
Post No. 11,581
Date uploaded in London – 24 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் 32. கூடிற் பயன்படல்
செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டு
திண்கரியை யும்கட் டலாம்!
திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக் கலாம்!
ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்
உடுத்திடும் கலைஆக் கலாம்!
ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர்கவிகை யாக்கொள் ளலாம்!
மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்
மல்கும்முளை விளைவிக் கலாம்!
மனமொத்த நேயமொடு கூடியொருவர்க்கொருவர்
வாழின்வெகு வெற்றி பெறலாம்!
அற்றகனி யைப்பொருத் தரிபிரமர் தேடரிய
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அற்ற கனியைப் பொருத்து அரிபிரமர் தேட அரிய
அமலனே – (மரத்திலிருந்து) அறுபட்ட பழத்தைத் (திரும்பவும் மரத்திலே)
சேர்த்த திருமாலும் பிரமனும் தேடியும் காணற்கு அருமையான தூயவனே!,
அருமை ……… தேவனே!,

பல செத்தைகூடி ஒரு கயிறு ஆயின்
அதுகொண்டு திண்கரியையும் கட்டலாம் – பல வைக்கோல் தாள்கள்
சேர்ந்து ஒரு கயிறு ஆனால், அக் கயிற்றைக் கொண்டு வலிய
யானையையும் கட்டஇயலும், திகழ்ந்த பல துளிகூடி ஆறு ஆயின்
வாவியொடு திரள் ஏரி நிறைவிக்கலாம் – விளங்கும் பல நீர்த்திவலைகள்
கூடி ஆறு ஆனால் குளத்தையும் திரண்ட (பல) ஏரிகளையும் நிறையச் செய்யலாம், ஒத்த நுண்பல பஞ்சு சேர்ந்து நூல்ஆயிடின் உடுத்திடும் கலை ஆக்கலாம் – சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூலானால் அணியும் ஆடையாக்கலாம், ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால் உயர்கவிகைஆ கொள்ளலாம் – உயர்ந்து வளர்ந்த கோலோடு துணியும் சேர்ந்தால் உயர்ந்த குடையாகக் கொள்ளமுடியும், மற்றும் – மேலும், உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின் பல்கும் முளை விளைவிக்கலாம் –
மேம்பட்ட அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் (வளம்) மிகுந்த முளையைத் தோற்றுவிக்கலாம், மனம் ஒத்த நேயமொடு ஒருவர்க்கு ஒருவர் கூடி வாழின் வெகு வெற்றி பெறலாம் – உள்ளம் கலந்த அன்புடன் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியை அடையலாம்.
Xxx

ஜலம் ஜலேன சம்ப்ருக்தம் மஹாஜலாய பவதி
மேலே சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழ மொழிக்கு நிகரானது சிறு துளி பெரு வெள்ளம்.
மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் (5) ஐவருக்கும் துர்யோதனாதிகள் நூற்றுவர்க்கும் (100) இடையே இருந்த கருத்து வேறுபாடு, பகைமை எல்லோரும் அறிந்ததே.ஆயினும் துரியோதனனை கந்தர்வர்கள் பிடித்துவைத்தபோது அவனை மீட்பது நம் கடமை என்கிறார் தர்மர்/ யுதிஷ்டிரர்
நாம், நமக்குள் சண்டையிடும்போது நாம் ஐவர்; நம் எதிரிகள் நூற்றுவர். ஆனால் வெளியிலிருந்து பொது எதிரி வருகையில் நா ம் நூற்றைவர் (100+5= 105) என்கிறார் தர்மபுத்திரர்.
परस्परविरोधे तु
वयं पञ्च च ते शतम् ।
अन्यैः साकं विरोधे तु
वयं पञ्चाधिकं शतम् ॥
பரஸ்பர விரோதி து வயம் பஞ்ச ச தே சதம்
அன்யைஹி சாகம் விரோதே து வயம் பஞ்சாதிகம் சதம்
எவ்வளவு நல்ல சிந்தனை !
