
Post No. 11,599
Date uploaded in London – 29 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வறுமையின் கொடுமை– அறப்பளீசுர சதகம்
அறப்பளீசுர சதகம் 37. வறுமையின் கொடுமை
மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?
வெகுவித்தை கற்றும் என்ன?
மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?
மிகுமானி ஆகில் என்ன?
பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசார
பரனாய் இருந்தும் என்ன?
பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
பாக்கியம் இலாத போது;
வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!
வந்தசுற் றமும்இ கழுமே!
மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
மனைவியும் தூறு சொல்வாள்!
ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆலாலம் உண்ட கனிவாயனே – நஞ்சுண்ட
கனிபோலச்சிவந்த வாயை யுடையவனே! நேயனே அன்புடையவனே!,
அனகனே – குற்றம் இல்லாதவனே!, பாக்கியம் இலாதபோது – செல்வம்
இல்லாவிட்டால், மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன – உயர்ந்த குலத்திற் பிறந்தாலும் அதனாற் பயன் இல்லை. வெகுவித்தை கற்றும் என்ன – மிகுதியான கலைகளைப் படித்துணர்ந்தாலும் பயன் இல்லை, மிக்க அதிரூபமொடு சற்குணம் இருந்து என்ன – பேரழகுடன் நற்பண்பு இருந்தாலும் பயனில்லை, மிகுமானி ஆகில்என்ன – சிறந்த
மானமுடையவனானாலும் பயனில்லை. பாலான மொழியுடையன்
ஆய்என்ன – இனிய மொழிகளை இயம்புவோனானாலும் பயன் இல்லை, பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன –
உலகிலே வீரமும் அறிவும் உடையவனெனினும் ஒரு பயனும் இல்லை. பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் – ஈன்ற அன்னையும் இயல்பாகவே வெறுப்பாள், வந்த சுற்றமும் இகழும் – வருகின்ற உறவினரும் இகழ்வர், அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் –எல்லோரும் மதிப்பின்றி உரையாடுவர், மனைவியும் தூறுசொல்வாள் இல்லாளும் குறைகூறுவாள்.
Xxx
My commentary
வறுமை பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் எவருமில்லை; புறநானூற்றுப் புலவர்கள் முதல் பாரதி வரை பாடிப் புலம்பிய விஷயம் வறுமை. கந்தலாடைகளுடன் போன புலவர்களும் பாணர்களும் எப்படிப் பொன்னாடைகளுடன் திரும்பி வந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன. பாரதியோ வறுமையில் வாடிய புலவருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவன் ;அப்படியிருந்தும் ‘இல்லை’ என்ற கொடுமை இல்லை யாக வைப்பேன்’ என்று சூளுரைத்தான்..
செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை—உலகில்
இல்லையாக வைப்பேன்
தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!
இன்னொரு இடத்தில்
“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.
கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!
XXXX

வறுமையினால் மாமிசம் சாப்பிட்ட முனிவர்கள் பட்டியல்
நாலு வர்ணத்தாருக்கும் உயிர்போகும் ஆபத்து நேரிடுமானால் அவர்கள் சொந்த தர்மங்களைக் கைவிட்டு ஆபத்கால தர்மங்களைப் பின்பற்றலாம் என்பது மனுவின் வாதம்.
மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மநு நீதி நூலில் பத்தாம் அத்தியாயத்தில் இந்தப் பட்டியல் உள்ளது
Manu 10-105 முதல் 10-108 வரை 4 எடுத்துக்காட்டுகள்.
‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பது தமிழ்ப் பொன்மொழி .
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு,
தாளாண்மை (விடா முயற்சி), காமம் ஆகிய 10 குணங்களும் பறந்துவிடுமாம்.
உணவே கிடைக்காதபோது பிராமணர்களும்– வேத கால ரிஷிகளும்– மாமிசம் சாப்பிட்டனர்- சண்டாளன் கையிலிருந்து சாப்பிட்டனர். தச்சுத் தொழிலாளியிடம் கடன் வாங்கினர்
இதோ நாலு கதைகள் :-
10-105 ஐதரேய பிராஹ்மணம் –7-13/16 — அஜிகர்த்தா என்ற பிராமணன் கதையைச் சொல்கிறது.
