
Post No. 11,586
Date uploaded in London – 25 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் 33. வெற்றி யிடம்
கலைவலா ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க் கதிக சயமோ
கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்
கைவிசே டந்தன் னிலே;
நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்கு
நாளும்ரண சூரத் திலே
நற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;
ஞானவே தியர்த மக்கோ
குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்
1கூடிய துலாக்கோ லிலே;
குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்
குறையாத கொழுமு னையிலே;
அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்
ஆம்என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ……… தேவனே!, கலைவலாருக்கு மதுரவாக்கில்
அதிகசயம் – கலையிற் சிறந்தவர்கட்கு இனிய மொழியிலே மிகு வெற்றி
(உண்டு), காமுகர்க்குக் கைப்பொருளிலே அதிகசயம் – காமத்திலே
ஈடுபட்டவர்கட்குக்
________________________________________
1. ‘கூறிய’ என்றும் பாடம்.கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). வரும் மருத்துவர்க்குக்
கைவிசேடந்தன்னில் சயம் – முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக்
கைராசியால் வெற்றி (உண்டாகும்), நலம் உடைய வேசையர்க்கு அழகிலே- நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு),நாளும் அரசர்க்கு ரணசூரத்திலே – எப்போதும் மன்னவர்கட்குப் போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நற்றவர்க்கு உலகுபுகழ்பொறையிலே அதிக சயம் – நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), ஞானவேதியர் தமக்கோ குலமகிமை தன்னிலே – அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய பெருமையினாலே வெற்றி உண்டாகும், வைசியர்க்கோ கூடிய துலாக்கோலிலே சயம் – வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம் இல்லாத வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் – குற்றம்
அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே
(உழுவதால்) வெற்றி உண்டாகும், அலைவுஇல் குதிரைக்கு நடைவேகத்தில்அதிக சயம் ஆம் என்பர் – வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.
(க-து.) அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான்
வெற்றியுண்டாகும்.
Xxx
My commentary on verse 33 of ARAPPALISURA SATAKAM
வெற்றி வேற்கை (நறுந்தொகை) எழுதிய அரசர் அதிவீரராம பாண்டியனும் அம்பலவாணரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் 4
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை 5
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் 6
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் 7
XXX
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல் 11
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் 12
விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல் 13
XXX
காலையும் மாலையும் நான் மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே 65
குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே 66
முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே 67
வித்தும் ஏரும் உளவா இருப்ப
எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே 68
XXX

தவம் செய்வோருக்கு பொறுமை அவசியம் ஏன்?
அப்போது அவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டாது; வெற்றி வரும் நேரத்தில் அஹங்காரமும் காம எண்ணங்களும் வலை வீசும்; அதில் அகப்பட்டு சிறை சென்ற ஆனந்தாக்களை பத்திரிக்கையில் படிக்கிறோம் . விசுவாமித்திரர் அகம்கார வெறியில் வஸிட்டரின் காமதேனுவைப் பறிக்கப் பார்த்தார்; நல்ல அடி வாங்கினார் ;பின்னர் திரிசங்குவை உடலுடன் இந்திரலோகத்துக்கு அனுப்பி, அவர்கள் அவரை பூமிக்கு உருட்டிவிட்டபோது மற்றோரு அடி வாங்கினார் மேனகா வலையில் சிக்கி தவத்தை இழந்தார். அவர் மன்னர்- ஞானி; ஆக அவருக்கு பொறுமை இல்லாததால் மும்முறை தோற்றார். பின்னர் தவற்றை உணர்ந்து பக்குவ நிலை அடைந்தார். பிராமணர் பட்டத்தை அவருக்கு வசிஷ்டரே தந்தார்.
XXX
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை
ஒரு தவசி ராம கிருஷ்ண பரமஹம்ஸரிடம் வந்தார். வர, வர தனக்கு ஞான திருஷ்டி அதிகரிப்பதாகச் சொல்லி. தொலை தூரத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் முன் கூட்டியே தெரிவதாகவும் அதைத்தானே சரி பார்த்து அறிந்த தாகவும் சொன்னார். உடனே தவத்தை சில நாட்களுக்கு நிறுத்தும்படி பரமஹம்ஸர் சொன்னார். வந்தவர் வியப்புடன் ஏன் நிறுத்தவேண்டும் என்று வினவினார். தவம் சித்தி அடையப்போகும் நேரத்தில் இப்படி தேவதைகள் வந்து திசை திருப்பும் என்றும் ஆகையால் அதை நிறுத்த, சில நாட்கள் தவம் செய்வதை கைவிடுதல் நன்று என்றும் சொன்னார்.
