
Post No. 11,554
Date uploaded in London – 17 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 6
ச.நாகராஜன்
1965ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் சிறிது மனத்தாங்கலால் அவரைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞரை ஆண்டவனே என்று அழைப்பது தான் வழக்கம். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கண்ணதாசனைத் தவிர வேறு யாரும் பாடலை எழுத முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெதுவாக எம்.ஜி.ஆரிடம் இதைத் தெரிவித்த போது ஆண்டவன் இந்தப் பாடலை எழுதுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றவர் அவரையே அழைத்தார்.
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் என்ற பாடல் மலர்ந்தது. உலகையே மகிழ்வித்தது!
பின்னால் ஒரு காலத்தில் முதல் அமைச்சர் எம் ஜி ஆரிடமிருந்து கவிஞருக்கு ஒரு போன் வந்தது. “ஆண்டவனே! நான் சொல்வதற்கு நோ என்று சொல்லக் கூடாது என்ற கண்டிஷனுடன் ஆரம்பித்தார் எம் ஜி ஆர். உங்களை அரசவை கவிஞராக அனவுன்ஸ் செய்யப் போகிறேன்.” என்றார் அவர். கவிஞர் மாபெரும் கூட்டத்தில் மனம் நெகிழ்ந்து பேசினார். அவர் கண்கள் கசிந்தன!
இதயக் கமலம் படத்தில் ஒரு பாடல்:
மலர்கள் நனைந்தது பனியாலே என்ற அந்தப் பாடலில் கடைசி வரிகளில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார் கவியரசர்.
இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரென்னும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி! என்று முடிந்தது பாடல்.
ஆழ்வார்கள் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாகவும், வையம் தகளியாய் வார்கடலே நெய்யாகவும், ஏற்றிய விளக்கு நம் நினைவிலே வந்து கண்ணதாசன் ஏற்றி வைக்கும் விளக்கு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
கேள்வி-பதில் பாணியில் அவர் ஒரு புதிய பிரமாண்டத்தை சிருஷ்டித்தார்.
நதி எங்கே போகிறது? கடலைத் தேடி!
நாள் எங்கே போகிறது? இரவைத் தேடி!
நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!
நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி!
இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நல்ல அழகிய கேள்வி-பதில் பாடல்கள் உடனடியாக நம் நினைவுக்கு வரும்.
கன்னத்தில் என்னடி காயம்? இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு – பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு’
மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம்?
கண் காட்டுவதென்ன ஜாலம்? தலைவி தலைவனிடம் பெற்ற இன்பத்தை மாற்றிக் கூறி காதல் இன்பத்தை மேலும் மெருகூட்டிக் கொள்வது கண்ணதாசன் செய்யும் ஜாலம்!
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்!
இது இன்னொரு உருக்கமான ரகம்.
ஒரு படத்தின் முழு சாரத்தையும் ஒரு பாடலிலே தருவது அவர் வழக்கம். முந்தைய கால கவிஞர்களுக்குக் கிடைக்காத திரைப்பட யுகத்திலே கிடைத்த இந்த வாய்ப்பை கவியரசன் போலச் சிறப்பாகப் பயன்படுத்திய கவிஞர் இன்னொருவர் இல்லை.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார சின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
எனக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியினால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். அது ESP Power – EXTRA SENSORY PERCEPTION POWER! அதீத உளவியல் ஆற்றல் சக்தி தன்னிடம் இருக்கிறது என்பதை அவர் நிரூபித்த சம்பவங்கள் ஏராளம்.
சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடம் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.
“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.
“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து அவர் கேலி செய்யப்படுகிறார்.
ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்
1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன. மக்கள் தவிதவித்துப் போயினர்.
கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர்.
பாண்டிச்சேரியிலும் மழை இல்லை. ஒரே வறட்சி.
விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்ணனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”
அவர் வாக்கு பொய்க்கவில்லை.
வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.
பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாகச் செய்தி வந்தது!
இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
கவிஞரும் அதில் பங்கேற்றார்.
பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.
வான் முட்டும் கோபுரங்கள்
வானுக்குச் செய்தி சொல்வீர்!
தேன்முட்டும் இதழாள் சக்தி
தேவியைத் துயிலெ ழுப்பீர்!
கான்முட்ட மழைபொழிந்து
காவிரி பெருகி ஓடி
மீன்முட்டும் வெள்ளக் காடாய்
வியன் நிலம் ஆவதாக!
என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.
கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவதற்குள் அடை மழை கொட்டியது.
You tube link
https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –
கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.
நாகராஜன்
தொடரும்