
Post No. 11,606
Date uploaded in London – 31 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.பிறந்த ஆண்டும்,
2.கிடைத்த செல்வமும்
3.கோள்களின் பலனும்
4.உண்டுவரும் மருந்தும்
5.குரு உபதிசித்த மந்திரமும்
6.தனக்கு நேர்ந்த மானக்கேடும்
7.கொடுத்த கொடையும்
8.பெண்களின் சேர்க்கையும்,
9.தன்னுடைய பெருமையும்
சொல்லாதே, சொல்லாதே, சொல்லாதே!
ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
Xxx
சொல்ல வேண்டியது 3
தன் நோயையும்,
பசியையும்,
தான் செய்த பாவத்தையும்,
பிறரிடம் சொல், சொல், சொல்.
ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ?
xxxx
அறப்பளீசுர சதகம் 39. மறைவும் வெளிப்படையும்
சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில்கிர கச்சா ரமும்,
தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகாமந்த் ரமும்,
புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி
புனையும்மட வார்க லவியும்,
புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது
புந்திக்கு ளேவைப் பதே
தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்
தன்பிணியை யும்ப சியையும்,
தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்
தஞ்செவியில் வைப்ப தியல்பாம்!
அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
xxxx
(இ-ள்.) அல்மருவு கண்டனே – (நஞ்சு தங்கியதால்) கருமை
பொருந்திய கழுத்தை உடையவனே!, மூன்று உலகும் ஈன்ற
உமைஅன்பனே – மூவுலகத்தையும்பெற்ற உமையம்மையார் காதலனே!,
அருமை ……. தேவனே!, சென்மித்த வருடமும் – பிறந்த ஆண்டும்,
உண்டான அத்தமும் – கிடைத்திருக்கும் செல்வமும், தீதுஇல் கிரகச்
சாரமும் – குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், தின்றுவரும் ஒளடதமும்- உண்டுவரும் மருந்தும், மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும் –உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், புன்மை அவமானமும் –(தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், தானமும் – (தான் பிறர்க்குக் கொடுத்த) கொடையும் பைம்பொன் அணிபுனையும் மடவார்கலவியும் – புதிய பொன்னாலான அணிகளை அணிந்த பெண்களின் சேர்க்கையும்,புகழ்மேவும் மானமும் – புகழ்பொருந்திய பெருமையும், இவை ஒன்பதும் –
(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தமது புந்திக்குள் வைப்பதே தன்மம்
என்று உரைசெய்வர் – தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும்
என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை), ஒன்னார் கருத்தையும் –
பகைவரின் நினைவையும், தன் பிணியையும் – தன் நோயையும், பசியையும்– (தன்) பசியையும், தான்செய்த பாவமும் – தான் இயற்றிய பாவத்தையும், இவையெலாம் – (ஆகிய) இவைபோன்றவற்றை, வேறு ஒருவர்தம் செவியில்வைப்பது இயல்பாம் – மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்)இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)
Xxxx

சுருக்கமான பதில்
9 விஷயங்களை ஏன் சொல்லக்கூடாது ?
ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காது ; உலகம் முழுதும் கண் திருஷ்டியில் நம்பிக்கை இருக்கிறது . நமக்கு தீமை ஏற்படலாம். மேலும் பொறாமைத் தீ வளரும் ; அதன் மூலமும் தீங்கு நேரிடலாம். நம்முடைய அகந்தையே நம்மைப் பாதிக்கலாம்
xxx
3 விஷயங்களை ஏன் சொல்ல வேண்டும் ?
செய்த பாவம் நோய் , பசி இவற்றைச் சொன்னால் பிறர் உதவலாம். நல்லாத்மாக்கள் நமக்காக பிரார்த்தனை செய்யலாம். பாவ மன்னிப்பு இந்துக்களின் எல்லா து திகளிலும் உள்ளது.அதைச் சொல்லாத ஆழ்வார்கள், நாயன்மார்கள், அடியார்கள் இல்லை . அதனால் பாப விமோசனம் கிடைக்கும்
பிற அறிஞர்களும் இதையே செப்புவர்; ஒப்பு நோக்குக:–
தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளைஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?
இதெல்லாம் கூடத் தவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.
இதனால்தான் அவ்வையாரும்,
உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)
வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை (குறள் 439)
பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.
Xxxx
மனு நீதி நவில்வது
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16
Xxxx
கூரம் பாயினும் வீரியம் பேசேல்
–கொன்றை வேந்தன்
(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)
குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்
பொருள்:
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்; இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்; அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!
Xxx
அவ்வையார் கதை
அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்; பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்; விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட பழம் என்று அறிவுறுத்தினான்.
இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–
பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
பொருள்:
பரந்த கிரணங்களை உடைய சூரியனையும் கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும். ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும் அச்சாணி போன்ற ஒரு சொல், சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.
Xxxx

வெளியிடக்கூடாதவை
குருவுப தேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்,
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தன்மம்,
அரியமந் திரம்வி சாரம் ஆண்மையிங் கிவைக ளெல்லாம்,
ஒருவருந் தெரிய வொண்ணா (து) உரைத்திடில் அழிந்து போமே.
——விவேகசிந்தாமணி
குரு தனக்கு தனியாக செய்த உபதேசம், பெண்களோடு தான் அனுபவித்த இன்பம், தன்னிடமுள்ள நற்பண்புகள், கல்வி, வயது, தான் செய்த தான தர்மம், குருவிடமிருந்து பெற்ற மந்திரம், ஞானம், தன் ஆண்மை நிலை ஆகியவற்றை ஒருவரும் அறிந்துகொள்ளாதவாறு பாதுகாக்கவேண்டும். வெளியே சொன்னால் அழிவு நேரிடும்.
xxxxx
சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!
இதோ ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம்:
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் ஸம்ஸ்க்ருதத் தனி ப்பாடல் திரட்டில் ஒரு ஸ்லோகம் இதோ-
சொல்லக்கூடாத விஷயங்கள் 5; அவையாவன:-
1.அர்த்தநாசம்- பொருள் இழப்பு;
2.மனஸ்தாபம் – கருத்து வேறுபாட்டால் மனத்தில் ஏற்பட்ட கசப்பு;
3.கிருஹே துஸ் சரிதானி- வீட்டில் நடந்த கெட்ட விஷயங்கள்; (Don’t wash dirty linen in public)
4.வஞ்சனம் – பிறர் நமக்கு செய்த துரோகம்;
5.அபமானம் – நாம் அவமானம் அடைந்த விஷயங்கள்.
‘அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச
வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாசயேத்’.
புத்திமான்கள் இவைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட மாட்டார்கள்
–சுபம்–
tags–சொல்லாதே, சொல்லக்கூடாத, விஷயங்கள் , அம்பலவாணர், மனு, விவேக சிந்தாமணி