இன்னொருவர் வந்து தான் தியானம் செய்யும்போது பழைய தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுப்பதாக வருத்தத்துடன் செப்பினார். அதற்கும் பரமஹம்ஸர் தக்க பதில் கொடுத்தார். எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தை எவ்வளவு கவிழ்த்து எண்ணெயை வெளியேற்றினாலும் சிறிது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். நம்முடைய பழைய எண்ணங்களும் அப்படித்தான். எளிதில் போகாது.ஆகையால் அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தியானம் செய்யலாம் என்கிறார். தியானத்தில் வெற்றி அடைய நிறைய பொறுமை வேண்டும்.
XXXX
நரஸ்ய ஆபரணம் ரூபம் ரூபஸ்ய ஆபரணம் குணஹ
குணஸ்ய ஆபரணம் ஞானம் ஞானஸ்ய ஆபரணம் க்ஷமா — என்று
சம்ஸ்க்ருத சுபாஷிதம் செப்பும்.
மனிதனுக்கு அழகு எடுப்பான தோற்றம் ;
அந்த உருவத்துக்கு அழகு நல்ல குணம்;
அந்த குணத்துக்கு அழகு தருவது ஞானம்;
அந்த ஞானத்துக்கு அழகு சேர்ப்பது பொறுமை
XXXX
மற்றொரு பொறுமை ஸ்லோகம் இதோ :
கோகிலானாம் ஸ்வரம் ரூபம் பாதிவ்ரத்யம் து யோஷிதாம்
வித்யா ரூபம் விரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
குயிலுக்கு அழகு அதன் இனிய குரல் ;
பெண்களுக்கு அழகு கற்பு;
அசிங்கமான தோற்றம் உடையோருக்கு அழகு அவர்கள் கற்ற கல்வி;
தவசிகளுக்கு அழகு பொறுமை .!
சாணக்கியர் கதை அனைவரும் அறிந்ததே ; அழகற்ற கருத்த பிராமணர் அவர். ஒரு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரை , நந்த வம்ஸத்து மன்னர், தர தர என்று வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தவே உனது சாம்ராஜ்யத்தை வேரறுக்காதவரை என் குடுமியை முடிய மாட்டேன் என்று வீர சபதம் செய்தார். அதன் படி நந்த வம்சத்தை பூண்டோடு அழித்து, அலெக்ஸ்சாண்டரையும் அச்சுறுத்தக்கூடிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை நிறுவினார். மஹா மேதாவி; ஆனால் தோற்றத்தில் விகாரம்.
XXX
பார்ப்பனர் பற்றி வள்ளுவரே சொல்லிவிட்டார். வேதத்தை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால் ஒழுக்கத்தைக் கைவிட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது. அந்தக் காலத்தில் பிராமணர் மூலம் செய்திகளை அனுப்புவார்கள் ; அதைத் தொல்காப்பியரும் சொல்கிறார். கோவலனுக்கு மாதவி அனுப்பிய மன்னிப்பு LOVE LETTER லவ் லெட்டரை பார்ப்பனர் கையில் கொடுத்து அனுப்பியதை சிலப்பதிகாரம் செப்புகிறது. அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மீது.
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
பிராமணர்கள் அடிப்படை வேலை, வேதங்களை கற்று ஓதவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அவர்களின் கடமையில் இருந்து தவறுகிறார்கள். அப்படி வேதத்தை மறந்து ஓதாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒருவன் ஒழுக்கத்தில் இருந்து தவறினால் அவனுடைய புகழும் அவன் குடும்பத்தினுடைய புகழும் குலத்தினுடைய புகழும் குன்றி விடும். ஆதலால் ஒருவருடைய புகழ் அவர் ஒழுக்கத்தில் உள்ளது.
தைவாதீனம் ஜகத் சர்வம்
மந்திராதீனம் து தைவதம்
தன்மந்த்ரம் பிராஹ்மணாதீனம்
பிராஹ்மணோ மமதேவதா
பொருள்: “உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் மந்திரங்களும் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை – பிராமணர்களே எனது தெய்வம்” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்
இவை அனைத்தும் ஒழுக்கமுள்ள, வேத வாழ்வினைக் கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களைப் பற்றி சொன்ன வசனங்கள்.
XXX
விவேக சிந்தாமணி பாடலும் அந்தணர் ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது
இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்
மந்தர நிலைகள் பேர மறுகு அயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயும் தரணியில் தேசும் மாளும்
அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.
அந்தணர் தம் கடமை குன்றுவாரேயானால்,
வானுலக அரசன் இந்திரன் பெற்றிருக்கும் பேறுகள் குன்றும்.
மண்ணுலக அரசர்கள் பெற்றிருக்கும் பேறுகள் மாற்றம் அடையும்.
மலைகளின் நிலைகள் பெயரும்.
தெருக்களிலும், அயலிடங்களிலும் வறுமை நிலை தோன்றும்.
சந்திரன், சூரியன் ஒளி சாயும். உலகின் ஒளி அழியும்.
உலகில் யார்தாம் நலமுடன் வாழ்வார்?
XXXsubham xxxx
tags– பிராமண, வைசிய, க்ஷத்ரியர், வெற்றி , அம்பலவாணர் கருத்து