
Post No. 11,618
Date uploaded in London – 3 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுப்ரக் – மேவார் இளவரசர் கரன் சிங்கின் குதிரை!
ச.நாகராஜன்
அடிமை வம்சத்தின் முதல் அரசனான டெல்லி சுல்தான் குத்புதீன் அய்பக் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தான் என்று நாம் கேட்டிருக்கிறோம்.
இது உண்மையில் சாத்தியம் தானா? ஒரு ராணுவ தளகர்த்தர், அதுவும் 11 வயதிலிருந்தே குதிரை மீதிருந்து பல்வேறு போர்களைச் சந்திக்க ஆரம்பித்தவன் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறப்பானா?
கேள்வி சரியான கேள்வி தான். விடையைப் பார்ப்போம்.

குத்புதீன் ராஜஸ்தானத்தைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது மேவார் அரசனை அவன் கொன்றான். இளவரசன் கரன் சிங்கை சிறைப்பிடித்தான். கொள்ளையடித்த செல்வத்துடனும், இளவரசருடனும் அவரது குதிரையான சுப்ரக்கையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
லாகூரில் கரன்சிங் குத்புதீன் பிடியிலிருந்து தப்பப் பார்த்தார். ஆனால் அப்போது சிறைப்பிடிக்கப்பட்டார். குத்புதீன் அவரது தலையை வெட்ட ஆணையிட்டான். அது மட்டுமல்ல, இன்னும் அவமானப்படுத்தும் விதத்தில் இளவரசரின் தலையை போலோ விளையாட்டில் விளையாடவும் உத்தரவிட்டான்.
இளவரசரின் தலையை வெட்டும் தினத்தன்று வெட்டும் இடத்திற்கு, குத்புதீன் சுப்ரக் குதிரையின் மீது ஏறி வந்தான். சுப்ரக் தனது எஜமானனான கரன் சிங்கைக் கண்டவுடன் ஆக்ரோஷத்துடன் கட்டுப்பாடின்றி கனைத்து துள்ளிக் குதித்தது.
இதனால் குத்புதீன் குதிரை மேலிருந்து கீழே விழுந்தான். சுப்ரக் குத்புதீனை தனது காலால் உதைத்துத் தள்ளியது.
அதன் நீளமான குளம்புகள் குத்பூதின் மார்பிலும் தலையிலும் பலமாக உதைக்கப்படவே அவன் அந்த இடத்திலேயே இறந்தான்.
அனைவரும் விக்கித்துப் பிரமித்து விட்டனர். சுப்ரக் கரன்சிங்கை நோக்கி ஓடியது. ஒரே குழப்பம். இதைப் பயன்படுத்திய கரன்சிங், சுப்ரக் குதிரை மீது பாய்ந்து ஏறினார். குதிரை பறந்தது.
அதன் வாழ்க்கையின் மிக நீண்ட ஓட்டத்தை சுப்ரக் செய்தது!
மூன்று நாட்கள் நிற்காமல் தொடர்ந்து அது ஓடியது. கடைசியில் மேவார் கோட்டையின் வாயில் கதவருகில் வந்து நின்றது.
கரன் சிங் சுப்ரக் மேலிருந்து கீழிறங்கும் போது அது அசைவற்றுச் சிலை போல நின்றது.
கரன்சிங் அன்போடு தன் கரங்களால் சுப்ரக்கின் தலையைத் தடவிக் கொடுத்தார். ஆனால் சுப்ரக் கீழே விழுந்தது. கரன் சிங் திகைத்துப் போனார்.
தனது எஜமானனைக் காப்பாற்றி அவரை அவரது நாட்டிற்கு பத்திரமாகக் கொண்டுவந்த சுப்ரக் கீழே விழுந்து இறந்து விட்டது.
சுப்ரக்கின் கதை சாதாரணமான எஜமான விசுவாசம் என்பதையும் தாண்டிய ஒன்று.
இந்த உண்மைச் சம்பவங்கள் எல்லாம் நமது புத்தகங்களில் இடம் பெறாதே!
சுப்ரக்கைப் பற்றி நீங்களாவது இதைப் படிக்கும் முன்னர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
ஜெய் ஹிந்த்!
ஆதாரம் : (Courtesy – Commodore Amerendra nath Awasthi)
Thanks to : Truth weekly Vol 90 No 33 dated 9th December 2022
***