பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்! (Post.11,580)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,580

Date uploaded in London – 24 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 70 

பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்!

ச.நாகராஜன் 

வீர பாண்டிய மன்னன் அரசாண்ட காலம் அது. மேல்கரைப் பூந்துறை வெள்ளோட்டில் வசித்து வந்த ஒரு வீர வாலிபன் தன் முயற்சியால் வீர பாண்டிய மன்னனின் சேனையில் சேனாதிபதி ஆனான்.

தமிழரசர்கள் மந்திரி மற்றும் சேனாதிபதிகளுக்குக் காளிங்கராயன், மானவராயன் (மழவராயன்) போன்ற பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது அந்தக் காலத்திய வழக்கமாகும்.

ஆகவே அந்த வீர வாலிபனும் காளிங்கராயன் என்னும் பட்டத்தைப் பெற்றான்.

தான் பிறந்த நாட்டுக்கும் தன் குலத்திற்கும் தனக்கும் புகழ் சேரும் வண்ணம் காவிரி ஆற்றுடன் சங்கமம் ஆகும் இடத்திற்கு அருகே பவானி நதியைத் தடுத்து அணை ஒன்றை அவன் கட்டினான்; புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டான்.

இன்றும் அந்த அணைக்குக் காளிங்கராயன் அணை என்ற பெயர் வழங்கி வருகிறது.

கோயமுத்தூருக்கு அடுத்த ஊற்றுக்குழி ஜமீன்தார் (பாளையகாரர்) இவனது சந்ததி ஆனதால் இப்போதும் காளிங்கராயன் என்ற பட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அந்த மந்திரி திருச்செங்கோடு ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரருக்கு மானியம் விட்டிருந்ததாக அறியப்படுகிறது.

மேற்கோள் பாடல்:

ஆலிங்க நாகமலை யர்த்தநா ரீசுரர்க்குக்

காலிங்க ராயனெனுங் காராளன் – மாலிங்க

மென்றேமா மாந்தை நிலமேழுமா வுங்கொடுத்தான்

நன்றே புகழெய்தி னான் 

–    திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணிமாலை

இன்னொரு தனிப்பாடலும் இது பற்றிக் கூறுகிறது:

திரைகொண்ட வாரியை மாலடைத் தான் செழுங் காவிரியை

உரைகொண்ட சோழன்மு னாளடைத் தானுல கேழறிய

வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கவல் வானிதனைக்

கரைகொண் டடைத்தவன் வெள்ளோடை சாத்தந்தை காளிங்கனே 

                  – தனிப்பாடல்

ஏற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க

வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன்

கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர்

உற்ற வனத்தை வனவயலாக வுயர்த்தியதே     – தனிப்பாடல்

வீரபாண்டிய மன்னன் கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான் என்பதை விஜயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளும் epigraphyகளும், 1913-1914 வருடாந்திர அறிக்கையும் நன்கு விளக்குகிறது.

கி.பி.1250க்கு மேல் 1280க்குள் இவன் அரசாண்டிருக்கிறான்.

1913ஆம் ஆண்டு ஊற்றுக்குழி ஜமீன் மானேஜரான திரு J.M. துரைசாமிப் பிள்ளை ஜமீன் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  அதையொட்டி உள்ள கோயமுத்தூர் ஜில்லா மானுவலும் காளிங்கராயன் என்ற பெயர் ஏற்பட்ட காரணமும் அணைக்கட்டு விவரமும் மேலே கூறிய விவரத்திற்கு முரண்பாட்டான விவரத்தைத் தருகின்றன. இவைகளின் ஆதாரம் பற்றி சரியாக விளங்கவில்லை. இது ஆராயப்பட வேண்டிய விஷயமாகும்.

கொங்குமண்டல சதகம் பாடல் 70 இந்த  காளிங்கராயனைப் புகழ்ந்து கூறுகிறது இப்படி:

காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்

பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை

தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ

மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே

இதன் பொருள் :

காவேரி நதியுடன் கூடுகின்ற பவானி நதியில் அணை கட்டிப் பாசனம் செய்து வடிநீர் காஞ்சி ஆற்றில் விழும்படி செய்த வெற்றியாளனான காளிங்கராயன் என்பவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே ஆகும்.

 ***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: