
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,570
Date uploaded in London – 21 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxx
அறப்பளீசுர சதகம் பாடல் 29. ஒழுகும் முறை Good Behaviour
மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு
மாறாத நல்லொ ழுக்கம்;
மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள
வார்த்தைவழி பாட டக்கம்;
காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
காலத்தில் நயபா டணம்;
கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்
கருணைசேர் அருள்வி தானம்;
நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;
நெறியுடைய பேர்க்கிங்கிதம்;
நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு
நேரலர் இடத்தில் வைரம்
ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) எமது ஐயனே – எம் தலைவனே!, அருமை ………..
தேவனே!,
மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத
நல்லொழுக்கம் – பெற்றோர்களிடம் உள்ளம்நிறைந்த அன்பும் குழைவும் இடையறாத ஒழுக்கமும் வேண்டும், மருவுகுரு
ஆனவர்க்கு உபசாரம் உளவார்த்தை வழிபாடு அடக்கம் – பொருந்திய
ஆசிரியரிடம் இனிய முகமனுடன் கூடிய பேச்சும் வழிபாடும் அடக்கமும் வேண்டும், காது ஆர் கருமை கண் மனையாள் தனக்கோ சயனகாலத்தில் நய பாடணம் – காது வரையில் நீண்ட கரிய கண்களையுடைய
மனையாளிடமோ படுக்கையில் இனிய பேச்சு வேண்டும். வரும் கற்றபெரியோர் முதியர் ஆதுலர்க்கு எலாம் கருணை சேர் அருள் விதானம் –
நாடி வருகின்ற பெரியோர்கள் வயது முதிர்ந்தவர்களும் வறியோர்களும் ஆகிய இவர்களிடம் மிகுதியும் இரக்கமும் பெருங்கொடையும் வேண்டும்,
நீதிபெறும் மன்னவரிடத்து அதிக பய விநயம் – அறநெறி வழுவா
அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும், நெறியுடைய பேர்க்கு இங்கிதம் – நன்னெறி செல்வோரிடம் இனியன செய்தல் வேண்டும், நேயம்உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு – நட்புடைய உறவினரிடம் உளங்கனிந்த அன்பு வேண்டும், நேரலரிடத்தில் வயிரம் – பகைவரிடம் மாறாத சினம் வேண்டும், ஆதி மனு நூல் சொலும் வழக்கம் இது ஆகும் – பழைய மனுவினால் எழுதப்பெற்ற நூல் கூறும் முறைமை இதுவாகும்.
(வி-ரை.) மனையாளிடம் படுக்கையறையில் இனிய மொழிவேண்டும்
என்பதனால் மற்ற வேளையிற் கூடாதென்பது கருத்தன்று. ‘காதல் இருவர்
கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்’ ஆகையால், முற்றிய இன்பம்
அடைவதற்கு மனைவியின் மகிழ்ச்சியும் வேண்டும் என ‘சயன காலத்தில்
நயபா டணம்’ என்றார். பாடணம் – (வட) பேச்சு; (பாஷணம் என்பதன்
தற்பவம்). பகைவர் மொழியால் ஏமாந்துபோதல் கூடாதென்பதற்கு இவ்வாறு கூறினார்.‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’
என்றார் வள்ளுவர்.
Xxxx
My commentary
பகைவரிடம் மாறாத சினம் வேண்டும்
மனு நீதி நூலை கம்பன் முதல் அம்பலவாணர் வரை அனைவரும் பாராட்டுகின்றனர். ஏனெனில் அவர் ஹமுராபிக்கும் முந்தியவர் ; அவரைவிடக் கடுமையானவர். அதனால்தான் மனு நீந்திச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் பலியிட்டு இறவாத புகழ் பெற்றான் ; நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பின்பற்றியவர் அவர் ஒருவர்தான்! அம்பலவாணர் பல நல்ல குணங்களை அடுக்கி, இவையெல்லாம் மனு சொன்னது என்கிறார். உண்மைதான்; மனு ஸ்லோகங்களைப் படித்தோருக்கு அது தெரியும்
மண்வெட்டி அல்லது கோடரியால் மண்ணைத் தோண்டுபவனுக்கு தண்ணீர்- ஊற்று நீர்– கிடைப்பது போல , ஆசிரியரிடத்தில் பணிவாக இருந்து கல்வி கற்பவனுக்கு அறிவு ஊற்றுப் பெருக்கெடுக்கும் – மனு நீதி 2-218
வள்ளுவனும் இதையே சொன்னான் –
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு — குறள் 396
XXXX
பயிர்களைக் காப்பதற்காக களைகளைப் பிடுங்கி எறிவது போல அரசனும் எதிரிகளை அழித்து தன் குடிமக்களைக் காக்கவேண்டும் — மனு நீதி 7-110.
வள்ளுவனும் மரண தண்டனையை ஆதரிப்பவனே ! அவன் சொல்லுவான்
கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர் – குறள் 550
XXXX

அம்மா அப்பாவுக்கு சலாம் போடு
உலகில் வேறு எந்த நாட்டு சிலபஸிலும் இல்லாத கல்வி இந்து மத ஸ்கூல்களில் மட்டுமே உண்டு .
வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியருக்கு முன்னால் நின்று கொண்டு
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணுஹு
குருர் தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.– என்ற ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும் .
பொருள்:
ஆசிரியரே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் ஆவார்கள். பெரிய கடவுளுக்குச் சமமான அந்த ஆசிரியரை நான் அடிபணிந்து வணங்குகிறேன் .
இதைச் சொன்னவுடன் அவர்களை உட்காரும்படி சொல்லிவிட்டு அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார் .
மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆசார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ;—தைத்திரீய உபநிஷத்.
அன்னையே தெய்வம் , அச்சனே தெய்வம், ஆசிரியரே தெய்வம், விருந்தாளியே தெய்வம்.
உலகில் இப்படிப்பட்ட பாடத்தை — பிஞ்சு மனஸில் –பசு மரத்தாணி போல பதிக்கும் – பாட திட்டம் உலகில் எங்கும் இல்லை. அதை அம்பலவாணரும் நமக்கு நினைவு படுத்துகிறார்.
xxxx
நல்ல மனைவியின் ஆறு லட்சணங்கள்
1.தாயைப் போல அன்பும்
2.வேலைக்காரி போல தொண்டும்
3.திருமகளைப் போல அழகும்
4.பூமாதேவியைப் போல பொறுமையும்
5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்
6.அமைச்சரைப் போல அறிவுரையும்
உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.
(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)
அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னி னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்
–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)
xxxx

விவேக சிந்தாமணிப் பாடல்வரிகளை ஒப்பிடலாம்
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96
மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)
அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64
நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்
Xxxx
பெண்களின் – குறிப்பாக மனைவியின்– இனிய சொற்கள் பற்றி பாரதியும் பாடுகிறார்:-
“வில்லினை யொத்த புருவம் வளைத்தனை
வேலவா! — அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு
வள்ளியைக் — கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே
xxxx
1.”பூட்டை திறப்பது கையாலே-நல்ல
மனம் திறப்பது மதியாலே”
பாட்டை திறப்பது பண்ணாலே –இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
Xxx
காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்
…………………………………….
………………………………………….
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
xxxx
சீதாபிராட்டி பேசிய இனிய சொற்களை கம்பன் வருணிக்கிறான் :-
அளவு இல கார் எனும் அப்பெரும்பருவம் வந்தணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோர் கட்கும் தகுமால்
கிளவி தேனினும் அமிழ்தினும் குழைத்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ
—–கம்பன் பாடல், கிட்கிந்தாக் காண்டம்,கார்காலப் படலம்
பொருள்:–
ஓர் அளவில்லாத சிறப்புடைய கார்காலம் வந்து விட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் மனம் தளர்ந்து போவார்கள். ஆகவே தேன், அமிழ்தம் ஆகிய இரண்டிலும் தோய்த்து எடுத்தது போன்ற இனிமையான சொற்களைப் பேசும் சீதையின் தோள்களைத் தழுவிய இராமனுக்கு, கார்காலம் துன்பம் தந்தது என்றால் அது துன்பம் என்று கொள்ளத் தக்கதோ?
xxx
அபிராமி பட்டரும் பாடுகிறார்:–
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
Xxx
இரக்கமும் கொடையும்
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை –குறள் 1059
பொருள் வழங்குவோருக்கு புகழ் — வள்ளல் —என்ற பெயர் எப்படி உண்டாகிறது ? பிச்சை எடுப்போருக்கு இரக்கப்பட்டு அள்ளிக்கொடுப்பதால்தானே .
இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறது அறநெறிச்சாரம் ,
”பரப்புநீர் வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை – இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பனும்
தம்மைத் தலைப்படுத்த லால்” (அறநெறி.219)
— subham —
tags- மனு நீதி நூல் , அறப்பளீசுர சதகம் , மனைவி, ஆறு லட்சணங்கள்,குருர் பிரம்மா , மாத்ரு தேவோ பவ , பாரதி