ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கே இருக்கிறார்?- யோக வாசிஷ்டம் பதில்(11,587)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,587

Date uploaded in London – 26 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகவாசிஷ்டம் 

யோக வாசிஷ்டம் கூறும் புஸுண்டோபாக்யானம்!

ச.நாகராஜன் 

முன்னொரு காலத்தில் பெரும் மஹரிஷிகள் அனைவரும் தேவ சபையில் ஒருங்கே கூடினர்.  அப்போது ஒரு கேள்வி எழுந்தது.

 உலகில் வசித்துக் கொண்டிருந்தாலும் உலக சம்பந்தமான தொடர்பு சிறிதும் ஏற்படாத மஹா ஞானிகளுள் சிறந்தவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? – இது தான் கேள்வி.

 அப்போது சாதாதபர் என்னும் மஹரிஷி சபையோரைப் பார்த்துச் சொல்லலானார் : “ ரிஷி பெருமக்களே! மஹாமேருவின் ஈசான கோணத்தில் எத்தகைய தவம் செய்தாலும் செல்வதற்கு மிக அரிதாக உள்ள ஒரு ரகசியமான இடத்தில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் பொந்திலே காகத்தின் உருவத்தில் புஸுண்டர் என்ற மாபெரும் யோகியார் இருக்கிறார். அவரைப் போன்ற இன்னொருவரைக் காண்பது அரிது”.

இதைக் கேள்வியுற்ற வசிஷ்ட மஹரிஷி தனது தவத்தின் வலிமையாலும் யோக சக்தியாலும் அந்த மரத்தின் அருகில் சென்றார். அங்கே புஸுண்ட மஹரிஷியைக் கண்டார்.

அவரிடம் அர்க்யம் பாத்யம் ஆகிய அனைத்து உபசாரங்களையும் பெற்றார்.

பின்னர் வினவலானார் தனது சந்தேகத்தை! 

“ ஓ! யோகீஸ்வரரே! வெகு நீண்ட காலமாக உலகில் நீங்கள் வசிக்கிறீர்கள். உங்களது அனுபவத்தில் கண்ட விஷயங்களைச் சற்று எனக்குச் சொல்லுங்கள்” என்று அவர் வேண்டினார்.

அப்போது புஸுண்ட மஹரிஷி பல ரகசியங்களை அவரிடம் விண்டுரைத்தார்.

அவை அதிசயிக்கத்தக்க விவரங்கள்! யோகம், ஞானம் பற்றிய பல மர்மமான விஷயங்களை அவர் எடுத்துரைத்தார். 

பின்னர் கூறினார் இப்படி:

 : ஓ, முனிவரே! நீர் பிரம்மாவினால் இதற்கு முன் ஏழு தடவை உண்டாக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். பிரம்மாவின் சங்கல்பத்தால் கர்ப்பவாசம் இன்றி நீர் தோன்றினீர்.  அப்படித் தோன்றிய ஜன்மங்களில் இது உமக்கு எட்டாவது ஜன்மம். ஒரு சமயம் ஆகாயத்திலிருந்து நீர் பிரம்மாவின் சங்கல்பத்தினால் தோன்றினீர். இன்னொரு சமயம் அக்னியிலிருந்து தோன்றினீர்.

பூமி அந்தர்தானம் அடைந்து கூர்மத்தினால் சமுத்திரத்திலிருந்து உத்தாரணம் செய்யப்பட்டதை இதற்கு முன் ஐந்து கல்பங்களில் கண்டிருக்கிறேன்.

இப்போது நடந்த அம்ருத மதனமானது நான் கண்டதில் பனிரெண்டாவது தடவை ஏற்படுவதாகும். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கீழே கொண்டு போனதை மூன்று தடவை நான் கண்டிருக்கிறேன்.

 ஹரியானவர் பரந்தாமராகத் தோற்றமுற்ற அவதாரங்களில் எட்டை நான் பார்த்திருக்கிறேன். திரிபுர சம்ஹாரங்களில் முப்பதைப் பார்த்திருக்கிறேன். தக்ஷயக்ஞ நாசம் இரண்டு முறை கண்டிருக்கிறேன்.

ஒரே விஷயத்தைச் சொல்லுவதாகவும் பல பாடங்களை உடையதாயும் உள்ள புராணங்கள் கலியில் நஷ்டமடைந்து போக அவை மீண்டும் ஒவ்வொரு சதுர்யுகத்திலும் மீண்டும் பிரவர்த்திப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 ராமாயணம் என்னும் வேறு இதிஹாஸம் ஒன்று லட்சம் கிரந்தங்களோடு கூடிய ஞான சாஸ்திரமாகத் தோன்றியதைக் கண்டிருக்கிறேன்.

 பூபார நிவிருத்திக்காக வசுதேவர் இல்லத்தில் கிருஷ்ணன் என்னும் பெயரை உடைய பதினாறாவது அவதாரமானது விஷ்ணுவுக்கு இனி ஏற்படப் போகிறது.

இதற்கு முன் அந்த அவதாரத்தில் பதினைந்து அவதாரங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு சமயம் ருத்திரர் சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் பிரம்மா சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் விஷ்ணு சிருஷ்டி செய்ததையும் ஒரு சமயம் முனிவரது சிருஷ்டியையும் கண்டிருக்கிறேன்.

 ஒரு கல்பத்தில் தாமரை மலரிலிருந்தும் ஒரு சமயம் ஜலத்திலிருந்தும் ஒரு கல்பத்தில் அண்டத்திலிருந்தும் ஒரு கல்பத்தை ஆகாயத்திலிருந்தும் பிரம்மா உண்டாகியதைக் கண்டிருக்கிறேன்.

 இப்படிப் பல விஷயங்களைக் கேட்ட அனைவரும் பிரமித்தனர்.

 நாம் இப்போது இருப்பது ஸ்வேத வராஹ கல்பம். மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம்.இது இந்த கல்பத்தில் ஏழாவது மன்வந்தரம்.

இப்போது இருப்பது பிரம்மாவின் 51வது வருடம்.

இப்படிப்பட்ட நீண்ட ஒரு சரிதத்தை சிருஷ்டி பற்றிக் கேள்விப்பட்ட கார்ல் சகன் என்ற விஞ்ஞானி மலைத்தே போனார்.

சிருஷ்டியின் மர்மத்தைக் கூறும் சிதம்பரம் நோக்கி வந்தார். நடராஜரை தரிசித்தார்.

தனது காஸ்மாஸ் என்ற பிரபலமான அமெரிக்க தொடரின் ஒரு பகுதியின் ஆரம்பத்தில் நடராஜரைக் காண்பித்தார்.

நமது பிரபஞ்சம் பற்றிய அறிவு விஞ்ஞான பூர்வமானது.

இதை முற்றிலுமாக அறிந்து கொள்ள கல்பம் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாதது!

*** 

Tags- யோக வாசிஷ்டம், புஸுண்டோபாக்யானம்புஸுண்டர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: