
Post No. 11,619
Date uploaded in London – – 3 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வள்ளல் சீதக்காதி பற்றி தமிழர்கள் அனைவரும் அறிவர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி சம்பவத்தையும் பலரும் கேட்டிருப்பார்கள் . ஒருவர் சீதக்காதி இறந்த பின்னரும் அவர் சமாதிக்குச் சென்று வருத்தமுற்றபோது சமாதியின் உள்ளிருந்து சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டியதாகவும் , அதிலுள்ள விரல் மோதிரத்தை அவர் எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
(இது பற்றியும் சீதக்காதி யார், அவர் சமாதி எங்குள்ளது என்பது பற்றியும் முன்னரே ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் இங்கே பதிவுகள் ஏற்றப்பட்டுள்ளன )
இப்போது அதிகம் அறியாத ஒரு சம்பவத்தைக் காண்போம்.
நம் நாட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய பஞ்சத்தைப் பற்றி ஜே எஸ் சாண்ட்லர் என்ற மேனாட்டார் பின்வருமாறு எழுதியுள்ளார் :

“மறவர் நாட்டில் (சேதுபதி நாடு) தோன்றிய பஞ்சம் கி.பி. 1678-ம் ஆண்டிலிருந்து 1685-ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. புலிக் கூட்டங்கள் எங்கும் சுற்றி அலைந்தன. நூறு பேர் உள்ள ஒரு கூட்டத்திலும் ஒரு புலி புகுந்து ஒருவரைத் தாக்கித் தூக்கிக்கொண்டு போய்விடும். ஒரு ஊரில் ஒரு சில நாட்களுக்குள் எண்ணற்ற ஆடுகள் கொல்லப்பட்டதுமல்லாமல் எழுபது மனிதர்களும் மறைந்துவிட்டார்கள் . பீதியால் கலங்கிய மக்கள் இரவு நேரத்தில் தங்கள் வீடுகளை சுற்றி நெருப்பு வளர்த்துக் கொண்டு தூங்கினர். .இரவில் வெளியூர்ப் பயணம் செய்வதில்லை. பகலில் செல்வதும் பாதுகாப்பற்றதாய் இருந்தது.
மதுரை நகரம் பொலிவிழந்து காணப்பட்டது புலிகளும் ஓநாய்களும் நகரில் அச்சமின்றி உலவித் திரிந்தன .வெட்டுக்கிளிகள் பயிர்களை மொய்த்துத் தின்றுவிட்டன .நாடு முழுதும் நச்சுப் பூச்சிகள் பரவின.இறந்துவிட்டவர்கள் புதைக்கப்படாமல் ஆற்றின் கரைகளிலே எறிந்து விடப்பட்டிருந்தனர் .
இப்பஞ்ச காலத்தில் வாழ்ந்த சீதக்காதி வள்ளல், மக்கள் துயரைக் கண்டு மனம் புண்பட்டார். தம் மரக்கலங்களை நெல் விளையும் பிரதேசங்களான கோதாவரி தீரம், வங்காளம் முதலிய பிரதேசங்களுக்கு அனுப்பி, தனியங்களைக் கொள்முதல் செய்து பாண்டி நாட்டில் இறக்குமதி செய்தார். அவருடைய காரியக்காரர் , வந்த நெல்லை நல்ல விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை . களஞ்சியங்களில் குவிந்த நெல்லை வள்ளல், வாரி வாரி ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். அவருடைய காரியக்காரர் (Agents) குறுக்கிட்டும், அவர் விற்பனை செய்ய மறுத்துவிட்டார் . மக்களின் துயரைத் துடைத்த சீதக்காதியின் அன்னதானத்தை , படிக்காசுப் புலவர் பாடியுள்ளார்,
ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டுவராமலே அன்னதானத்துக்கு
மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே •
பொன்னுக்குப் பதிலாக நெல்லைச் சமமாக விற்கின்ற கொடிய பஞ்ச காலம்; அக்காலத்திலும் கூட இலவசமாக நெல்லை, ஏழைகளுக்கு வழங்கிய சீதக்காதியை தமிழ் கூறு நல்லுலகம் என்றும் மறக்காது

(இந்த சம்பவத்தை தமிழில் உணவு பற்றி புஸ்தகம் எழுதிய ஏ.கே செட்டியார் தந்துள்ளார்.1967-ம் ஆண்டு மதுரை TVS டி .வி. எஸ் . நிறுவனத்தார் வெளியிட்ட நல்ல புஸ்தகம் அது.)
வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் …
https://tamilandvedas.com › வள்…
3 Apr 2020 — சீதக்காதி மறைந்ததைக் கேட்டு பெரிதும் வருந்திய இன்னொரு புலவர் நமச்சிவாயப் …
Seethakathi | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › see…
2 Dec 2013 — A Tamil Muslim Miracle! சீதக்காதி, தனசெகரன் போட்டோ. Picture of Seethakkathi arch at Keelakkarai. Hits so far 210,636
–சுபம்–
Tags- சீதக்காதி, பஞ்சம் , நெல் தானம், படிக்காசுப் புலவர்,ஜே எஸ் சாண்ட்லர்