
Post No. 11,656
Date uploaded in London – – 11 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
65. உணவில் விலக்கு
அம்பலவாணர் எழுதிய அறப்பளீசுர சதகத்தில் மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக்கொள்வோம்.
முதல் பாடலில் விலக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்ன என்று சொல்கிறார்.
எந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சொன்னவர் காரணத்தை விளம்பவில்லை. இவை பழைய நூலில் உள்ளவை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார். விளக்கில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது, பழைய, கெட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் மஹாத்மா காந்திக்குப் பிடித்த ஆட்டுப்பாலை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் ? என்று தெரியவில்லை. வெங்காயம், உள்ளிப்பூண்டு , முருங்கைக் காய், காளான் முதலியவற்றை ஆன்மீக நாட்டம் உடையோர் சேர்ப்பதில்லை ; வேறு சில காய்களையும் விலக்கியமைக்கு நமக்கு விளக்கம் தேவைப்படுகிறது
Xxx
இரண்டாம் பாடலில் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள குற்றங்களை சொல்கிறார்
கங்கை நதிக்கு வெள்ளப்பெருக்கின்போது வரும் நுரை குற்றம்.
நிலவுக்கு அதிலுள்ள களங்கம் குற்றம் ;
தவ சீலர்களுக்கு கோபமே குற்றம் ; உடனே நமக்கு துர்வாசர் நினைப்பு வருகிறது. கோபத்தினால் வரக்கூடிய தீங்குகள் பற்றி முன்னரே சதகத்தில் கண்டோம். .குணமென்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)
பேரரசர்கள் ஆராயாமல் முடிவு செய்வது மன்னர்களின் தோஷம். உடனே நமக்கு கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் நினைவுக்கு வரும்
xxxx
விஷம்- விடம் , பாஷை- பாடை என்று ஆவது போல தோஷம் என்ற சொல் தோடம் ஆகியுள்ளது.
xxxxxx

கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்
காராக் கறந்த வெண்பால்
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
தென்னை வெல்லம் லாவகம்,
சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு
சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,
எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம் கிரணம்,
இலகுசுட ரில்லா தவூண்,
இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா
எனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்
அமலனே – ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்
தூயவனே!, அருமை ……. தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் –
விலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் – ஆட்டுப்பாலும், வரும் கார் ஆகறந்த வெண்பால் – வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு,
செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம்,
மலாவகம் – பிண்ணாக்கும், சீர்இலா வெள் உள்ளி – சிறப்பில்லாத
வெள்ளைப் பூண்டு, ஈர்உள்ளி – (சிறப்பில்லாத) வெங்காயமும், இங்குவொடு
– பெருங்காயத்துடன், சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் – சிறப்பில்லாத
வெள்ளைக் கத்தரிக்காயும், எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் –
குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட
பொருளும், கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் – சூரியன் ஒளியும்,
விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், இவை யெலாம் சீலம்
உடையோர்க்கு ஆகா – இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை,
எனப் பழைய நூல் உரைசெயும் – என்று பழைமையான நூல்கள் கூறும்.
Xxxx

PLEASE READ MY OLD ARTICLE ABOUT FOOD TABOOS
வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு …
https://tamilandvedas.com › வெ…
27 Oct 2018 — அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் …
66. நற்பொருளிற் குற்றம்
பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்
பேனமே தோட மாகும்!
பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே
பெரிதான தோட மாகும்!
சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற
சீற்றமே தோட மாகும்!
தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று
செய்வதவர் மேல்தோ டமாம்!
தாராள மாமிகத் தந்துளோர் தாராமை
தான்இரப் போர்தோ டமாம்!
சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்
தாலம்செய் தோட மாகும்!
ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும் அண்ணலே
– ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத
பெரியோனே!, அருமை ……. தேவனே!.
பேரான கங்கா நதிக்கும் அதன்மேல்
வரும் பேனமே தோடம் ஆகும் – புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், பெருகிவளர் வெண்மதிக்கு
உள்உள் களங்கமே பெரிதுஆன தோடம் ஆகும் – மிக வளர்ச்சியுடைய
வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம்
எனப்படும், சீர்ஆம் தபோதனர்க்கு ஒருவர்மேல் வருகின்ற சீற்றமே தோடம்
ஆகும் – கீர்த்திமிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே
குற்றம் எனப்படும், தீதுஇல் முடிமன்னர் விசாரித்திடாது ஒன்று செய்வது
அவர் தோடம் ஆகும் – குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச்
செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், தாராளமா மிகத்தந்து உளோர்
தாராமைதான் இரப்போர் தோடம் ஆம் – அளவின்றி (முன்)
கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம்
எனப்படும், சாரம் உள நல் கருப்பஞ்சாறு கைப்பது அவர் தாலம்செய்
தோடம் ஆகும் – சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது
(பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்..
–subham–
tags–உணவில் விலக்கு,அம்பலவாணர் , அறப்பளீசுர சதகம், ஆட்டுப்பால், முருங்கை , காளான் , வெங்காயம், பூண்டு , கூடாது , ஆகாது