
WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London
Post No. 11,543- Part 7
Date uploaded in London – 11 January 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மார்கழித்திங்கள் 23
மாரிகாலத்தில் மலைக்குகையில் நிலையாய் துயின்ற
சீரிய சிங்கம் தீப்பொறி தெறித்த கண்கள் திறக்க
சுற்றும் முற்றும் சிலுப்பி உலுக்கிய உடலும் பிடரியுமாய்
குகைவாயிலில் கர்சித்து வெளித்தோன்றியது போல்
காயாம்பூவையொத்த நிறத்தோனே! நின் கோயில்
வாய் மணிமண்டத்தில் அரிதான அரியணை அமர்ந்த
நீர்! நிர்கதியாய் குழுமியோர்கள் வந்த காரியம்
கேட்டருள ஆயருக்காக வேண்டிய ஆயிழை வாழியே
தேனினுமினிய சொல்லில் வல்லாள்
தெளி நீர் தாமரை முகத்தாள்
விழியிலும் மொழியிலும் வைத்தாள்
ஊழி முதல்வனை தன்னுள்ளும் வைத்தாள்
எழிலோன் மகிழ்ந்தானோ இம்மங்கையின்
மொழி வளமும் பொருளும் பொருந்திய
பாசுரங்கள் வேதத்திற்கிணையாக, பாரோர்
போற்றுவரே கோதையின் இந்த கீதையை
திருப்பாவையென
நாராயணன்
Xxx

மார்கழித்திங்கள் 24
முன்னொரு காலம் மூன்றடி நிலமிரந்து
மூவுலகமளந்தானைப் போற்றி
முந்திய அவதாரத்தில் தென்னிலங்கைக்
கோமானை வதைத்தோனைப் போற்றி
பொய்யுருவில் சகடமாய் வந்த பகட
அசுரனை வதைத்த பாதத்தைப் போற்றி
கன்று வடிவில் வந்த அசுரனைக்
கைத்தடியாகப் பற்றி தரு உருவாய்
நின்ற மாற்றான் மீதெரிந்திருவரையும்
கொன்றவன் தாள் போற்றிக் குடையாய்
குன்றைப் பிடித்து குலத்தோரைக் காத்த
குணசீலனைப் போற்றிப் பகைவர் கை
வேல் பறித்து வென்றோனைப் போற்றி
என்றுமே தங்கள் வீர,சூர,தீர ரூபத்தை
நின்று துதித்தனுபவிக்க கூடிய குலத்தோர்
கோரிக்கையை கோவிந்தன் முன் வைத்த
கோதை வாழியே.
பாடிய பாசுரமெல்லாம் பரமன் பல பேராக
மூடிய கண்கள் முன் தேடிய முகுந்தன் தோன்றி
நாடியவன் அவள் நாடியிலும் நாரணன் நாமம்
துடிக்கக் கேட்டுப் பல கோடி நூராயிரம் ஆண்டு
கூடி அடியாளிவளுடன் குடும்பம் ஓம்பிட அவள்
சூடிய மாலை வாடிடினும் எம் தோளிணைந்திட
பீடுடைய பெருமாளாவேனே!
நாராயணன்
xxx
மார்கழித்திங்கள் 25

