
Post No. 11,640
Date uploaded in London – – 7 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஐயர் , வேதம், சம்ஸ்க்ருதம் ஜிந்தாபாத்- அம்பலவாணர் சொன்ன கசப்பான உண்மை!!
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணர் சொல்கிறார் :
மலையில் உயர்ந்தது பொன்னிற மேரு ;
நதியில் உயர்ந்தது கங்கை;
ஒளியில் சிறந்தது சூரியன் ;
ஜாதியில் உயந்தவர் பிராமணர்;;
மொழிகளில் உயர்ந்தது சம்ஸ்க்ருதம் ;
நூல்களில் உயர்ந்தது வேதம் ;
தானங்களில் சிறந்தது அன்னதானம் ;
தெய்வங்களில் உயர்ந்தவர் அன்னையும் பிதாவும்!
இதில் ஒன்றை ஒப்புக்கொண்டால் பிறவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி சூரியனையும், கங்கையையும் , மேருவையும், தாய் தந்தையரையும் சொன்ன நொடியில் ஐயரையும் வேதத்தையும், ஸம்ஸ்க்ருதத்தையும் உயரத்தில் தூக்கிவிடுகிறார் அம்பலவாணர். வள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும், பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதத்தைவிட முக்கியமானது என்றும் சொல்கிறான். தேவாரம் திருவாசகம் போலவே ஆவினையும் அந்தணரையும் இணைத்தே பாடுகிறான் . ஆனால் ஜாதியை மறந்துவிட்டு, ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவர் உயர்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். மேலும் சம்ஸ்க்ருத மொழியின் பழமை கருதி அம்பலவாணர் பாராட்டி இருக்கலாம். துருக்கியில் பொகஸ்கோயில் கி.மு 1380 தேதியுள்ள களிமண் கல்வெட்டில் கியூனிபார்ம் லிபியில் சம்ஸ்க்ருதம் உள்ளது. தமிழிலோ அதற்கு 1300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது. வேதங்களின் பழமையும் கி.மு 1500 என்றும் தமிழின் தொல்காப்பியம் கி.மு முதல் நூற்றாண்டு என்றும் பெரும்பாலான அறிஞர் கூறுவதை ஒட்டி அம்பலவாணரும் எழுதினார் போலும்.
xxxx
முதல் பாடலில் வள்ளுவர் சொன்ன கருத்தையே சொல்கிறார்; ஊழில் பெருவலி யாவுள? விதியை வெல்ல முடியாதே! என்கிறார். சிலப்பதிகாரத்தின் கருத்தும் அதுவே; ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை வலியுறுத்தவே காவியத்தை எழுதியதாக இளங்கோ சொல்கிறார்.
Xxxx
இதை பிறர் சொல்லுவதுட ன் ஒப்பிடலாம் :
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பறங்கியை துறை என்ற காலமும் போச்சே – பாரதியார்
xxx
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே –பாரதியார்
xxx
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலை ஈடே –பாரதியார்
xxx
பிராமணர் பற்றி புத்தர்
ஒருவன் அமைதியான தூய்மையான, தன்னடக்கமான வாழ்க்கை வாழ்ந்து எந்த உயிருக்கும் தீங்கிழைக்காவிடில் அவன்தான் பிராமணன்; அவன்தான் சந்நியாசி; அவன்தான் பிக்ஷு – தம்ம பதம், ஸ்லோகம் 142; புத்தர் செப்பியது
ஒரு சன்யாசியும் பிராமணரும் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுபட்டுவிடுகிறார்கள் . அவர் தாயாரையும் தந்தையையும் கொலை செய்திருந்தாலும் , இரண்டு நல்ல அரசர்களைக் கொலை செய்திருந்தாலும், ஒரு பெரிய ராஜ்யத்தையே அழித்திருந்தாலும் அவர்கள் அந்த பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள் — தம்ம பதம், ஸ்லோகம் 294; புத்தர் செப்பியது .
ஒரு பிராமணனுக்கு தீங்கு செய்யாதே; பிராமணரும் எவருக்கும் தீங்கிழைக்கக்கூடாது அப்படித் தீங்கிழைப்பவனுக்கு என்ன நேருமோ; அடடா , என்ன நேருமோ.- தம்ம பதம், ஸ்லோகம் 389; புத்தர் செப்பியது.
Xxxx
விவேக சிந்தாமணி பாடல்கள்
மாதம் மும்மாரி பெய்த காரணம்
வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை,
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை,
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை,
மாத மூன்று மழையெனப் பெய்யுமே.
xxxx
விதி மாறாதது
முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும், தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம், மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.
Meaning
இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான். அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!
xxxx
வினைமாற்றும்
வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம்,
தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க,
ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ,
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ.
Meaning
நல்ல வாழ்வ வந்த போது மனதில் (அளவிற்கதிகமாக) மகிழ்ச்சி கொள்ளவேண்டாம். விவேகமுள்ளவர் விதியினால் தாழ்வானது வந்தபோதும் மனம் தளரமாட்டார். வினைப்பயனை யாராலே மாற்றமுடியும், பரம ஏழையாய் இருந்தவர் பல்லக்கில் ஏறுவதை பார்த்ததில்லையோ!
Xxxx
அந்தணர் அறம் மாறினால்..
இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,
மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,
சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,
அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.
அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?
xxxx
ஒழுக்கம் உயர்வு தரும்
ஆசாரம் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம்,
ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவர் ஆவார்,
ஆசாரம் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப்,
பேசார்போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.
நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.
Xxxx
சிலப்பதிகாரத்தின் ஒட்டுமொத்த அறிவுரை
1. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
3. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
xxxxxx

அறப்பளீசுர சதகம் 54. ஊழ்வலி
கடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
காணும் படிக்கு ரைசெய்வர்,
காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்
காயத்தின் நிலைமை அறிவார்,
விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
விடாமல் தடுத்த டக்கி
மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
விண்மீதி னும்தா வுவார்,
தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
தொகையான சித்தி யறிவார்,
சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது
துடைக்கவொரு நான்மு கற்கும்
அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இ-ள்.) அண்ணலே – தலைவனே!, அருமை ……. தேவனே!, கடல்
அளவு உரைத்திடுவர் – கடலின் பரப்பைக் கணக்கிட்டுக் கூறுவர்,
அரிபிரமர் உருவமும் காணும் படிக்கு உரைசெய்வார் – திருமால்
நான்முகன் ஆகியவரின் வடிவத்தையும் காணுமாறு விளக்கிக் கூறுவர்,
காசினியின் அளவு பிரமாணமும் சொல்லுவார் – உலகின் எவ்வகை
அளவையும் விளக்குவர். காயத்தின் நிலைமை அறிவார் –
உடற்கூறுபாட்டை உணர்வர், விடல் அரிய சீவநிலை காட்டுவார் –
விடுதற்கரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர், மூச்சையும் விடாமல்
தடுத்து அடக்கி மேன்மேலும் யோகசாதனை விளைப்பார் – மூச்சை
விடாமல் தடை செய்து அடக்கி மேலும் மேலும் யோகசித்தியைச் செய்வர்,
விண்மீதினும் எட்டித் தாவுவார் – வானத்திலும் எழும்பித் தாவுவர், தொடல்
அரிய பிரமநிலை காட்டுவார் – அடைய இயலாத பிரமத்தின் நிலையையும்
காண்பிப்பர், எண்வகைத் தொகையான சித்திஅறிவார் – எட்டு வகையான
எண்ணிக்கையுடைய சித்தியையும் தெரிவர் (எனினும்), சூழ்வினை
வரும்போது சிக்கி உழல்வார் – சூழும் பழைய வினைப்பயன் வரும்போது
அதனில் அகப்பட்டுத் தவிப்பர், ஒரு நான்முகற்கும் அது துடைக்க அடைவு
அல – ஒப்பற்ற பிரமனுக்கும் அதனை அழிக்கும் வழி இல்லை, என
அளவுஇல் பலநூல் தெரிந்து சொலும் – என்று கணக்கற்ற பலநூல்கள்
அறிந்து கூறும்.
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று – சூழினும் தான்முந்
துறும்’ என்றார் வள்ளுவர்.
xxxxxxxxxxxxxxxxx
அறப்பளீசுர சதகம் 55. உயர்வு இல்லாதவை
வேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக
மேருவுக்கு அதிக மலையும்,
வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக
மேதினியில் ஓடு நதியும்
சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,
சூழ்கனற் கதிக சுசியும்
தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக் குயர்ந்த கலையும்,
ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்த னிலும்ஓர்
அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்
ஆராய்ந்த பேரு ரைசெய்வார்!
ஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
(இ-ள்.) ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்
அண்ணலே. கதிரவன் நான்முகன் வானவர் முனிவர் முதலோர் வாழ்த்த
வரும் முதல்வனே!, அருமை…..தேவனே!, வேதியர்க்கு அதிகம்ஆம் சாதியும்
– மறையவர்களுக்கு மேலான சாதியும், கனக மகமேருவுக்கு அதிக மலையும்
– பொன்மயமான மாமேருவினும் பெரிய மலையும், மேதினியில் வெண்திரை
கொழித்துவரு கங்கா நதிக்கு அதிகம் ஓடும் நதியும் – உலகிலே
வெண்மையான அலைகளை வீசி ஓடும் கங்கையாற்றினும் மேலாக ஓடும்ஆறும், சோதிதரும் ஆதவற்கு அதிகம்ஆம் காந்தியும் – ஒளியைத் தரும்
ஞாயிற்றினும் மேம்பட்ட ஒளிப்பொருளும், சூழ்கனற்கு அதிக சுசியும் –
சூழும் தீயினும் மேம்பட்ட தூய பொருளும்,
.தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும் – தூயவரான பெற்றோரினும்
மேலான தெய்வமும், சுருதிக்கு உயர்ந்த கலையும் – வேதத்தினும்
மேம்பட்ட நூல்களும், ஆதி வடமொழி தனக்கு அதிகம்ஆம் மொழியும்,
– முதன்மையான வடமொழியினும் உயர்ந்த மொழியும், நுகர் அன்ன
தானந்தனினும் ஓர் அதிக தானமும் – உண்ணப்படும் உணவுக்கொடையினும்
உயர்ந்த ஒரு கொடையும், இல்லையென்று பலநூல் எலாம் ஆராய்ந்தபேர்
உரை செய்வார் – இல்லையெனப் பல நூல்களையும் ஆராய்ச்சி
செய்தவர்கள் கூறுவார்கள்.
Xxxxx
Tags–பிராமணர், சம்ஸ்க்ருதம், உயர்வு, விதி, ஊழ்வினை , அம்பலவாணர்