ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1 (Post.11,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,623

Date uploaded in London –  4 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி

ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1

ச.நாகராஜன்

இந்திய இதிஹாஸ புராணங்களில் கதையோட்டத்திற்கு முக்கியமாக அமைவதாக நாம் காண்பவற்றுள் முக்கியமானவை வரங்களும் சாபங்களுமே!

கதையோட்டத்தில் திருப்பமாக அமைவதாக நாம் பார்க்கும் இன்னொன்று, ஒரு முக்கிய மஹரிஷி வந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று வழி காட்டுவார்.

கதையோட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைவது ஆகாயவாணி மற்றும் அசரீரி ஆகும்.

கர்மபலன், புனர்ஜென்மம், இறைவனின் திருவருள், பிரபஞ்ச இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிய ரகசியங்களை அறிய ராமாயண, மஹாபாரதம் நல்ல துணை.

இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் விதி, மதி, பெரியோர்களின் ஆசி, மஹரிஷிகளின் வழி காட்டுதல், இறைவனின் அருள் உள்ளிட்ட பல விஷயங்கள் நமக்குப் புலனாகும்.

வால்மீகி ராமாயணத்தில்

82 வரங்கள்

 7 சபதங்கள்

61 சாபங்கள்

 7 ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம்.

இவை ஏராளமான உண்மைகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

சாபம் கொடுக்கப்பட்ட போது சாபத்தை வாங்கியவர் வருந்தும் போது அது எப்போது எப்படி தீரும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

ராமாயணத்தில் வரும் முக்கிய வரங்களையும், சாபங்களையும் இந்த நீண்ட தொடரில் பார்க்கப் போகிறோம்.

1. தசரத மஹாராஜன் – கைகேயி

இராமாயணத்தின் முக்கிய ஆரம்பமே கைகேயி, தசரதன் தந்த இரண்டு வரங்களைக் கேட்டதால் தான்!

சம்பராசுரன் என்ற அசுரனுடன் போர் தொடுத்த தசரதனுக்கு கைகேயி மிக லாகவமாக சாரத்தியம் செய்து அவனது உயிரைக் காப்பாற்றியதோடு அசுரனை வதைக்கவும் உதவினாள்.

இதனால் அசுரன் போரில் மடிந்தவுடன் தசரதன் கைகேயிக்கு இரு வரங்களைத் தந்தான்.  அவற்றை அவள் உடனே கேட்கவில்லை.

தசரதன் ராமனுக்கு முடிசூட்ட எண்ணியதும் மந்தரைக்குக் கோபம் பொங்கியது. சூழ்ச்சி ஒன்றை மேற்கொண்டு கைகேயிக்கு துர்போதனை செய்தாள். ‘பரதனுக்கு ஆட்சி, ராமனுக்கு வனம்’ என்ற திட்டத்துடன் அவள் கைகேயியைப் பார்த்துக் கூறினாள்:

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு  கொண்டு இராமன்

பெரு வனத்திடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்வதொன்றினால் செழு நிலம் எல்லாம்

ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்

                       (மந்தரை சூழ்ச்சிப் படலம் பாடல் 82)

“ஒரு வரத்தினால் பரதனுக்கு அரசைக் கேள்; இன்னொரு வரத்தினால் ராமனை 14 ஆண்டுகள் வனம் ஏகச் செய்”.

மந்தரையின் இந்த துர்போதனையை மனத்தில் ஏற்றிக் கொண்ட கைகேயி அப்படியே இரு வரங்களை தசரதனிடம் கேட்டாள்:

“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்

சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்

போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்

                    கைகேசி சூழ்வினைப்படலம் பாடல் 10

வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி நாரதரைப் பார்த்து சிறந்த உத்தம புருஷன் யார் என்று பல கேள்விகள் கேட்க நாரதர் ராமரைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார்.

பால காண்டத்தில் முதல் சர்க்கத்தில் 21ஆம் ஸ்லோகத்தில் இந்த வரங்கள் பற்றிய தகவலை நாரதர் தருகிறார்.

தஸ்யாபிஷேகம்சபாராந்தத்ருஷ்ட்வா பார்யார்த கைகேயி |

பூர்வ தத்தவரா தேவி வரமேனமயாசத ||

விவாசனம் ச ராமஸ்ய பரதஸ்யாபிஷேசனம் ||

அப்போது அபிஷேகத்திற்குரிய உபகரணங்களைப் பார்த்து முன்னமே கொடுக்கப்பட்ட வரமுடையவளான அவரது மனைவியான கைகேயி தேவி, தசரதரை, ஶ்ரீராமருக்கு சுயதேசத்தை விட்டு நீங்கலையும் பரதருக்கு பட்டாபிஷெகத்தையும் வரமாகக் கேட்டாள்.

தசரதன் அழுது புரண்டதும், ஒரு வரம் தருகிறேன் – பரதனுக்கு அரசாட்சி, ஆனால் அடுத்த வரத்தைக் கேட்காதே என்று மன்றாடியதும், பின்னர் வருத்தத்தால் உயிர் நீத்ததும் விரிவாக வால்மீகி மற்றும் கம்ப ராமாயணத்தில் காணலாம்.

ஆக ராமாயணத்தின் முக்கிய நிகழ்வு கைகேயி தனது இரு வரங்களைத் தருமாறு தசரதனிடம் கேட்டதே என்பது தெளிவாகிறது.

இனி அடுத்து இன்னும் பல வரங்களைப் பார்ப்போம்.

– தொடரும்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: