
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,562
Date uploaded in London – 19 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 8
ச.நாகராஜன்
பல துறைகளில் அவர் புகுந்தாலும் தமிழே அவரை வாழ வைத்தது; அவரைக் காலத்தை வென்று நிலையாக நிலைக்க வைத்திருக்கிறது.
அவரே இதைக் கூறுகிறார்:
ஜனநா யகம்என்னும் சந்தைக்கு நான் தந்த
சரக்குகள் விற்கவில்லை
தமிழ்நா யகம் என்னும் பெயரன்றி மற்றென்னைத்
தழுவுவார் யாருமில்லை
இனநா யகம்சாதிப் பணநா யகம்யாவும்
இயல்பாக வாழுமுலகில்
இருளூடு கண்கட்டித் தருமத்தை நான்தேடி
இதுவரை காணவில்லை
வனவாசம் போனபின் மனவாசம் அஞ்சாத
வாசத்தைத் தேடுமனமே!
மைதான விளையாட்டுப் பொய்யென்று கவிபாடு
வருங்காலம் உணரும்வனமே!
கண்ணதாசனின் இந்தக் கவிதை அவரது ஒப்புதல் வாக்குமூலம்.
காலம் வென்ற தமிழுடன் தன் தமிழால் காலம் வென்று நிற்பார் கவியரசர் கண்ணதாசன்!
கலங்காதிரு மனமே என ஆரம்பித்து கண்ணே கலைமானே என்று முடித்துத் தன் கவிதைப் பூமாலையைத் தமிழ் அன்னைக்குச் சமர்ப்பித்து முடித்துக் கொண்டார் கவிஞர்!
MY LIFE IS MY MESSAGE என்று கூறினார் மகாத்மா காந்திஜி. ஆனால் கவிஞரோ என் வாழ்க்கையை யாரும் பார்க்காதீர்கள்; எனது கவிதையைப் படித்து அதனைப் பின்பற்றுங்கள் என்றார்.
My poems are my messages என்பது அவர் வாக்கு!
ஒரு கவிஞன் என்பவன் யார் அவனது சக்தி என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் குடந்தை வேலன் என்னும் அற்புதக் கவிஞர். ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற அவரது கவிதை வரிகளில் சில :
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம் சட்டென ஓங்குது பார் – எழில் சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச் சிலிர்ப்பு கிளம்புது பார்
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா -யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட
சொற்கடம் ஞாலம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் + தம் எனப் பிரித்துப் படிக்க வேண்டும்)
இந்தக் கவிதைச் சித்தனின் இலக்கணத்தை வைத்துப் பார்க்கும் போது, சொற்களால் ஜாலம் செய்து ஞாலம் ஆள வந்த, வேதக் குயவன் படைத்திட்ட, கவியரசு கண்ணதாசனின் பூதவுடல் வீழ்ந்தே உடைந்தாலும் அவர் நாதக் குழம்பில் புனைந்திட்ட சொற்கள் என்றும் உலகை ஆளும் என்பதில் ஐயமுண்டோ!
புறநானூற்றுப் புலவர்களின் நெஞ்சாழமும், கம்பனின் கவித்துவமும், இளங்கோவின் இரு சொல் திறமையும், வில்லிப்புத்தூராரின் உவமைத் திறனும், பாரதியின் புதிய, எளிய தமிழின் நளின நடையையும், கையாண்ட கண்ணதாசன் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன். காலத்தை வென்ற கவிஞன்.
உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை என்ற தேசிகவிநாயகம் பிள்ளையின் இலக்கணத்தை மெய்ப்பித்தவர் கவிஞர்.
உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற பாரதியின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கவிஞர்.
தமிழிடமிருந்து கண்ணதாசன் பெற்றது அதிகம் என்றால் தமிழுக்குக் கண்ணதாசன் தந்தது அதை விட அதிகம் என்பது தான் சிறந்த ஒரு மதிப்பீடாக இருக்க முடியும்.
திரைத்துறையில் பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், நினைவுப் பாடல்கள், லட்சியப் பாடல்கள், வினா-விடை பாடல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குடிபோதைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள், ராகங்கள் கொண்ட பாடல்கள், இதிஹாஸ புராணப் பாடல்கள், தமிழின் பெருமை பற்றிய பாடல்கள், படகு, கார், குதிரை சவாரி பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், ஒரு சொல்லே பலமுறை வரும் பாடல்கள் போன்ற அனைத்தையும் எடுத்து ஆராய்ந்தால் அதில் கவியரசr கண்ணதாசனின் பெரும் பங்கும் அவர் தம் புலமையும் புலப்படும்.
நாள் தோறும் அவரது பாடலை கேட்கும் தோறும் அவருக்குச் சிரம் தாழ்த்தித் தமிழ் நெஞ்சங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றன!
இந்த உரையில் கண்ணதாசனின் கட்டுரைகள், நாவல்கள், கேள்வி-பதில், செப்பு மொழி பதினெட்டு, அவரது வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றைநேரத்தைக் கருதிச் சொல்லவில்லை. அவற்றையும் அன்பர்கள் படிக்க வேண்டும்
கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!
அங்கே ராமனும், கண்ணனும், தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.
காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.
பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!
தமிழர்களாகிய நமக்கு மாபெரும் கடமை ஒன்று இருக்கிறது.
கண்ணதாசனின் எழுத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். கவியரசு பற்றி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் கட்டுரையையும் நூலையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும்.
நூற்றுக் கணக்கான தலைப்புகளில் கவியரசைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.
அறிவியலில் கண்ணதாசன், தத்துவத்தில் கண்ணதாசன், அகத்துறையில், புறத்தில், பக்தி இலக்கியத்தில், வடமொழி இலக்கியத்தில், சந்த வகைகளில், கவினுறு சொற்களில், தமிழ் விந்தைகளில் — என இப்படி ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.
இதை முன்னெடுத்து கண்ணதாசன் கலைக்கூடமும் நான் ஓர் ஐ.ஏ.எஸ் அகாடமியும் முன் நின்று கண்ணதாசன் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.
தமிழர்கள் தலையாய கடமையான இதற்கு உதவி புரிய முன் வர வேண்டும்.
இந்த நல் வாய்ப்பினை எனக்குத் தந்த அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அமைகின்றேன்.
நன்றி வணக்கம்!
****
You tube link
https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –
கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.
நாகராஜன்
இந்த உரைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
***