அவனை வறுமை வாட்டியகாலையில் சுனஸ்சேபன் என்ற மகனையே விற்றான். பின்னர் விஸ்வாமித்ரர் அவனை விடுவித்தார்.பின்னர் அந்தப் பையன் மன்னன் ஆனான் ;இந்தக் கதை பிற்கால இலக்கியங்களிலும் பலமுறை சொல்லப்பட்டுள்ளது
10-106 ரிக் வேதத்திலும் ( 4-18-13 ) , மகா பாரதத்திலும் வரும் கதை வாமதேவ கௌதமரின் கதை.
பசியும் பட்டினியும் பஞ்சமும் தலை விரித்தாடிய ஒரு காலத்தில் வாம தேவர், நாய் மாமிசம் சாப்பிட்டார் .
10-107 ரிக் வேதத்தின் 6-45-31க்கு சாயனர் எழுதிய பாஷ்யத்தில் இக்கதை வருகிறது. பரத்வாஜ மகரிஷி அவருடைய மகன்களுடன் நடுக்காட்டில் சிக்கித் தவித்தார். பசியால் வாடினர். அப்பொழுது பிருது என்னும் தச்சுத் தொழிலாளியிடம் பசு மாடுகளை வாங்கிக் கொண்டார். இன்னும் சில இடங்களில் ப்ருது அல்லது வ்ருது , ஒரு மன்னன் என்றும் சொல்லப்படும்; சாங்க்யாயன சிரௌத சூத்திரத்திலும் — 16-11-11 — இக்கதை வருகிறது.
10-108 மகா பாரதத்திலும் புராணங்களிலும் வரும் கதை விசுவாமித்திரர் பற்றியது . அவர் ஒரு சண்டாளன் கையிலிருந்து நாய் மாமிசம் வாங்கிச் சாப்பிட்டார். பசியின் கொடுமையே இதற்குக் காரணம்
இவற்றை எல்லாம் சொல்லும் மநு , அந்த ரிஷிகளை மகா தபஸ்விக்கள் என்றும் வருணிக்கிறார். அதற்கு முன்னர் தூய்மையானவர்கள் கங்கைக்கும், அக்நிக்கும் ஆகாயத்துக்கும் சமமானவர்கள். அசுத்தப் பொருட்கள் அவர்களைத் தீண்டா என்றும் சொல்கிறார்.
xxxxx
இதோ சில வறுமைப் பாடல்கள் :
அவ்வையார் பாடியது:
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.
Xxx
விவேக சிந்தாமணிப் பாடல்கள்
தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே. 21
Xxxx
பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,
புண்ணியம் இல்லை, என்றும்
மருவிய கீர்த்தி இல்லை,
மைந்தரில் பெருமை இல்லை,
கருதிய கருமம் இல்லை,
கதிபெற வழியும் இல்லை,
பெருநிலம் தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகுவாரே.
Xxxx
இன்மையைப்பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.: உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும்.
பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு (நாலடி 285)
Xxxx
மணிமேகலை 11- 9
பசி என்னும் பிணி – பாவி
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
பொருள்
பசிப்பிணி என்னும் பாவி என்ன செய்யும்?
குடிப்பிறப்புப் பெருமையை அழிக்கும்.
சிறப்புகள் இல்லாமல் செய்யும்.
கல்வி என்னும் செல்வத்தைக் கைவிட்டுவிடும்.
செய்யத் தகாதன செய்வதற்கு நாணும் பண்பினை விலக்கிவிடும்.
உடல் அழகைக் கெடுத்துவிடும்.
பெண்ணுக்கு முன் நிற்க முடியாமல் வெளியில் நிறுத்தும்.
இந்தப் பசிப்பிணியைப் போக்கியவரின் புகழை என் நாவால் முழுமையாகச் சொல்ல இயலாது. – தீவதிலகை இதனைக் கூறி மேலும் தொடர்கிறாள்.
