நடராஜர் பற்றி டாக்டர் நாகசாமியின் அரிய கண்டு பிடிப்பு (Post No.11,636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,636

Date uploaded in London – –  6 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

உலகப்புகழ் பெற்ற வரலாற்று அறிஞர், தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி இன்று நம்மிடையே இல்லாத போதும் அவர்தம் ஆராய்ச்சி அரிய பல தகவகல்களைத் தந்த வண்ணமுள்ளன. அவர் சிவபுரம் நடராஜர்  சிலையை லண்டன் கோர்ட்டில் வாதாடி வென்ற கதை அனைவருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லப்பபோவது வேறு கதை.

கோழி முதலில் வந்ததா?  முட்டை முதலில் வந்ததா ? ஆண் முதலில் பிறந்தானா , பெண் முதலில் பிறந்தாளா? என்பதெல்லாம் திருப்திகரமான பதில் சொல்ல முடியாத கேள்விகள் . இதே பாணியில் நடராஜர் சிலை முதலில் வந்ததா, ஆடல் வல்லானின் வர்ணனை முதலில் வந்ததா? என்பது அறிஞர் பெருமக்கள் விவாதிக்கும் ஒரு விஷயம்.

நடராஜர் சிலை என்பதை இன்று கல்லிலும் விக்ரகத்திலும் கண்டு உலகமே வியக்கிறது. இது சோழர் காலத்தில் வந்தது என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. “இல்லை இல்லை அதற்கும் பின்னர் வந்தது” என்பர் வெள்ளைக்காரர்கள் . கிபி.600-ல் ஞான சம்பந்தர் காலத்திலேயே நடராஜர் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததை தேவார பாடல்கள் பாடல்கள் மூலம் காட்டுகிறார டாக்டர் இரா. நாகசாமி. அவர் எழுதிய  ஆங்கில நூலில் (Tamil Nadu The Land of Vedas) இது பற்றி விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.

அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்தில் பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகர் இது பற்றி சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால் அவரும் ஆடல் வல்லானை, நட ராஜப் பெருமானை நாம் இன்று சிலையில் காண்பது போலவே வருணிக்கிறார் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர்.

முதலில் டாக்டர் நாகசாமி சொல்வதன் சுருக்கத்தைத் தருகிறேன்

கலை வரலாற்றை எழுதிய சில மேல்நாட்டார் (Art Historians)   நட ராஜ என்ற சொல் 14-ஆவது நூற்றாண்டினை ஒட்டி எழுந்தது . ஆகையால் இதில் வைதீக தொடர்பு (Nothing to do with Vedic Tradition)  — ஏதுமில்லை என்று கூறுவார்.கள் . ஆனந்த குமாரசாமி காட்டிய சில இலக்கியக் குறிப்புகளை பார்த்தும் கூட நடராஜ என்ற சொல் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது என்பர்.

சம்பந்தர்  தேவாரத்தில் நடனம் ஆடிய ராஜா என்றே குறிப்பிடுகிறார் . ஆகவே கி.பி.600க்கு முன்னதாகவே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .

இதோ திருப்புகலி திருத்தலப் பாடல்

திருப்புகலி –தேவாரம் 1-30-9

324  மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்

       தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி

       நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்

       பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9

நடம் ஆடிய வேந்தன் = நட  ராஜா ;

(வேந்தன்= ராஜா)

Xxxx 

சம்பந்தர் ஊரான சீர்காழியில், அவர் பாடிய பாடலில் சொக்க நிருத்த நடனம் பற்றிப்   பாடுகிறார். இது பரத முனி எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது  நாட்டிய சாஸ்திரத்தின் ஆறாவது  அத்தியாயத்தில் சுத்த ந்ருத்தத்தை , சிவ பெருமான், நந்தி கேஸ்வரருக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் அதை பரத முனிக்குக் கற்பித்ததாக காணப்படுகிறது. இதோ சீர்காழி திருத்தலப் பாடல் :-:-

திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்

சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே

புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்

போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்

தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்

கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்

காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே. 1-126-5

பின்னர் டாக்டர் சாமி, சுத்த நிருத்தம் , 108 கரணங்களில் இருப்பது பற்றி விளக்குகிறார். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சொக்க தாண்டவம் என்பதும் கி.பி.600க்கு முந்தியதுதான் என்பதை  சம்பந்தர் தேவாரம் காட்டுவதாச் சொல்கிறார்.

திருச்சிற்றேமம் என்னும் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல் அனைத்திலும் சிவன் ஆடலைக் குறிப்பிடுவதோடு அவருடைய முக்கியப் பணியே அது தான் என்றும் பாடுகிறார்:–

தேவாரம் மூன்றாம் திருமுறை

42. திருச்சிற்றேமம் – கொல்லிக்கௌவாணம்

3244.     நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்

குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-

சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்

                                            சிற்றேமத்தான்;

“இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே. 3-42-1

நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக்

கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-

படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;

கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!   3-42-3

Xxx

Shiva likes dance of others as well

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாகசாமி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.. சிவனுக்கு, தான் ஆடுவது மட்டும்தான் பிடிக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அழகான பெண்கள் பாடிக்கொண்டே ஆடுவதையும் சிவன் ரசிக்கிறாராம் . இதோ அந்தப் பாடல் .

2649.பங்கயம்மலர்ச்சீறடிபஞ்சு உறு மெல்விரல்அரவு அல்குல்,
மங்கைமார் பலர் மயில்குயில்கிளிஎன மிழற்றிய
                                                 
மொழியார்மென்
கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர்
                         ;
நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகிசங்கரன் திரு அருள் பெறல்
                                                    
எளிது ஆமே.

(அவருடைய ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்குமானால் அது என்னுடையதே)

xxxxx

என் கருத்து

சிவனை நாம் இன்று நடராஜராகக் காண்பதும் சிதம்பரத்தில் அவர் நடனமாடும் காட்சி  கொடுப்பதும்  சோழர் காலத்துக்கும் முந்தியது. அதாவது மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்துக்கும் முந்தியது.. அப்பர், சம்பந்தர் தேவாரம் மட்டுமின்றி காலத்தால் அவருக்கும் முந்தி வாழ்ந்த மாணிக்க வாசகர் பாடலிலும் இதே செய்தியைக் காண்கிறோம். குறிப்பாக மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பாடிய திருவெம்பாவையில் இந்த ஆடல் செய்தி வருவது டாக்டர் நாகசாமி சொன்ன செய்திக்கு மேலும் வலுவூட்டுகிறது

திருவெம்பாவை பாடல் 12

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

சிதம்பரத்தில் அவர் பாடிய பாடல் இது. கையில் அனலை வைத்துக்கொண்டு ஆடும் கூத்தன் என்பதால் நாராஜர் உருவத்தைக்கண்டே பாடியிருக்க வேண்டும் . இதோ மேலும் தெளிவான பாடல்,

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

பதப்பொருள் : காது ஆர் குழை ஆட – காதில் பொருந்திய குழை அசையவும்பைம்பூண் கலன் ஆட – பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும்கோதை குழல் ஆட – பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட – மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்,

இதில் உடல் பகுதிகள் மட்டுமின்றி அணிகலன்களின்  ஆட்டத்தையும் காண்கிறோம் ;  தற்போது நமக்குக் கிடைக்கும் நடராஜர் விக்ரகங்களில் அவர் சடை கூட இரு புறமும் பறப்பதைப் பார்க்கிறோம் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்கவாசகர்.

இது ஒருவர் கற்பனையில் உதித்த காட்சி அல்ல என்பது நால்வர் வர்ணனையிலும்  வருவதால், — தில்லைக்கூத்தன் சிலை — அதாவது நடராஜர் வடிவம்—- சம்பந்தர் காலத்துக்கும் முன்னரே இருந்திருக்க வேண்டும்  அதிகை வீரட்டானத்தில்கூட , ஆடும் காட்சியை சம்பந்தர் பாடுகிறார்.

    பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி   

    பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்   

    கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்   

    வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே.    1.46.7

இதில் வரும் அருமையான வரி, உமா பாட, சிவன் ஆடினார் என்பதாகும். அதிகை வீரட்டானத்தில் சம்பந்தர் பாடிய தேவாரம் இது.

ஆக சிவன் ஆடிய காட்சி, சுவற்றில் படமாகவோ கற்சிலையாகவோ, விக்ரகமாகவோ எங்கும் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்பர் பாடிய காலத்துக்குப் பின்னர் வந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் என்பதை அப்படியே காண முடிகிறது உலகிலேயே அழகான, அற்புதமான சிலை அது.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே..

1977ம் ஆண்டில் எங்கள் 45 பேரை டாக்டர் இரா நாகசாமி தமிழ்நாடு தொல்பொருட் துறை பேருந்தில் திருவனந்தபுரம் முதல் சிதம்பரம் வரை சுற்றிக் காட்டியபோது இச்சிலையின் முன் நின்று  அப்பர் தேவாரத்தை எடுத்துரைத்தார் ; கண்களை விட்டு அகலாத காட்சி அது.

ஆருத்ரா தரிசன நாளான இன்று அவன் ஆடலை மனக்கண் முன் கண்டு பாடிப் பரவுமோவாக

–subham—

Tags-  நடராஜா , நடனம் , வேந்தன், டாக்டர் நாகசாமி, , நிருத்தம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: