய
நஞ்சுக்கு அஞ்சி நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று
கெஞ்சிய தேவர்களுக்காக; நஞ்சைத்தான் உண்டு, அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள்
கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து நொந்தவர்களுக்கு உதவவில்லை என்றால்; தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டுவந்தவர்களுக்குத் தரவில்லை என்றால்;
அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணைகாட்டி அருள் செய்யவில்லைஎன்றால்; அறத்தால் என்னபலன்? ஆண்மையால் என்ன பயன்?
XXX
மூன்றாவது சரணாகதி — வே டனுக்காக புறா செய்த தியாகம்
பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? 6.4.110
பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன் ஜோடியான தன்னையும் பிடிக்கவந்திருந்த வேடன் ஒருவனுக்கு; குளிர்காலத்தில்,
விறகு பொறுக்கி வந்து, வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப் போக்கி, அவனது பெரும்பசியைப் பார்த்து, அந்தத்தீயில் வீழ்ந்து தனது உடலையே அவனுக்கு உணவாகக் கொடுத்த ஒரு ஆண்புறா, பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை; வேதத்தைவிட மேலான தொன்றல்லவா?
XXXX
நாலாவது சரணாகதி — கஜேந்திர மோட்சம்
‘போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின்,
“ஆதி அம் பரமே! யான் உன் அபயம்!” என்று அழைத்த அந்நாள்,
வேதமும் முடிவு காணா மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி,
மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பு இலாதார்? 6.4.111
கஜேந்திரன் என்ற பெயர் கொண்ட யானை ஒன்று; தாமரைப் பொய்கையில் சினம் கொண்ட முதலை ஒன்று தனது காலைப் பற்றி இழுத்துச் செய்த போரிலே, ஆதி மூலமாயுள்ள பரம்பொருளே நான் உனது அடைக்கலம்; என்று அழைத்த அந்த நாளிலே; வேதங்களும் தேடி முடிவுகாண முடியாத மெய்ப்பொருளாகிய பரமன் வெளிப்பட்டு அந்த
முதலையைக் கொன்று யானைக்குற்ற துன்பத்தை மாற்றியருளினார் என்ற வார்த்தையை; அடியார்கள் என்றும் மறப்பார்களோ?
XXXX
ஐந்தாவது சரணாகதி — மிருகண்டு, மார்க்கண்டேயன்
‘நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு ஆளன்,”நாளும்
தஞ்சு”என, முன்னம், தானே தாதைபால் கொடுத்துச்,”சாதல்
அஞ்சினேன்; அபயம்!”என்ற அந்தணற்கு ஆகி, அந்நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ? 6.4.113
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் நஞ்சினால் நலியாதபடி
உண்டு கண்டத்திலே நிறுத்தி வைத்த, சிவபிரான்;
வாழ்நாள் குறைவாக தந்தையான மிருகண்டு முனிவருக்கு வரம் தந்தும்; சாவுக்கு அஞ்சினேன் நான் உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த; மார்க்கண்டனுக்கு அந்த நாளிலே உயிரைக் கவரவந்த எமனை விரட்டி ; வாழ்நாளை என்றும் பதினாறாக மாற்றிய சிவபெருமானுடைய பண்பைவிட; மேலானது வேறேதும் உண்டோ?
XXXX
ஆறாவது சரணாகதி – ஜடாயுவிடம் சீதை சரண்
“‘சரண் எனக்கு யார்கொல்?” என்று சானகி அழுது சாம்ப,
“அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தயெ்வ
மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ? 6.4.114
இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது, எனக்கு அடைக்கலமளித்துக் காப்பவர் யார் ? என்று கூறி, சீதா பிராட்டி அழுது சோர்ந்திருக்க, நான் உனக்கு அரணாக நின்று காப்பேன்; அஞ்சாதே என்று கருணை கொண்டு வந்து;
கொடியவனான இராவணன் வாளால் வெட்டிக்கொல்ல; , இராவணனுடன் போர் செய்து தெய்வீக மரணத்தை சடாயு பெற்றது; அது போலல்லாமல் நான் மாறுவது முறையல்லவே
XXXX
ஏழாவது சரணாகதி – ராமனிடம் முனிவர்கள் சரண்
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,
மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார். 6.4.115
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும் நன்றி மறந்தவனும்; சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்; உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.
‘சீதையைக் குறித்த தேயோ,”தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வென்”என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர்,”அபயம்” என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ? 6.4. 116
தேவர்களைத் துன்புறுத்திய இராவணனை; கொல்வேன் என்று
நானே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த விரதத்தின் தன்மை; சீதையை மீட்டு வருவதற்கு மட்டுமல்ல; அரக்கனிடமிருந்து பாதுகாப்பு கோரி ,அந்தணர்கள் சரணடைந்தபோது நான் அஞ்சல் என்று கூறிய அந்தச் சொல்லை நான் மீறலாமோ?

XXXX
ராமன் உறுதிமொழி
6608. ‘காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா? 6.4.117
நாம் எடுத்த காரியம் முற்றுப் பெறட்டும்; அல்லது முடியாமல் போகட்டும்; கருணையாளர்க்குரிய தன்மை என்னவென்றால் அடைக்கலம் என்று வந்தவனை
ஆதரித்துக் காப்பதே; அதைவிட மேலானதொன்று இல்லை.
கீழ் மக்களாயினும் தங்களைச் சரணடைந்தவர்களுக்கு; தங்களது
ஆருயிரைத் தந்து காத்த மன்னர்கள் தொகை எண்ணிலடங்காது .
‘ஆதலான்,”அபயம்” என்ற போதத்தே அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’என்றான். 6.4.118
ஆதலால் இவன் அபயம் என்று வந்த அந்தச் சமயத்திலேயே, அபயதானம் தருவதே நமக்கரிய கடமை என்பதை என்பாலுள்ள அன்பால் கூடாதென்று சொன்னீர்கள்; இனி இதற்கு மாறாக எண்ணுதற்கு வேறு என்ன இருக்கிறது? சூரிய குமாரனான சுக்கிரீவனே! குற்றமொன்றுமில்லாத இந்த வீடணனை; நீயே சென்று என்னிடம் அழைத்துக்கொண்டு வருக என்றான்.
—- subham —
Tags–சரணாகதி தத்துவம், விபீஷணன் , 7 சரணாகதிகள், ராமன் உறுதிமொழி, அடைக்கலம் , வீடணன்