
Post No. 11,637
Date uploaded in London – 6 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜனவரி 6, 2023 – ஆருத்ரா தரிசன நன்னாள்.
1879ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன நன்னாளன்று (புனர்வசு நக்ஷத்திரத்தில்) அவதரித்த மஹரிஷி ரமணர். அவரை வணங்கிப் போற்றுவோம்.
ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? – ரமணர் யார்? – மஹரிஷியின் விளக்கம்!
ச.நாகராஜன்
பகவான் ரமண மஹரிஷி படைத்த அற்புதமான ஒரு நூல் உள்ளது நாற்பது.
இதில் நாம் அறிய வேண்டிய ரகசியங்கள் அனைத்தும் இருப்பதால் இதை ஓர்ந்து படித்து உணரல் வேண்டும்.
இதில் ரமண மஹரிஷி ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவு பட விளக்குகிறார் – 17ஆம் பாடலில்
பாடல் இதோ:
உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்
குடலளவே நான்ற னுணரார்க் – குடலுள்ளே
தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே
யின்னவர்தம் பேதமென வெண்
பாடலின் பொருள்;
தன்னை உணரார்க்கு – தன்னை உணராத அஞ்ஞானிக்கும்
உணர்ந்தார்க்கு – தன்னை உணர்ந்த ஞானிக்கும்
உடல் நானே – இந்த தேகமானது நானேயாகும்.
அதாவது தேகமே ஆத்மா ஆகும்.
தன் உணரார்க்கு – தன்னை அறியாத அஞ்ஞானிக்கு
நான் உடலளவே – நான் என்னும் ஆத்ம உணரு உடலின் அளவேயாகும்.
உடல் உள்ளே தன் உணர்ந்தார்க்கு – உடலின் உள்ளே தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கு ( ஜீவன் முக்தனுக்கு)
நான் தான் எல்லை அற ஒளிரும் – நான் என்னும் ஆன்மா எல்லையற்றுத் தன்மயமாய்ப் பிரகாசிக்கும்
இதுவே இன்னவர் தம் பேதம் என எண் – இந்த இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான் என்று அறிவாயாக.

ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் பொதுவாக உள்ளது தேஹமே.
இந்த தேகமே நானே ஆகும்.
தேகமே ஆன்மா ஆகும்.
ஆனால் தன்னை அறியாத அஞ்ஞானிக்கு, அதாவது சாமானியனுக்கு, நான் என்ற சொல்லின் உணர்வு தனது உடல் அளவுடன் நின்று விடுகிறது.
ஆனால் தன்னை அறிந்து உணர்ந்த ஞானிக்கோ நான் என்பது எல்லையற்று எங்கு தன்மயமாய் ப்ரகாசிக்கும் ஆன்மா ஆகும்.
இருவருக்கும் உள்ள வேறுபாடு இது தான்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அஞ்ஞானிக்கு உடலே நான்.
ஆனால் ஒரு ஞானிக்கோ உடலும் நானே!
ஒருமுறை, பகவான் ரமணரிடம் அமிர்த நாத யதீந்திரர் என்னும் பெரியவர் ஒருவர் வந்தார்.
‘ரமணன் யார்?’ என்று கேட்டு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்.
அதற்கு ரமணர் உடனடியாக அருளித் தந்த பதில் இது:
‘அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
வறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்’
இப்படி எங்கும் ஒளிரும் பரமாத்மனே தானாய் ஒளிர்வதை அவரே இந்தப் பாடல் மூலம் விளக்கி அருளி விட்டார்.
ஆனால் அன்றாடம் அன்பர்கள் வந்து பேசும் போது அவர், ‘நான் இதைக் கேட்டேனே, நான் அதை எழுதினேனே’ என்பார்.
இங்கு அவர் குறிப்பிடும் நான் என்ற சொல் அன்றாட வாழ்க்கைக்கு உரியதான நடைமுறை வழக்கில் இருக்கும் விவகாரச் சொல்.
ஆனால் உண்மையில் அவர் நான் என்று எப்போதும் தன்மயமாய் பிரகாசிக்கும் ஆன்மாவிலேயே உறைந்திருந்தார் என்பதுவே உண்மை.
பிரம்மத்தை அறிந்த ஞானி அதற்குப் பின்னர் நாம் கண்ணால் காணும் உலகைக் காண மாட்டான்.
ஆனால் ஒரு அஞ்ஞானியோ தனது கற்பனா உலகையே உண்மை என்று எண்ணுவதால் ஆதாரமான உலகை அறிய மாட்டான்.
இதுவே ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு.
ஒரு அஞ்ஞானி ஞானியாக முடியுமா?
முடியும் என்று அருளினார் மஹரிஷி.
எப்படி என்ற கேள்விக்கும் அவர் விடையைத் தெளிவாகத் தந்துள்ளார்.
‘நான் யார்’ என்ற விசாரத்தைப் பயிற்சியாக மேற்கொள்.
அப்போது உன்னை நீ யார் என்று உணர்வாய்”
இதுவே அவரது உபதேசம்.
இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இந்தப் பேருண்மையை, அறிதற்கு அரிய ரகசியத்தை அவர் எந்த நூலையும் படித்து அறியவில்லை; யாரையும் நாடித் தெரிந்து கொள்ளவில்லை.
அருணாசலனின் கருணையால் தன் அனுபவத்தால் சுயமாக உணர்ந்து கொண்டார்.
அதை கருணை மனத்துடன் உலகினர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
ரமண மஹரிஷி பிறந்த நாள் ; 30-12-1879 – திருவாதிரை நன்னாள்
ரமண மஹரிஷி சமாதி தினம் : 14-4-1950
ரமண மஹரிஷியின் ஜன்ம நக்ஷத்திரம் : புனர்பூசம்
***
Tags- ரமண மஹரிஷி