
Post No. 11,654
Date uploaded in London – – 10 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எந்த நாளில் புத்தாடை அணியலாம் என்று அம்பலவாணர், முதல் பாட்டில் சொல்கிறார் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புத்தாடைகளை அணிக! என்கிறார்.
பின்னர் 3 பாடல்களில் சகுனங்கள் பற்றிப் பாடி, ஒரு பெரிய லிஸ்ட்-ஐ நமக்கு விட்டுச் சென்றுள்ளார் அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பல வாணக் கவிராயர் .
நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நாட்களில் யாரவது புதுச் சட்டை போட்டுக்கொண்டு வந்தால் கோடிக் கிள்ளு என்று சொல்லி அந்தப் பையனைக் கிள்ளுவோம். அவ்வாறு நானும் கோடி உடுத்திய நாட்களில் கிள்ளு வாங்கியிருக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை
xxxx
மூன்று பாடல்களில் அவர் சகுனம் பற்றிப் பாடியதிலிருந்து அதில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில், காட்டில் வேட்டை ஆடப் புறப்பட்ட காட்டுப் பன்றி கூட சகுனம் பார்த்ததாக உள்ளது
சகுன சாஸ்திரம் பற்றிய குறிப்புகள் தமிழில் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதைப் போல சம்ஸ்க்ருதத்தில் கூட காணமுடியாது. ஸம்ஸ்க்ருதத்தில் அதற்காகவே உள்ள தனி நூலை விட்டுவிட்டால் பொதுவாக ராமாயணம், மஹாபாரதம், காளிதாசன் காவியங்கள் போன்ற நூல்களில் அங்குமிங்கும் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. ஆயினும் தமிழில் சங்க நூல்கள் என்ற 18 மேல்கணக்கு நூல்களிலும் காணப்படும் சகுனக் குறிப்புகளைப் போல ஒரே இடத்தில், வேறு எங்கும் காண முடியாது.
தொல்காப்பியம் துவங்கி சங்க நூல்கள் 18-லும் சுமார் 25 இடங்களுக்கு மேல் சகுனக் குறிப்புகள் இருக்கின்றன. சங்க நூல்களான பத்து ப்பாட்டுக்கும் எட்டுத் தொகைக்கும் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களில் மேலும் பல குறிப்புகள் உள்ளன. சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியும் அறப்பளீசுர சதகம் போல நீண்ட சகுனப் பட்டியலைத் தருகிறது ; திருக்குறளில் தும்மல் சாஸ்திரம் வருகிறது. தமிழ்ப் பழமொழிகளில் நிறைய சகுன சாஸ்திரக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. கம்பராமாயணத்தில் இன்னும் அதிகமாகக் கிடைக்கின்றன
நரி இடமாகப் போனால் என்ன, வலமாகப் போனால் என்ன,, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் போதும்
ஊருக்கெல்லாம் சோதிடம் சொல்லும் கெளலி (பல்லி ) கழனிப் பானையில் விழுந்ததாம் –இப்படி நிறைய உள்ளன.
தொல்காப்பியத்தில் தலைவனுக்கு பிறந்த நாள் அடிப்படையில் ஜாதகம் கணித்து வருங்காலம் உரைப்பது இளம்பூரணர் உரையால் நமக்குத் தெரியவருகிறது . அதில் பறவை சாஸ்திரம் ‘புள்’ என்று சொல்லப்பட்டுள்ளது ஆனந்த விகடன் அகராதி நிமித்தம், நிமித்திகன் என்ற சொற்களுக்கு சோதிட அடிப்படையில் பொருள் கூறுகிறது. சகுனம், நிமித்தம் என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். தமிழில் விரிச்சி, குறி சொல்லுதல் நல்ல நேரம், இடை அறிதல் , செவ்வியறிதல் என்ற சொற்களில் இதைக் காண்கிறோம். தும்மல், கண் துடிப்பு ஆகிய தனிச் சொற்களும் சகுனத்தைக் காட்டும்.

சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் பயணம் செய்யக்கூடாத திசைகளை வாரசூலம் என்ற பாடல்களில் காணலாம் அப்படி பயணம் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம்/ தானம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளது. திருமூலர் திருமந்திரத்திலும் வாரசூலை உள்ளது. இதோ தொல்காப்பியக் குறிப்பு
அச்சமும் உவகையும் எச்சமி ன்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
-தொல் . புற .30
அச்சமாவது தீமை வரும் என்று அஞ்சுதல் , உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல் ; நாளாவது நன்னாள், தீய நாள் ; காலம் கண்ணுதலாவது வருங்காலம் குறித்தல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார்
நல்ல சகுனங்கள் என்ன?
62. சகுனம் – 1
முதல் பாடலில் எந்த எந்த பிராணிகள் வலமிருந்து இடமாகச் சென்றால் நல்லது என்று நீண்ட பிராணிகள் பட்டியல் தருகிறார். பலரும் பயப்படும் ஆந்தை, பூனை கூட குறுக்கே போகலாம். ஆனால் வலதா இடதா என்பது முக்கியம். அவை மேலே இடிக்கக்கூடாது , கைகால்களில் அகப்படக்கூடாது, தும்மல் இருமல் போடக்கூடாது அவை எல்லாம் நல்ல தல்ல என்கிறார் அமபலவாணர்.
XXX
63. சகுனம் – 2
சகுனம் பற்றிய இரண்டாவது பாடலிலும் எந்த பிராணிகள் வலமாக வந்தால் நல்லது என்று சொல்கிறார். இறுதியில் என்ன என்ன ஒலிகள் காதில் விழுந்தால் நல்லது என்றும் ஒரு பட்டியல் கொடுக்கிறார்.
xxxx
கெட்ட சகுனங்கள் என்ன ?
64. சகுனம் – 3
சகுனம் பற்றிய மூன்றாவது பாடலில் தலைவிரி கோலமாக வருவோர், ஒரு பிராமணன் வருதல் முதலியன கெட்ட சகுனம், இரட்டை பிராமணர், அழகிய சுமங்கலிகள் , வண்ணான் , பால்குடம் முதலியன நல்ல சகுனம் என்பார்.
வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் சகுனங்கள் பற்றிப் பாடியுள்ளார்
சகுனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பறவை என்று பொருள்; பறவைகள் பறப்பதை ஒட்டி எழுந்த சாஸ்திரம் சகுன சாஸ்திரம் ஆகும். பஞ்சாங்கத்தில் இன்றும் கூட பல்லி சாஸ்திரம், பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆகியன பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
ரிக் வேத காலம் முதல் சகுன சாஸ்திரம் இருந்து வருகிறது
xxx
சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்
https://tamilandvedas.com › சகு…
19 Apr 2015 — காகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதைக் …
ஜோதிடம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஜ…
16 Mar 2021 — 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரரும் ஆருடம் பற்றி எழுதியுள்ளார்.
தமிழர் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › த…
3 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், …

அறப்பளீசுர சதகம் 61. கோடி உடுக்கும் நாள்
கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்
கட்டலாம் புதிய சீலை;
கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்
கடிதுநனை வுற்றொ ழிதரும்;
குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரிய
குருதிவா ரந்த னக்கு;
கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;
குருவார மதில ணிந்தால்,
மறைபடா தழகுண்டு, மேன்மேலும் நல்லாடை
வரும்; இனிய சுக்கி ரற்கோ
வாழ்வுண்டு, திருவுண்டு, பொல்லாத சனியற்கு
வாழ்வுபோம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அறைகின்ற வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே
– கூறப்படுகின்ற மறைவடிவாகவும் ஆகமவடிவாகவும் விளங்கும் தூயவனே!,
அருமை ………. தேவனே!, ஆதிவாரந்தனிற் புதியசீலை கட்டலாம் –
ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடை உடுக்கலாம். (அவ்வாறு உடுத்தால்)
கறைபடாது ஒளிசேரும் – (ஆடையிற்) கறை பிடிக்காது; தூயதாக ஒளிதரும்,
கலைமதிக்கு ஆகாது – கலைகளையுடைய திங்களுக்குத் தகாது,
(கட்டினால்), பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் – பல
முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோம், அரிய குருதிவாரம்தனக்குக் குறைபடாது இடர்வரும் வீரியம் போம் – நன்மைக்கு ஆகாதசெவ்வாய்க்கிழமையில் மிகுந்த துன்பம் உண்டாகும; ஆண்மையும் நீங்கும்,புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் – புதன்கிழமையிற்சிலநாளிலே கிழிந்துவிடும்; வெற்றியும் நீங்கும், குருவாரமதில் அணிந்தால்
மறைபடாத அழகு உண்டு;மேன்மேலும் நல்லஆடை வரும் –
வியாழக்கிழமைகளில் உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும்மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், சுக்கிரற்கோ வாழ்வு உண்டு
திருஉண்டு – வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும்
உண்டாகும், பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் – தீய
சனிக்கிழமையில் உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.
