
Post No. 11,645
Date uploaded in London – – 8 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கீரைத் தோட்டத்தை தனது மருந்துப் பெட்டி என்று பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Russian writer, novelist Leo Tolstoy) கூறியுள்ளார்
‘சற்றே துவையல் அரை தம்பி, ஓர் பச்சடி வை,
வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
காயமிட்டு கீரை கடை, கம்மெனவே மிளகு
காயறைக்க வைப்பாய் கறியே ’
என்று. சிவஞான முனிவர் தன் சமையற்காரனுக்குச் சொன்னதாக உணவு பற்றிய புஸ்தகத்தில் உள்ளது
பாடலின் பொருள்:
துவையல், வற்றல், தயிர்ப் பச்சடி , பெருங்காயம், மிளகுடன் கீரை- —இன்றைய சமையல்
கீரைக்கு அவ்வளவு பெருமை .

சுமார் 50 வகைக்கீரைகள் உள்ளன. பூமிக்கு அடியில் வளரும் கிழங்கு வகைத் தாவரங்களின் மேலேயும் கீரை போன்ற இலைகள் இருக்கும். வட தேசத்து மக்கள் இவைகளையும் பயன்படுத்துவர் . தமிழர்கள் அவ்வளவாக இவைகளை பயன்படுத்துவதில்லை அவர்கள் கீரை என்று பெயருடைய 20, 30 வகை களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் இதோ 50 வகைக் கீரைகள்
அகத்திக் கீரை ,அரைக் கீரை ,கக்டுகுக் கீரை ,கலவன் கீரை ,
கரசணாங் கனிக் கீரை ,கவா கீரை ,காசினிக் கீரை ,காட்டுக் கீரை ,
குப்பமேனிக் கீரை ,கொத்தமல்லிக் கீரை ,கோயாக் கீரை ,கோசுக் கீரை
சக்கரவர்த்திக் கீரை ,சரவல்லைக் கீரை ,சர்ச்சாக் கீரை ,சாக்வாட் கீரை, சிறு கீரை ,செலரிக் கீரை ,தண்டுக் கீரை ,தூதுக் கீரை ,தூதுவளைக் கீரை, நச்சுக் கொட்டைக் கீரை ,நூல்கோல் கீரை ,பச்சரிசிக் கீரை ,பசலைக் கீரை,
பருப்புக் கீரை , பன்னாக்கீரை , பசரிக்கீரை , பச்சடி க்கீரை,
புளியாரக்கீரை, புண்ணாக்குக்கீரை, புளிச்சைக்கீரை,
பொன்னாங்கண்ணி க்கீரை, மணத்தக்காளி க்கீரை,
மணல் கீரை, மின்மினிக்கீரை, முளை க்கீரை,
முள்ளங்கி க்கீரை, முருங்கைக்கீரை, முர்ராயா க்கீரை,
மொடக்கத்தான் கீரை, வதநாராயணன் கீரை,
வீதி க்கீரை, வேலை க்கீரை, வெள்ள க்கீரை, வெள்ளரிக்கீரை,
லெட்டஸ் கீரை , லூனி க்கீரை, ரேசலிக்கீரை, வேப்பிலை.
வேப்பிலையை ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்து இருக்கிறோம். அமைப்பில் கீரை வகைகளைப் போன்றதாகவே வேப்பிலையும் இருக்கிறது. முற்றிய இலைகளிலும் கொழுந்து இலைகளிலும் புரதங்கள், சுண்ணாம்புச் சத்து , இரும்பு, வைட்டமின் ஏ ஆகியவை அதிகம் இருக்கின்றன.. இவ்வகையில் கொத்தமல்லிக் கீரைக்கும், தண்டுக்கீரைக்கும், பசலைக்கீரைக்கும் விட இது உயர்வானது. என்று பிரபல உணவு நிபுணர் டாக்டர் அக்ராய்டு கூறியுள்ளார் .
ஒரு நபருக்குத் தினந்தோறும் வைட்டமின் ஏ 5000 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) தேவை. ஒரு வேலை, முருங்கைக் கீரை சாப்பிட்டால், அதில் வைட்டமின் ஏ 3260 இன்டர்நெஷனல் யூ னிட் (I .U .) கிடைக்கிறது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
பச்சைக் கீரைகளை சரியானபடி உபயோகிக்கத் துவங்கிவிட்டால், உணவைப்பற்றி வழக்கமாக இருந்துவரும் அபிப்ராயங்கள் எல்லாம் புரட்சிகரமான மாறுதல் அடைந்துவிடும் . பால் சாப்பிடுவதால் என்ன கிடைக்கிறதோ அதே சத்துக்களைப் பச்சைக்கீரைகள் அளித்துவிடும் – என்று பிரபல ஆங்கில டாக்டர் ஒருவர் தம்மிடம் கூறியதாக காந்தி அடிகள் குறிப்பிட்டுள்ளார் .
ஆதாரம்- உணவு, ஏ.கே செட்டியார் தொகுத்தது., டி .வி.எஸ் . நிறுவனம் வெளியிட்டது ; முதல் பதிப்பு 1967.

XXXX
MY AUTOBIOGRAPHY
கட்டுரையின் நீளம் குறைவாக இருப்பதால் நைஸாக கொஞ்சம் சுய புராணத்தையும் நுழைக்கிறேன் .
நாங்கள் பணக்காரர்கள் இல்லை. நடுத்தரக் குடும்பம்தான்; கடவுள் புண்ணியத்தில் கடன் வாங்கியதில்லை. பிறருக்குக் கடன் உதவி செய்தே வாழ்ந்தோம். எனது தந்தை தினமணி மதுரை பொறுப்பாசிரியர் வெ . சந்தானத்தைக் காண எல்லா சாமியார்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர் ஏ.கே செட்டியார்.. நாங்கள் மதுரை வடக்குமாசிவீதியில் கிருஷ்ணன் கோவில் அருகில் வசித்து வந்தோம். அது பழங்கால வாடகை வீடு. இருந்தபோதிலும் சிருங்கேரி மஹாஸன்னிதானம் , புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள், கோபால கிருஷ்ண பாகவதர் , ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா முதலிய பல புண்ய சீலர்கள் விஜயம் செய்த வீடு.
ஏ .கே செட்டியார் வந்தாலும் சரி, பிரபல எழுத்தாளர் எழுத்து சி சு. செல்லப்பா வந்தாலும் சரி , மணிக்கொடி பி.எஸ்.ராமையா வந்தாலும் சரி முதலில் குமரி மலர், எழுத்து பத்திரிகைகளுக்கு வருட சந்தாவை என் தந்தை கொடுத்துவிட்டு, காப்பி சாப்பிடுங்கள் என்று உபசரிப்பார். என் அம்மா போடும் காப்பி உலகப் பிரசித்தம் .
முதல் நாள் இரவு நாங்கள் சகோதர்கள், போட்டி போட்டுக்கொண்டு கையால் அரைக்கும் சின்ன மிஷினில் காப்பிப்பொடி அரைத்து வைப்போம். காலை 5 மணிக்கு எதிர்த்த வீட்டு யாதவர்கள் வந்து “பால் சொம்பில் தண்ணீர் இல்லை! பாத்துக்கொள்ளுங்கள்! என்று கவிழ்த்துக் காண்பித்துவிட்டு பால் கறந்து கொடுப்பார்கள். இவற்றுடன் அம்மாவின் கை மணமும் சேர்ந்தால் காப்பியின் சுவை குறையுமா?

ஏ கே செட்டியார் மிக உரிமையுடன் , அம்மா, இட்டிலி இருக்கிறதா? என்று வினவுவார். பிராமணர் வீட்டில் இட்டிலிக்கு என்ன குறைவு? என் அம்மா சூடாக வார்ப்பார் . அம்மா, அதில் நல்ல நெய் தடவிக் கொண்டு வாருங்கள் என்று மேலும் உரிமையுடன் கேட்பார் .
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
இதற்குள் சும்மா இருக்க மாட்டார். எங்கள் வீடோ பழங்கால வாடகை வீடு. எல்லா மூலைகளிலும் ஒட்டடை தொங்கிக்கொண்டு இருக்கும்.
எங்களில் ஒருவரை அழைத்து, “தம்பி ஓட்டைக்கம்பு கொண்டு வா” என்பார். எங்களுக்குப் புரியாது. அவரோ பஞ்சுக்கும் மேலான தூய வெள்ளை வேட்டி , வெள்ளைச் சட்டை அணிந்திருப்பவர். தயக்கத்துடன் மாசும் தூசியும் படைத்த ஒட்டடை கம்பைத் தேடிக் கண்டு பிடித்துக்கொண்டு ஒடி வருவோம் . அவரே ஒட்டடை அடிக்க ஆரம்பிப்பார். நாங்கள் “ஐய்யய்யோ எங்களிடம் கொடுங்கள் நாங்கள் செய்கிறோம்” என்று ஆரம்பிப்போம்.. அதாவது , இதைச் செய், அதைச் செய்யுங்கள் என்று கட்டளை இடாமல் மற்றவர்க்கும் கற்பிக்கும் காந்தீய வழி அது . இதற்குள் இட்டிலியும் நெய் மணக்க வந்து விடும். காப்பியுடன் சாப்பிட்டு விடை பெறுவார்.
எல்லோரிடமும் நாம் கற்க முடியும். அடுத்த முறை யாராவது வீட்டிற்கு வருகிறார் என்று அறிவிப்பு வந்தால் வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு சுத்தம் செய்வோம்.
அப்பாடா , யாராவது வந்தால்தான் வீடே சுத்தம் ஆகிறது என்று சொல்லி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்வோம்.
(ஒரு ரகசியத்தைக் காதோடு சொல்கிறேன்; லண்டனில் நான் இப்போதும் அதையேதான் செய்கிறேன். யாராவது வருவதாகத் தெரிந்தால்தான் வீடு வீடாக இருக்கும். மற்ற நேரங்களில் அது ‘மார்க்கெட்’ போல காட்சி தரும் )
-subham–
Tags- துவையல், கீரை, சிவஞான முனிவர், ஏ கே செட்டியார், 50 வகைக்கீரைகள்