
Post No. 11,558
Date uploaded in London – 18 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 7
ச.நாகராஜன்
கண்ணதாசனை அறிவியல் ரீதியாகவும் பார்க்க முடியும்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் எந்தாய் போற்றி
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போறி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி
கர்ணன் படத்தில் வரும் இந்தப் பாடலைப் போற்றாதவர் கிடையாது.
முதல் வரியில் வேதக் கருத்தைத் தொட்டு ஆரம்பித்தவர் இறுதியில் அறிவியலில் முடிக்கிறார்.
சூரியன் எத்தனை பில்லியன் ஆண்டுகள்(ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஒளி தந்துள்ளான். ஒளி தரப் போகிறான். இந்த நானிலம் எத்தனை பில்லியன் ஆண்டுகள் இருக்கப் போகிறது. அறிவியல் ரீதியாக ஒரு பிரம்மாண்ட கணிதம் வருகிறது. அத்துணை ஆண்டுகள் நாம் சூரியனைப் போற்றுவோமாக என்கிறார் கவிஞர்.
ஆயிரம் வாசம் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்பதில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 40000 எண்ணங்களை எண்ணுகிறான் என்று அறிவியல் கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
சென்னையைச் சேர்ந்த நாஞ்சில் ஷா என்பவர் காப்பியங்கள் ஆர்த்து ஞாலத் தலைமேலே அமரப் போகும் சாதனை தான் எப்போ தென்பீர்
என்று ஒரு கேள்வியைகவிதையாகவே கேட்டார்.
அதற்கு கவிதையாகவே கவிஞர் பதில் கூறினார்!
அவரது பதில் இது:-
நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும் அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!
When troubles come to trouble you do not allow the troubles to trouble you but allow the troubles to trouble the trouble so that no trouble is free to trouble you; let not the troubles trouble let the troubles trouble the troubles என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதையே வள்ளுவர் 623வது குறளில்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் என்றார்.
துன்பம் நேர்ந்த போது அதற்காகத் துன்பப்படாதவர்கள் வந்துற்ற துன்பத்திற்கே துன்பத்தினை உண்டாக்கி வெற்றி காண்பார்கள் என்பது அவர் தரும் செய்தி.
பல துன்பங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டு ஜெயித்தவர் அவர்.
காலத்தைக் கடந்து வெற்றி பெற்றவர் தனது ஐம்பதாவது ஆண்டு பிறந்த நாளில் ஒரு சுயமதிப்பீட்டைச் செய்து கொள்கிறார்:
“ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு
ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு
ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து
பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”
என்றார். ஆனால் இறைவன் அவனது பாடல்களைத் தன்னருகே இருந்து கேட்க அவரை சீக்கிரமே அழைத்து விட்டான் போலும்.
தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் –நான்
பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.
ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.
‘அந்த நிலையினில்’ அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.
அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில் ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!
‘கண்களை மூடினாலும்’ காலமெல்லாம் ஜீவித்திருப்பதை ‘சிம்பாலிக்காக’ உணர்த்தி விட்டாரோ, என்னவோ!
அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார் இப்படி:
ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!
இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.
கவிதையின் கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:
காலம் வருமுன் காலனும் வருமுன்
காணும் உறவினர் கதறியே அழுமுன்
ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்
எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்
யானே யானாய் எனக்குள் அடங்கினேன்
வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?
ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவர் காலத்தை வென்ற கவிஞனாக ஒளிர்கிறார்.
You tube link
https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –
கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.
நாகராஜன்
அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்
தொடரும்
Ambi Iyer
/ December 18, 2022அருமை அருமை
Sent from my iPhone
Santhanam Nagarajan
/ December 19, 2022thanks
nagarajan