
Post No. 11,610
Date uploaded in London – – 1 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீசுர சதகத்தில் மூன்று பாடல்களில் (40, 41, 42) அம்பல வாணர் சொல்லும் விஷயங்கள் நாம் அறிந்தவையே. ஆனால் சிவபக்தரான அவர், சிவ பெருமானை மிகவும் உயர்ந்த நிலையில் காட்டுவதற்கு கையாளும் உத்தி வியப்பைத் தரும் .இதோ அவருடைய யுகக்கணக்கு :-
2000 சதுர் யுகம் = பிரம்மாவின் ஒரு நாள் ;
பிரம்மாவின் ஒரு நாள் = 14 இந்திரர்களின் பதவிக் காலம் ;
பிரம்மாவின் 100 வயது = ஒரு கல்பம்
ஒரு கோடி பிரம்ம கல்பம் = திருமாலின் ஒரு நாள் ;
ஒரு கோடி திருமால்கள் வந்து போன காலம் = சிவனுக்கு ஒரு நொடி ;அதாவது சிவபெருமான் ஒரு சிரிப்பு சிரித்து தலையை அசைக்கும் காலம் என்பார் அம்பலவாணர்.
பிரம்மா, இந்திரன் பதவிகள் மாறக்கூடியவை என்று எல்லா புராணங்களும் செப்பும். ஆனால் இந்தக் கால அளவோ திருமாலு டைய ஆயுளோ வேறு எங்கும் காணப்படாதது. சிவனை உயர்த்தி வைக்க இப்படிச் சொல்கிறார். கால அளவை மறந்துவிட வேண்டும்.
Xxx
அடுத்த பாடலில் தூய்மை பற்றிச் சொல்லுவதும் பெரும்பாலோர் அறிந்ததே ;
குதிரைக்கு – முகத்தில் தூய்மை;
அந்தணர்/ முனிவர்க்கு – பாதம் தூய்மை; அதனால் பாத பூஜை செய்கிறோம்.
பசுமாட்டுக்கு – பின்புறம் சுத்தம்; அதனால் பின்புறத்தை தொட்டு வணங் குவதோடு பசு மூத்திரம், சாணத்தையும் பயன்படுத்துகிறோம்.
பெண்களுக்கு உடல் எல்லாம் தூய்மை என்பது மனு நீதி நூலில் உள்ளது.
கண்ணாடிக்கு பின்புறம் ரசம் பூசப்பட்டிருப்பதால் முன்புறம் மட்டுமே தூய்மை.
கடைசியில், பெண்கள் மாதவிலக்கின் போது தூய்மை பெறுவதும், உலோகத்தால் ஆன பொருட்கள், புளி , சாம்பல் மண், சாணம் முதலியவற்றால் சுத்தம் செய்யப்படுவதும் உலகியலில் உள்ள விஷயங்களே.
Xxxx
கடைசி பாடலில் எதை எதை எப்படி அடக்கலாம் என்பதில் முக்கிய விஷயம் வருகிறது.
மாட்டினை அடக்கி ஆள = மூக்கணாங் கயிறு;
யானையை அடக்கி ஆள = அங்குசம்;
பாம்பினை வசப்படுத்த = மந்திர தந்திரம்
குதிரை யை அடக்கி ஆள= கடிவாளம்
கயவர்களை அடக்கி ஆள = சவுக்கடி
கோபத்தை அடக்கி ஆள = அறிவு.
அதைச் சொல்லவே 5 எடுத்துக்காட்டுகளைத் தந்தார் .
கோபத்தை அடக்கினால் அபூர்வ சக்திகள் கிடைக்கும். அத்தோடு வனவிலங்குகளும் கூட தீங்கு செய்யாது.
இதை வள்ளுவரும் பாரதியும் செப்புகின்றனர்
Xxx
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.
Xxx
ஒருவனுக்கு கோபம் இல்லாவிடில் அற்புதங்களைச் செய்யலாம் என்கிறான் வள்ளுவன் ; ‘உள்ளியதெல்லாம் உடனெய்தும்’ (குறள் 309) என்பான். இதை இந்து சாது, சன்யாசிகளின் வாழ்வில் நாம் காண்கிறோம்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். -குறள் 309
உள்ளத்தில் கோபம் என்பதே தோன்றாவிடில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.
Xxx
நரகத்தின் 3 வாசல் (பகவத் கீதை 16-21 )
त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥
த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |
காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||
ஆத்ம நாசத்துக்கிடமான மூன்று நரக வாயில்கள்: காமம் , க்ரோதம்/ சினம், , பேராசை. ஆதலால், இம்மூன்றையும் விடுக
xxxxxxxxxxxxx
அறப்பளீசுர சதகம் 40. வானவர் கால அளவை
சதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்
சதுமுகற் கொருதின மதாம்!
சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்
தாமும்ஈ ரேழ்சென் றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்
மாண்டபோ தொருகற் பம்ஆம்!
மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய
மால்தனக் கோர்தி னமதாம்!
துதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய்ம றைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத் தணிமுடி
துளக்கிடும் கால மென்பர்!
அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்
கரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) தோகையோர் பாகனே – மயில் (போலும் உமாதேவியார்)
ஒரு பங்கிலுள்ளவனே!, அதிகம்உள பல தேவர் தேவனே – கூட்டமாக
உள்ள பலவகைப்பட்ட வானவர்க்கும் வானவனே!, தேவர்கட்கு அரசனே
– வானவர் தலைவனே! அருமை ……தேவனே!,
சதுர்யுகம் ஓர் இரண்டாயிரம்
பின்படின் சதுமுகற்கு ஒருதினமதாம் – (கிரேதாயுகம், திரேதாயுகம்,
துவாபரயுகம், கலியுகம் என்னும்) நான்கு கொண்ட யுகங்கள் இரண்டாயிரம்
கடந்தால் நான்முகனுக்கு ஒரு நாளாகும். சாற்றும் இத்தினம் ஒன்றிலே
இந்திர பட்டங்கள் தாமும் ஈரேழ் சென்றிடும் – கூறத்தக்க இந்த ஒரு
நாளிலே பதினான்கு இந்திர பதவிகள் கழிந்துவிடும், மதிமலியும்
இத்தொகையின் அயன் ஆயுள் நூறுபோய் மாண்டபோது ஒருகற்பம்
ஆம் – அறிவுமிகுந்த இந்தக் கணக்கின்படி நான்முகன் வயது நூறு கழிந்து இறந்தானானால் ஒரு கற்பம் எனப்படும், மாறிவரு கற்பம் ஒருகோடி
சென்றால் நெடியமால் தனக்குஓர் தினமதாம் – (இவ்வாறு) மாறிமாறி வரும் பிறமகற்பம் ஒருகோடி கழிந்தால் திருமாலுக்கு ஒரு நாளாகும், துதிபரவும்
இத்தொகையில் ஒருகோடி நெடியமால் தோன்றியே போய் மறைந்தால் –
துதிக்கத்தகுந்த இந்த எண்ணிக்கையில் ஒரு கோடி திருமால்கள் பிறந்து
மறைந்தால், நீ நகைத்து அணிமுடி துளக்கிடும் காலம் என்பர் – நீ சிரித்து
அழகிய திருமுடியை ஒருமுறை அசைக்கும் காலம் ஆகும் என்று அறிஞர் கூறுவர்.
Xxx
அறப்பளீசுர சதகம் 41. தூய்மை
வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;
மறையவர்க் குயர்பு னிதமோ
மலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்கு
மாசில்முற் புறம்அ தனிலே;
மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;
மிக்கமட மாத ருக்கோ
மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
மேவுவனி தையர்த மக்கும்
தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
தங்கம்ஈ யந்த மக்கும்
தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
சாரும்மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) மாமேரு வில்லியே – பெருமைமிக்க மேருவை
வில்லாக்கியவனே!, அனகனே – குற்றம் அற்றவனே!, அருமை ……..தேவனே!,
வாம் பரிதனக்கு முகமதனிலே அதிக புனிதம் – தாவிச்செல்லுங் குதிரைக்கு முகத்திலே மிகுதூய்மை, மறையவர்க்கு மலரடியிலே உயர் புனிதம் – மறையுணர்ந்த அந்தணர்க்கு மலரனைய அடிகளிலே மிகுதூய்மை, ஒளிகொள் கண்ணாடிக்கு மாசுஇல் முற்புறம் அதனிலே புனிதம் – ஒளியையுடைய கண்ணாடிக்குக் குற்றமற்ற முன்புறத்திலே தூய்மை, மேம்படும் பசுவினுக்குப்
பிற்புறத்திலே – உயர்ந்த ஆவுக்குப் பின் புறத்திலே (தூய்மை), மிக்கமட
மாதருக்கு மேனியெல்லாம் புனிதம் ஆகும் – சிறந்த இளம்பெண்களுக்கு
மெய்யெல்லாம் தூய்மையாகும், ஆசௌசமொடு மேவும் வனி
தையர் தமக்கும் – தீட்டுற்ற (பூப்படைந்த) பெண்களுக்கும், தாம்பிரம்
அதற்கும் – தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம் தமக்கும் – அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், புமனிதம் தரும் – தூய்மையைத் தருகிற,
வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை
புனிதம் ஆம்என்பர் – வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை தரும் என்று (அறிஞர்) கூறுவர்.
xxx
அறப்பளீசுர சதகம் 42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி
கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
கோத்துவச விர்த்தி கொள்வார்;
குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வார்;
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்;
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்;
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச வீர்த்தி கொள்வார்;
மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்து ஐயனே –
திருவடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரனைய திருவடியை
உடைய தலைவனே!, அருமை …… தேவனே!, கொடிய பொலி எருதை
இருமூக்கிலும் கயிறுஒன்று கோத்து வசவிர்த்தி கொள்வார் –
கொடுந்தன்மையுள்ள பொலிகாளையை (அதன்) இரண்டு மூக்கிலும் ஒரு
கயிற்றைக் கோத்து வசப்படுத்துவர், குவலயந்தனில் மதக்களிறதனை
அங்குசம்கொண்டு வசவிர்த்தி கொள்வார் – உலகத்தில் மதயானைகளை
அங்குசங்கொண்டு (தாக்கி) வசப்படுத்துவர், படியில்விட அரவை மந்திர
தந்திரத்தினால் பற்றி வசவிர்த்தி கொள்வார் – உலகில் நஞ்சுடைய நாகத்தை
மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர், பாய்பரியை நெடிய
கடிவாளமது கொடு நடைபழக்கி வசவிர்த்தி கொள்வார் – தாவும் குதிரையை
நீண்ட கடிவாளத்தைக்கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர், விடம்உடைய
துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு வீசி வசவிர்த்தி கொள்வார் –
நஞ்சுடைய தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர், மிக்க
பெரியோர்களும் கோபத்தை அறிவால் விலக்கி வசவிர்த்தி கொள்வார் –
பெரிய சான்றோர்களுங்கூடத் (தம்) கோபத்தை அறிவின் திறமையினால்
நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து (மனத்தை) வசப்படுத்துவர்..
–subham—-t
ags- யுகம், தூய்மை, அடக்கும் வழிகள் , அறப்பளீசுர சதகம்