
Post No. 11,559
Date uploaded in London – 18 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் 26
Arappalisura sataka verse 26 with my commentary
26. ஆகாதவை, அறப்பளீசுர சதகம்
உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி
உறவாடும் உறவும் உறவோ?
உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ
றுண்டவர்க் கன்னம் ஆமோ?
தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு
தக்கபயிர் பயிரா குமோ?
தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்
தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு
விருப்பமும் விருப்ப மாமோ?
வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
மிக்கசீ வனமா குமோ?
அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அள்ளாத இருங் கருணையாளனே – குறையாத
பேரருளாளனே!, தேவர் தொழும் ஆதியே – அமரர் வணங்கும்
முதல்வனே!, அருமை ………. தேவனே!,
உள்அன்பு இலாத பேர்
தித்திக்கவே பேசி உறவாடும் உறவும் உறவோ – மனத்திலே அன்பு
இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும் உறவாகுமோ?, அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு அன்னம் ஆமோ – அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, தள்ளாது இருந்துகொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ – ஊக்கமின்றி வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர் நல்ல பயன் தருமோ?, தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன்சென்றிடும் தானையும் தானை ஆமோ – படைத்தலைவன் ஒருவன் இல்லாமல் முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ? விள்ளாத
போகம் இல்லாத பெண்மேல் வரும் விருப்பமும் விருப்பம் ஆமோ –
பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும் ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? வெகு கடன்பட்டபேர் செய்கின்ற சீவனமும் மிக்க சீவனம் ஆகுமோ – மிகு கடன்
கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?
xxxx

இதை ஒப்பிட அவ்வையார் வாழ்வில் நடந்த சம்பவம் தனிப்பாடல் திரட்டில் உள்ளது.
அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட ஒரு ஆடவனுக்கு கருணை உள்ளம்;
ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென விளம்ப –வருந்தி
ஆடினாள் … பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.– தனிப்பாடல்கள்
XXXX
இரண்டாவது அதிர்ச்சி
அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,
அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.
வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று
பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்
XXX
அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே
தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன
செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.
XXX

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
XXXX
NO ENTRY BOARD AND ONE WAY TRAFFIC BOARD
ஒருதலைக் காமம் என்பது சாலையில் உள்ள ONE WAY TRAFFIC BOARD
ஒன் வே டிராஃபிக் போர்டு; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; இது NO ENTRY BOARD நோ எண்ட்ரீ போர்டு போன்றது. உள்ளே நுழைந்தால் தொல்லைதான் ; எல்லோரும் நடிகையையோ, பணக்காரியையோ மணக்க முடியாது.
XXXX
நட்பு என்பது பசப்பான சொற்கள் நிறைந்தது அல்ல–குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
XXX
Tags–அறப்பளீசுர , சதகம், மண்ணைவி, அன்பான , உணவு, போலி நட்பு, அவ்வையார், தனிப்பாடல்கள்