xxxx
62. சகுனம் – 1
சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு
சூகரம் கீரி கலைமான்
துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை
சொற்பெருக மருவும் ஆந்தை
வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்
விளங்கும்இரு நா உடும்பு
மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்
வெற்றியுண் டதிக நலம்ஆம்;
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,
ஒருதுடை யிருத்தல், பற்றல்,
ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன
உபசுருதி சொல்இ வையெலாம்
அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) முதியோர் பரவும் அமலனே – பெரியோர்கள் வாழ்த்துகின்ற
தூயவனே!, அருமை ……. தேவனே!, சொல்அரிய கருடன் – சொல்லுதற்கு
அரிய கருடனும், வானரம் – குரங்கும், அரவம் – பாம்பும், மூஞ்சூறு –
மூஞ்சுறும், சூகரம் – பன்றியும், கீரி – கீரியும், கலைமான் – கலைமானும்,
துய்ய பாரத்வாசம் – தூயதான கரிக்குருவியும், அட்டை – அட்டையும், எலி
– எலியும், புன்கூகை – இழிந்த கோட்டானும், சொல்பெருக மருவும் ஆந்தை
– மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்அரிய கரடி – வெல்லமுடியாத
கரடியும், காட்டு ஆன் – காட்டுப் பசுவும், பூனை – பூனையும், புலி – புலியும்
மேல்விளங்கும் இருநா உடும்பு – மேலாக விளங்கும் இருநாவையுடைய
உடும்பும், மிக உரைசெய் இவையெலாம் – (என) மிகுதியாகக் கூறப்படும்
இவை யாவும், வலம் இருந்து இடம்ஆகில் வெற்றி உண்டு அதிக நலம்ஆம்
– வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றியுண்டாகும்; மிகுதியான
நலமும் உண்டாகும், ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல்
– விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், ஒருதுடை
யிருத்தல் – ஒருகாலில் நிற்றல், பற்றல் – வந்து கையைப் பிடித்தல், ஒரு
தும்மம் – ஒற்றைத் தும்மல், ஆணையிடல் – ஆணையிடுதல், இருமல் – இருமுதல், போகேல் என்ன உபசுருதி சொல் – போகாதே என்று காதில்
விழும்படி கூறுதல், இவை எல்லாம் அல்லல் தரும் – இவை யாவும் துன்பமே
தரும், நல்ல அல என்பர் – நல்லன அல்ல என்பர்.

63. சகுனம் – 2
நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை
நாவிசிக் சிலியோந் திதான்
நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி
நாடரிய சுரபி மறையோர்
வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்
வழிப்பயணம் ஆகை நன்றாம்;
மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,
வாய்ச்சொல்வா வாவென் றிடல்,
தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு
தப்பட்டை ஒலிவல் வேட்டு
தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி
தனக்கேக நன்மை யென்பர்!
அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருணகிரண உதயம் தருண பானுவை அனைய அண்ணலே
– சிவந்த கதிர்களையுடைய காலையிள ஞாயிறு போன்ற பெரியோனே!,
அருமை ……. தேவனே!, நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு
காக்கை நாவி சிச்சிலி ஓந்திதான் – நரியும் மயிலும் பச்சைக்கிளியும்
கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும், ஓணானும், நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி நாட அரிய சுரபி
மறையோர் – வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும்
சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், வரி உழுவை முயல்இவைஅனைத்தும் – வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் வலமாயிடின்
வழிப்பயணம் ஆகை நன்றுஆம் – வலமாக வந்தால் வழிச்செலவு
நன்மைதரும், மற்றும் – மேலும், இவை அன்றியே – இவையல்லாமலும்,
குதிரை அனுமானித்தல் – குதிரை கனைத்தலும், வாய்ச்சொல் வாவா
என்றிடல் – வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும்,
தருவளை தொனித்திடுதல் – கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், கொம்பு
கிடுமுடி முரசு தப்பட்டை ஒலி – கொம்பும் கிடுமுடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் வல்வேட்டு
தனிமணி முழக்கு எழுதல் – விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல
வாத்தியம் முழங்குதலும், இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை
என்பர் – இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.
64. சகுனம் – 3
தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,
தவசி, சந்நாசி, தட்டான்,
தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
தட்டைமுடி, மொட்டைத் தலை,
கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
கதித்ததில தைலம், இவைகள்
காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,
கனி, புலால் உபய மறையோர்
நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை
நாளும்வண் ணான்அ ழுக்கு
நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்
நாடியெதிர் வரநன் மையாம்;
அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் – அலையையுடையகங்கையை அணிந்த சடையனே!, பரசு அணியும் அண்ணலே – மழு ஏந்திய
பெரியோனே!, அருமை ……. தேவனே!, தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப்
பிராமணன் தவசி சந்நாசி தட்டான் – தலைவிரி கோலமாக ஒருவர்
எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம்
புரிவோனும், துறவியும், தட்டானும், தனம்இலா வெறுமார்பி மூக்கறை புல்
விறகுதலை தட்டைமுடி மொட்டைத் தலை – தனம் இல்லாத மார்பினளும்,
மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகுதலையனும், சப்பைத்தலையும்,
மொட்டைத்தலையும், கலன்கழி மடந்தையர் குசக்கலம் செக்கான் கதித்ததில
தைலம் – அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன்
மிகுந்த எண்ணெயும், இவைகள் காணஎதிர் வரஒணா – இவை கண்காண
எதிர் வருதல் தகாதன;
நீர்க்குடம், எருக்கூடை, கனி, புலால், உபயமறையோர்
– நீர்க்குடமும், எருக்கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப்
பார்ப்பனரும், நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை, நாளும் வண்ணான்
அழுக்கு – நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப்பெண்ணும்,நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், நசை பெருகு பால்கலசம், மணி,
வளையல், மலர் – விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும்,
மலரும். இவைகள்நாடி எதிர்வர நன்மைஆம் – இவை தேடி எதிரே வரின்
நலம் ஆகும்.
Xxx subham xxxx
Tags — சகுனம், நல்ல, கெட்ட , நிமித்தம், விரிச்சி, புள்