Xxx
ஊர் கூடித் தேர் இழுக்கலாம்
ஒருவர் மட்டும் தேரை இழுக்க முடியாது. ஊரே கூடினால்தான் தேரினை இழுக்க முடியும்; இறுதிவரை முயன்றாலே தேர் அதன் நிலையை அடையும். ஜாதி மத , ஆண் , பெண் வேறுபாடின்றி அனைவரும் உள்ளம் ஒருமித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேர்த் திருவிழாவினை இந்துக்கள் நடத்துகின்றனர்.
Xxxx
வள்ளுவரும் இதை ஒரு குறளில் விளக்குகிறார்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்– குறள் 474
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
Xxx
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சிறுவயதிலேயே நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கதைதான். ஒரு வயதான தந்தையின் 4 மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் . நால்வர் கையிலும் சில குச்சிகளைக் கொடுத்து உடையுங்கள் என்றார் ; நால்வரும் எளிதில் அவைகளை முறித்துப் போட்டனர். அதே அளவு குச்சிகளை ஒன்றாகக்கட்டி உடைக்கச் சொன்னார். ஒருவராலும் இயல வில்லை ; மகன்களுக்குப் புரிந்தது ஒற்றுமையையே பலம் என்று ..
மேலே அம்பலவாணர் கூறிய ஒவ்வொரு வரியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது .பஞ்ச தந்திரக் கதையிலும் ஒற்றுமையாய் இருந்த 4 காளை மாடுகளுக்குள் சண்டை மூட்டிவிட்டு அவைகளை தனக்கு இரையாக்கிக்கொண்டது ஒரு நரி.
Xxx
ஒரு குடை தயாரிக்கக்கூட பல அம்சங்கள் ஒன்று சேர வேண்டும் என்கிறார்.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) உரையில் ஒற்றுமையை விளக்குகிறார்.
“ஒவ்வொரு மனிதனுடைய கையிலும் 5 விரல்கள் இருக்கின்றன. ஐந்தும் சமமாக இருப்பதில்லை. ஆனபோதிலும் ஐந்து விரல்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் உணவைக் கையில் எடுத்து உண்ண முடியும். ஒரு மனிதனுக்கு ஐந்து ஏக்கர் பூமி இருக்கலாம். ஆனால் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு வரப்புகளைக் கட்டி அநேக வயல்களாகத் தடுத்துக் கொள்ள அவசியம் நேர்கிறது. அப்படிச் செய்தால்தான் ஒவ்வொரு பகுதியாகத் தண்ணிர் தேக்கி நன்றாக உழுது, பயிரிட்டுப் பயனடைய முடியும். ஐந்து ஏக்கராவும் தனது என்ற எண்ணம் இருக்கவேண்டும். வரப்புக் கட்டிப் பல வயல்களாகப் பிரக்கவும் வேண்டும். அதுபோல உயிரினங்கள் அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றே. என்ற எண்ணம் சதா இருக்க வேண்டும். ஆனால் உலக ரீதியல் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமையே இந்து சமயத்தின் சிகரம்”.
Xxx
இதோ பஞ்ச தந்திரப் பொன்மொழி
बहूनामप्यसाराणाम् समवायो हि दुर्जयः ।
तृणैरावेष्ट्यते रज्जुः येन नागोऽपि बद्ध्यते ॥- पञ्चतन्त्रम्
பஹுனாமப்ய ஸாராணாம்
ஸம வாயோ ஹி துர்ஜயஹ
த்ருணை ராவேஷ்ட யதே ரஜ்ஜுஹு
யேன நாகோபி பந்த்யதே —பஞ்ச தந்திரம்
பல சின்ன பொருட்களும்கூட ஒன்றாகச் சேரும்போது வெல்லமுடியாத பலம் பெறுகின்றன வைக்கோல்
நார்களைக் கொண்டு திரிக்கப்பட்ட கயிற்றால் பலம் வாய்ந்த யானையையும் கட்டிவிட முடியும் — பஞ்ச தந்திரம்
வள்ளுவனும் மயில் தோகை உதாரணத்தால் இதைச் சொல்லுவான்:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்–குறள் 475
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அதனால் மயிலிறகு என்பதனால் அதனை குறைத்து எடை போடக்கூடாது..
ஒற்றுமையே வலிமை !!
–subham—
Tags– சிறு துளி பெரு வெள்ளம் ,ஊர் கூடித் தேர் இழுக்கலாம் , அறப்பளீசுர சதகம் , ஒற்றுமை