
Post No. 11,652
Date uploaded in London – 10 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 10 (85 முதல் 94 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
85) சிதம்பரம்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவு மருள்வாயே
பாடல் எண் 484 – ‘தாது மாமலர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காமக்கடலில் தினமும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மௌன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள்வாயாக!
86) சிதம்பரம்
விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரி பாருமை யாசி வாபத மருள்வாயே
பாடல் எண் 486 – ‘நீல மாமுகில்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே மூழ்கி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக!
87) சிதம்பரம்
அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட அருள்வாயே
பாடல் எண் 489 – ‘இணங்கித் தட்பொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தைகைய பொது மகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக!
88) சிதம்பரம்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற் கருள்வாயே
பாடல் எண் 494 – ‘தறுகணன் மறலி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ
அருள்வாயாக!
89) சிதம்பரம்
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை யருள்வாயே
பாடல் எண் 507 – ‘நீலக் குழலார்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அருள்வாயாக!
90) சிதம்பரம்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ மருள்வாயே
பாடல் எண் 510 – ‘மச்ச மெச்சு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டு இன்பத்தைத் தந்து அருள்வாயாக!
91) சிதம்பரம்
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர் வருள்வாயே
பாடல் எண் 514 – ‘முத்த மோகன‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சித்தி எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும் கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக!
ஆறுமுகங்களுக்கான விளக்கங்கள் ஏராளம் உள்ளன.
ஏறு மயில் ஏறி எனும் பாடலைக் காணலாம்.
சக்திகள் ஆறு : ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி
பீஜங்கள் ஆறு : அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை
அத்துவாக்கள் ஆறு : மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்
இறைக்குணங்கள் ஆறு : ஸர்வக்ஞத சக்தி – பூரண அறிவுடன் இருக்கும்.
நித்ய திருப்தி சக்தி – எல்லா அனுக்ரகமும் புரியும்.
அநாதிபோத சக்தி – எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும்.
ஸர்வ சுதந்திர சக்தி – ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும்.
அலுப்த சக்தி – ஐந்தொழிலைப் புரியும்.
அநந்த சக்தி – எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.
குணங்கள் ஆறு – ஐஸ்வர்யம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.
92) சோலை மேவிய குன்று
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே
பாடல் எண் 516 – ‘வஞ்சமே கோடி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள்வாயாக!
93) கயிலை மலை
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார மருள்வாயே
பாடல் எண் 517 – ‘திருநிலம் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகைய கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்னு என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக!
94) கயிலை மலை
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத மருள்வாயே
பாடல் எண் 518 – ‘தேனுந்து முக்கனிகள் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவ ஞானம் பெருகி வரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோக்ஷத்தில், அடியேன் எந்த நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடையைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***