நல்லவர்களைக் கண்டுபிடிக்கும் உரைகல்: அறப்பளீசுர சதகம் (Post No.11,577)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,577

Date uploaded in London – 23 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx      

 அறப்பளீசுர சதகம் 31. குணங்காணும் குறி 

கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்

     கனவாக்கி னாற்கா ணலாம்;

  கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு

     கால்நடையி னும்கா ணலாம்;

அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா

     அடக்கத்தி னால்அ றியலாம்;

  அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை

     யதுகண்டு தான் அறியலாம்;

வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்

     விளையும்என் றேஅ றியலாம்;

  வீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய

     விசேடத்தி னால்அ றியலாம்;

அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே! (இ-ள்.) அத்தா – தலைவனே!, அண்ணலே – பெரியோனே!,

அருமை ………, தேவனே!, சீலமுடனேசொல்லும் கனவாக்கினால் கற்றோர்கள்

என்பதைக் காணலாம் – ஒழுக்கமுடன் பேசும் உயர்ந்த மொழியினாற்

படித்தவர்கள் என்பதை அறியலாம், பார்க்கின்ற பார்வையொடு

கால்நடையினும் கற்பு உளார் என்பதைக் காணலாம் – நோக்கும்

நோக்கத்தினாலும் காலின்நடையினாலும் கற்பு உடையபெண்கள் என்பதைஅறியலாம், ஒன்றினும் வாரா அடக்கத்தினால் அற்றோர்கள் என்பதை

அறியலாம் – எதனிலும் (தாமே பெரியவர் என்று) வராத அடக்கமான

பண்பினால் (தற்பெருமை) அற்றவர்கள் என உணரலாம் பூததயை என்னும்

நிலையது கண்டுதான் அறம் உளோர் என்பதை அறியலாம் – உயிர்களிடம்

இரக்கம் என்னும் நிலையைக் கண்டுதான் அறநெறியாளர் என உணரலாம், கிளைத்துவரு துடியினால் வித்துஓங்கு பயிரை விளையும் என்றே

அறியலாம் – கிளைத்துவரும் செழிப்பினால்விதையிலிருந்து வளரும்

பயிரை விளையும் என்று உணரலாம், ஓங்கிவரு தைரிய விசேடத்தினால்

வீரம் உடையோர் என்பதை அறியலாம் – மேம்பட்டு வரும் அஞ்சாமைச்

சிறப்பினால்வீரம் உடையோர் என உணரலாம்.

     (க-து.) ஒருவருடைய செயலினால் அவர் பண்பை அறியலாம்.

Xxx

அடக்கமும் பண்பும் உள்ளவர் பேச்சு எப்படி இருக்கும் ?

நல்லோர் பேச்சு நான்கு வகையானது என்று சம்ஸ்க்ருத சுபாஷிதம் (பொன்மொழி) 

ஒன்றும் மஹாபாரதத்தில் உள்ளது.

அவ்யாஹ்ருதம் வ்யாஹ்ருதாத் ச்ரேய ஆஹுஹு

ஸத்யம் வதேத் வ்யாஹ்ருதம் தத் த்விதீயம்

ப் ரியம்  வதேத் வ்யாஹ்ருதம் தத் த்ருதீயம்

தர்மம் வதேத் வ்யாஹ்ருதம் தத் சதுர்த்தம்

பிறருக்கு தெரியாத நல்ல செய்தியை மட்டும் சொல்லுவோர் சிறந்தவர்கள்.

இரண்டாவதாக உண்மையை மட்டுமே சொல்லுவார்கள் ;

மூ ன்றாவதாக இனிமையான விஷயங்களை  மட்டுமே சொல்லுவார்கள் ;;

நாலாவதாக தர்மப்படி இருப்பதை மட்டுமே பேசுவார்கள் ;;

–மஹாபாரதம், உத்யோக பர்வம், அத்யாயம் 36

xxx

இதோ மனு சொன்னதையும் ஆசாரக்கோவை சொன்னதையும் ஒப்பிடுவோம்

மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது: 

महीयांसः प्रकृत्या मितभषिणः  

Maheeyamsah prakrityaa mitabhaashinah 

மஹீயாம்சப்ரக்ருத்யா மிதபாஷிண

பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.

xxxx

வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி)ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்)பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.

 இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாதுகுறைகூடம் கூத்தாடும்’. 

xxx

ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:

விரைந்துரையார்

மேன்மேலுரையார்

பொய்யாய் புனைந்துரையார்

பாரித்துரையார்

பொருள்:

விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்

பின்னர் எப்படிச் சொல்லுவார்?

சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.

இதோ பாடல் முழுதும்:

விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய

பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்

சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்

சொல்லுக செவ்வியறிந்து.

—ஆசாரக்கோவை 

xxxx

திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.

 xxxx

இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:

–மனு ஸ்மிருதி 4-138

உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;

கசப்பான உண்மையைச் சொல்லாதே;

இனிமையான பொய்களைப் பேசாதே;

இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).

Xxx

பயிர் உவமையையும் அம்பலவாணர் கொடுக்கிறார்; இதை நாம் விளையும் பயிர் முளையிலே  தெரியும் என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது அல்லவா ? ஆகவே சிறு வயது முதலே நற் பண்புகள் வேண்டும்.

xxx

இரக்க குணம் பற்றியும் சதகம் பேசுகிறது . இதற்கு நல்ல எடுத்துக்காட்டு வள்ளலார் சொன்ன வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வாசகம்தான்

    வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன் பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

பாரதியோ மேலும் ஒருபடி உயரப்போய்  தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார். வள்ளுவன், பிரம்மாவையே சபிக்கிறார் :-

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்  —குறள் 1062 என்கிறார்.

இவர்களுடைய கருணை உள்ளம், இரக்க  குணம் அவர்களுடைய கோபத்தில் பிரதிபலிக்கிறது.

xxx

கற்புக்கரசி தோற்றம் = சீதையின் தோற்றம் – கம்பன் ஒப்பீடு

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு

     இலி, (Surpanakai) உருவில் நாறும்

வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து

     இடை வயங்க, நோக்கி,

மீன் சுடர் விண்ணும் மண்ணும்

     விரிந்த போர் அரக்கர் என்னும்

கான் சுட முளைத்த (Sita Devi) கற்பின் கனலியைக்

     கண்ணின் கண்டாள்.

அரக்கர் என்னும் காட்டை அழிக்க வந்த கற்புத்தீ சீதைஎன்று சொன்ன கம்பன் முந்திய பாடல்களில் மாதர்கள் அனைவரும் வணங்கும் ஜோதி என்கிறான்

கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்

தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-

கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு

அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23- 

சீதை= கவிதை=பொன் ஒளி = பூவின் மணம் = தேனின் சுவை

ஆக நல்லவர்களை அடையாளம் காண அவர்களுடைய நடை ,உடை, பாவனை, அடக்கம்,  இரக்க குணம், போதுமானது யாருடைய ‘சர்ட்டிபிகேட்’டையும் அவர் கொண்டுவரத் தேவை இல்லை. பார்த்த பார்வையிலேயே நாம் சொல்லிவிடலாம்.

Xxxx

அச்சம் என்பது மடமையடா !

அஞ்சாமைக்கும் வீரத்துக்கும் எடுத்துக்காட்டுகள் ஆயிரக் கணக்கில் கிடைக்கும். சிறுவயதிலேயே சிங்கத்துடன் விளையாடிய பரதன் (சகுந்தலை பிள்ளை) முதல், வீர பாண்டிய கட்டபொம்மன் வரை நிரைய பேரைப் பார்க்கிறோம்..

அச்சமே கீழ்களது ஆசாரம் என்று வள்ளுவரும் சாடுகிறார்

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது– குறள் 1075

யாருக்கு பயம் வரும் ? தவறு செய்த மக்களுக்கு பயம் வரும் ; அது தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினால்வருவதாகும். வீரர்களுக்கு பயம் இல்லை; ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற கொள்கையை மனதில் உடையோர் அவர்கள் ஆங்கிலத்திலும்

From Julius Caesar Act II, sc 2:-

Calpurnia is pleading with Caesar to heed the ill omens for the day (the Ides of March, the day he is prophesied to die). He replies:

Cowards die many times before their deaths;

The valiant never taste of death but once.

Of all the wonders that I yet have heard.

It seems to me most strange that men should fear;

Seeing that death, a necessary end,

Will come when it will come.—William Shakespeare

என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) ஜூலியஸ் ஸீஸரின் வாய்மொழியாகச் சொல்லுவார்

–சுபம்–

Tags-  நல்லவர்,  கண்டுபிடிக்கும் , உரைகல்,  அறப்பளீசுர சதகம், அச்சம், குணங்காணும் குறி, கற்புக்கரசி, கற்பின் கனலி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: