
Post No. 11,648
Date uploaded in London – 9 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 42
தமிழ் ஔவைக்கு நெல்லிக் கனி தந்த வள்ளல் அதிகமான்!
ச.நாகராஜன்
தகடூரைத் (இன்றைய தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான்.
ஒரு நாள் பருத்திப்பள்ளிக் காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் அவன் சஞ்சரித்தான்.
அப்போது ஒரு துறவி அவனைப் பார்த்து அவனிடம் ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்து, “இந்த நெல்லிக்கனியை உண்பவருக்கு நரை திரை வராது; அவர் நீண்ட நாள் உயிர் வாழ்வார். இதை நீ உண்பாயேல் நெடு நாள் வாழ்ந்திருந்து புலவர்களை ஆதரித்து, தமிழை நன்கு வளர்த்து, நீதியோடு நாட்டைக் காக்க முடியும்” என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட அதிகமான் தன்னிடம் அதை பத்திரமாக வைத்திருந்தான்.
ஒரு நாள் ஔவையார் அவனிடம் வரவே, அந்தக் கனியை ஔவையிடம் கொடுத்து அதன் வரலாற்றையும் கூறி, “ அம்மையே! இதை உண்டு நீண்ட நாள் வாழப் பெற்று பல அரிய தமிழ் நூல்களை இயற்றி உலகத்திற்கு அருள் பாலிப்பீராக!’ என்று வேண்டினான்.
சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்ட வரிகள் இந்த வரலாற்றை உரைக்கிறது:
“மால் வரைக் –
கமஞ் சூழ் சாரற்க வினியநெல்லி
யமிழ்து விளை தீங்கனி யௌவைக் கீத்த
வுரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக் கடற்றானை யதிகனும்”
அடுத்து கரபுரநாதர் புராணம் என்ற நூலில் கீழ்க்கண்ட பாடல்களும் இந்த வரலாற்றை விரித்துரைக்கிறது:
“பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற்
காதலாய்க் கருங்காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து
வீதலின் மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்
தீதிலாக் கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி
இந்த வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி சயமென்னோ
சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங் களி கூர்ந்தே
அந்த நாட் பிரமன்ற்ரு மலையிதி லதிசய சஞ்சீவி
எந்த நாட்களு முளதிதை யுட்கொள நரைதிரை யிவை மாற்றும்”
இங்கு சேரலன் என்று பாட்டு குறிப்பிடுவது அதிகமானையே.
இவனது நாட்டில் கரும்பைக் கொண்டு வந்து நட்டார்கள் என்பதை சிறுபாணாற்றுப்படை இப்படிக் குறிப்பிடுகிறது:
“அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெரு மரபிற் கரும்பிவட்டத்து” – சிறுபாணாற்றுப்படை
கரூரை ஆண்ட புகழ்ச்சோழர் ஒரு முறை, ‘நமக்குத் திறை கொடுக்க மறுக்கும் அதிகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்ட பொழுது அதற்கு பதிலாக, ‘ஓங்கு எயில் சூழ் மலையில்’ உறையும் அதிகமானைக் குறிப்பிடுவதை புகழ்ச்சோழர் புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது:
“ஆங்கவன்யா ரென்றருள் அதிகனவ னணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான்” – புகழ்ச்சோழர் புராணம்
பதிற்றுப்பத்து தரும் தகவல் இது:
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை
பல்வேற் றானை யதிகமான் – (பதிற்றுப்பத்து)
அதியமான் ஒரு முறை பாண்டியன் நெடுஞ்சடையனோடு போர் புரிந்தான்.
இந்தப் போர் பற்றி நெடுஞ்சடையனது தான சாஸனம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது:
மாயிரும் பெரும் புனற் காவிரி வடகரை
ஆயிரவேலி அயிரூர் தன்னிலும்
புகழி யூருந் திகழ்வே லதியனை
ஓடுபுறங் கண்டவன்
இதில் கொங்கில், காவிரி வடகரையில் வாளவந்தி நாட்டின் உபநாடு ஆன விமலை நாட்டு அயிலூரூ – ரிலும் , அக்காவிரியின் தென்கரையில் கிழங்கு நாட்டுப் புகழியூரிலும் அதியன் போர் புரிந்திருக்கிறான் என்பது பெறப்படுகிறது.
இது, கொங்குமண்டல சதகம் பாடல் 80 இல் வலியுறுத்தப்படுவதையும் காண்கிறோம். நாமக்கல்லில் இந்த சாஸனம் உள்ளது.
ஆகவே அதியனின் ஆட்சி இங்கும் பரவி இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட அரும் வள்ளலைப் பற்றி கொங்குமண்டல சதகம் 42ஆம் பாடலில் பெருமையுடன் குறிப்பிடுகிறது.
பாடல் :
சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே
பொருள் : நெடுநாள் வாழும் படி சாதலை நீக்கும் அருமையான நெல்லிக் கனிதன்னை தமிழ் வளர்க்கும் ஔவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து நட்டு உற்பத்தி செய்தவனின் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய மலையரணை உடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.
***