Xxx
நல்குரவு /வறுமை பற்றி வள்ளுவர்
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்–குறள் 1044:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
xxx
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்— குறள் 1046
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
Xxx
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் –குறள் 1047
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
Xxxx
பாகவத புராணத்தில், குசேலர் வறுமையில் வாடிய கதை உள்ளது.சுதாமா அல்லது குசேலர், கந்தைத் துணியில் அவலைக் கொண்டுபோய் பழைய கிளாஸ்மேட் கிருஷ்ணரிடம் கொடுத்தார் , அவர் ஒரு பிடி அவலை உண்ட உடனே, குசேலரின் குடிசை அரண்மனையாக மாறிய அற்புதக் கதையை நாம் அறிவோம்
xxxx

ரஷ்யப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் (Russian and French Revolutions)
“Let them eat cake” is the traditional translation of the French phrase “Qu’ils mangent de la brioche”, said to have been spoken in the 17th or 18th century by “a great princess” (Marie-Antoinette) upon being told that the peasants had no bread. Marie-Antoinette was guillotined in 1793. She was only 37 years old when her head was cut off in Guillotine.
உலகின் மிகப்பெரிய இரண்டு புரட்சிகள் வறுமை காரணமாக வெடித்தவைதான். மக்கள் சாப்பிட ரொட்டி இல்லை என்று சொன்னவுடன் அவர்கள் கேக் சாப்பிடட்டுமே என்று பிரெஞ்சு மஹாராணி மேரி ஆண்டாயினட் சொன்னதும் புரட்சிக்கு ஒரு காரணம். 37 வயதில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் எந்திரத்தில் தலை துண்டிக்கப்பட்டாள் ; பாரிஸ் மாநகரத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி நின்று ,அதை வேடிக்கை பார்த்து, சிரித்து மகிழ்ந்தனர்.
தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கும் வறுமையே காரணம் தமிழர்கள் நீண்ட வரிசையில் நின்று ரேஷன் கடைகளில் புழுத்த அரிசியை வாங்கிய 1964ம் ஆண்டு, ஒரு காங்கிரஸ் அமைச்சர் எலி மாமிசம் சாப்பிடலாமே என்று சொன்னவுடன் கொந்தளிப்பு ஏற்பட்டது . 1965ம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புக்கு கிளர்ச்சியைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழர்கள் வேட்டு வைத்தனர். தினமணி போன்ற தேசீய பத்திரிக்கைகளும் காங்கிரசுக்கு எதிராக வோட்டளிக்கும்படி பகிரங்கமாக எழுதியதற்கு வறுமையே காரணம்..
கரீபி ஹடாவோ தேஷ் பசாவோ
Garibi Hatao Desh Bachao (“Remove poverty, rescue the country”) என்ற கோஷத்தை 1971 தேர்தல் பிரசாரத்தின் முன்வைத்து இந்திராகாந்தி வெற்றி பெற்றதையும் இந்தியர்கள் அறிவர்.
வறுமை என்பது உலகெங்கிலும் உண்டு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தோன்றவும் பிரிட்டிஷாரின் வறுமையே காரணம் ; அவர்களுடைய வறுமை நிலையை விடோரியன் கால நாவல்களில் படிக்கலாம் . உலகெங்கும் பிரிட்டிஷார் சென்று மக்களை ஏமாற்றியும், சுரண்டியும், படுகொலை செய்தும் பிரிட்டனை பெரிய நாடாக்கினார்கள்; பிறவியில் பிச்சைகாரர்கள் பிரிட்டிஷ் மக்கள்.! வறுமை காரணமாக உலகெங்கையும் ஆக்ரமித்தனர்; அவர்களைப் பார்த்து பிரெஞ்சு, டச்சுக் கார்களும் உலகை ஆக்ரமித்தனர். வறுமை செய்த கொடுமை இது!

Xxxx subham xxxx
Tags- வறுமை, அறப்பளீசுர சதகம், கொடுமை, ஆட்சி மாற்றம், புரட்சி, பிரெஞ்சு , ரஷ்ய, பசி, பாவி, மணிமேகலை, நல்குரவு , பத்தும்