
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,584
Date uploaded in London – 25 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 7
(55 முதல் 64 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வாருற்றெழும் ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச்சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திர ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச் செய்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி) அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடி இணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறிதரும் செப்பத்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும்) பெருமான் நீ என்றும் நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?
61) காஞ்சீபுரம்
தங்கரிவையும் துத்துத் துத்துவெனக்கண் டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந்தொக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உடன் தங்கியிருந்த பெண்களும் ‘தூ, தூ’ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும், போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித்தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஒரு ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்ய அருள்வாயாக்
64) காஞ்சீபுரம்
விதன முற்றிட மிக வாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படி றொழுக்கமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும், அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்