ஒருத்தி மடியினின்று விழுந்த இரவே வேறு
ஒருத்தி மார்பு தழுவி ஒளிந்து வளர உற்ற
பகையோன் பெற்ற தாய் மாமனேயாகி
விடுத்த எதிரிகளை அடுத்தடுத்து வீழ்த்திட
எஞ்சிய மாமன் கஞ்சன் வயிற்றில் தீயாய்
எரிந்த அஞ்சனவண்ணனே! தேடியுமதடி கூடிய
அடியார்கள் திருவுடையாள் ஓம்பும் செல்வமும்
உன் வீர சரிதங்களைப்பாடி வருத்தம் நீங்கி
ஆனந்த நிலையடைய விரும்புவதாக
முறையிட்ட தரை மங்கை வாழியே
மறையுள்ளுறையும் மாயவனே
சிறையுள் பிறந்தும் தூயவனே
குறையொன்றில்லாத கோவிந்தனே
நிறைவாய் எதிலும் நிற்பவனே
முறையான முதல்வனான முகுந்தனே
தரை சேர்ந்து தரணியோரைக் காத்தவனே
அன்று ஆய்ச்சியரோடு உறவாடியவனே
கன்றோட்டி அவரோடு கூடிக் களித்தவனே
குன்றைக் குடையாய் ஏந்தியவனே
குலத்தாரை கோகுலத்தில் காத்தவனே
எப்பொழுதும் ஓரிள நங்கையுன் நினவினிலே
முப்பொழுதும் உன் திரு நாமமவள் மூச்சினிலே
முப்பதுப் பாசுரமாய் தொகுத்தப் பாமாலையிலே
முகில் வண்ணனின் பூ மாலையாய் மார்கழியினிலே
பாவையின் பக்திக்கு பரமனடிமையானதாலே
பாரோர் போற்றிப் பணியும் ஆண்டளானாளே
நாராயணன்
xxxx

மார்கழித்திங்கள் 26
ஆலிலையில் பள்ளிக்கிட ந்து பிரளய காலத்தில்
அகிலம் காத்த அன்பே வடிவான நீல மணிவண்ணனே!
அதிகாலை நீராடி மார்கழி நோன்பு காக்க அறவோர்
அனுட்டித்த முறை படியும்மைப் பள்ளி எழுப்பப் பால்
போன்ற வண்ணத்துன் பாஞ்சசன்னியமீடான சங்கும்,
பெரிய முரசும்,பல்லாண்டிசைப்பரும், மங்கள தீபமும்
பிடிக்கக் கொடியும் மேல் படர்ந்த விதானமும் கேட்கும்
அடியார்க்கு அளித்தருள வேண்டிய கோதை வாழியே
அதி காலை உன் சன்னிதி வாயிலில் நின்று
அடி வானம் சிவக்கும் முன் நீவீர் பள்ளி எழ
ஆன்றோர் வகுத்த முறையிலே முழங்க
சங்கும் அறைய பறையும், பல்லாண்டு
இசைப்பாரும் , கொடியும் விதானமும்
இரந்து கேட்ட அடியார்க்கு தேவையற்றதோ
இவையெலாம் திருப்பாவையொன்றே போதும்
பள்ளியவரெழ திரு வைகுந்தத்திலும் ஒலிக்கும்
பட்டர்பிரான் கோதை மொழிந்த சங்கத்தமிழ்
மாலை முப்பதும் முத்தாரமாக அவளும்
அவருக்குகந்த முத்தாரமாயானாளே
நாராயணன்
Xxxx

மார்கழித்திங்கள் 27
ஆதிபுருடனையணுகா அவனை வெறுப்பவரையும்
ஆட்கோண்டு வெல்லும் தேசுடையோன் புகழ் பாடி
அருள் பெற்ற அடியார் கள் மேலும் விரும்பிய பரிசுகளாக
அணியும் ஆபரணங்களாய் தோள்வளையும், கம்மலும்
கர்ணப்பூவும் கால் சிலம்பும் உடுக்கப் புத்தாடையும்
பெருகும் நெய் கசியும் பாற்சோறும் பெற்று அவனோடு
கூடிய குடும்பியாய் கொண்டாடி குலத்தோரோங்க ஆதி
புருடனான கோவிந்தனை வேண்டிய கோதை வாழியே
நாராயணன்
கூட வாழ்வோருடன் மார்கழி நோன்பு காத்து
கோவிந்தன் அருள் பெற வீடு வீடாய் சென்று
குலத்தோர்களைக் கூட்டி வைத்து எட்டாத
குலசேகரன் படி வாயில் நின்று கிட்டாத
குணசேகரன் கீர்த்திமைப் பாடிக் கட்டிய
பாமாலையில் பைய்த்துயின்ற பரமனெழுந்து
பாவையர் வந்த காரியம் ஆராய்ந்தருள
பன்னோருடன் பரமனனுபவம் பகிர்ந்த
பட்டர் பிரான் கோதை வாழியே
நாராயணன்
To be continued………………………..