ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை- பிரதமர் கதறல் (Post.11,669)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,669

Date uploaded in London – –  14 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு உடனே திருப்பி அனுப்புங்கள் என்ற கோரிக்கை வலுத்தது.  அப்போது பிரிட்டனின் பிரதமராக  இருந்தவர் டேவிட் காமெரோன் (2010 –2016 பிரிட்டிஷ் பிரதமர் ). அவர் சொன்னார் : நீங்கள் கோஹினூரை திருப்பி அனுப்பினால் பிரிட்டிஷ் மியூஸியம் காலியாகி விடும். இதைத் தமிழில்  சொல்ல வேண்டுமானால் ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை- என்பதாகும். ஏனெனில் பிரிட்டனிலுள்ள புகழ் பெற்ற மியூசியங்களில் உள்ள  பெரும்பாலான  காட்சிப் பொருட்கள் உலகம் முழுவதிலிருந்தும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களாகும்  .

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் எல்லோரும் விரும்பிப்  பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள்தான். இதனால் தான் டேவிட் காமெரோன் அப்படிச் சொன்னார். ஒரு பொருளை– அதுவும் மஹாராணியின் தலையிலுள்ள கிரீட (Kohinoor diamond) வைரத்தையே திருப்பிக் கொடுத்தால் என்ன ஆகும்? எல்லாம் போய்விடும். !

ஏற்கனவே கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான எல்ஜின் மார்பிள் (Elgin Marbles) என்ற சலவைக்கல் தூண்கள் நைஜீரியாவுக்குச் சொந்தமான பெனின் உலோக விக்ரகங்கள் (Benin Bronzes) ஆகியவற்றை அந்தந்த நாடுகள் திருப்பிக் கேட்டு வருகின்றன.

நான் கிரேக்க நாட்டின்(Athens)  தலைநகருக்குச் சென்ற பொழுது ஒரு பெண் கைடு (Guide)  புலம்பிய புலம்பலை ஏற்கனவே ஏதென்ஸ் விஜய கட்டுரையில் எழுதி இருக்கிறேன். ‘நாங்கள் அனைவரும் லண்டனிலிருந்து வந்திருக்கிறோம்’ என்று சொன்னவுடன் அவர் மிகவும் கோபத்துடன் பிரிட்டனைத் திட்டத் துவங்கினார் . என்ன இது! எல்ஜின் மார்பிள் என்ற போலியான, பொய்யான பெயரை நீங்கள் சொல்கிறீர்கள்? எல்ஜின் பிரபு கொள்ளை அடித்தவன் அல்லவா? அதை கிரீக் மார்பிள் Greek Marble என்றல்லவா உண்மை விளம்பிகள் சொல்லுவார்கள் : கொள்ளை அடித்ததை மறைப்பதற்காக நீங்கள் எல்ஜின் பெயரை அதற்குச் சூட்டினீர்களா? என்று பொறிந்து தள்ளினாள் அந்தப் பெண்மணி. நாங்கள் ஒரே வரியில் பதில் சொல்லி அவளை உற்சாகப்  படுத்தினோம்.

“தாயே நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை ; நாங்களும் உங்கள் கட்சிதான். நாங்கள் கோஹினூர் வைரம் முதல், ஆயிரக்கணக்கான பொருள்களை இழந்துவிட்டோம்” என்றோம் . பின்னர் அவர் எக்ட்ஸ்ரா extra உற்சாகத்துடன் ஏதென்ஸை சுற்றிக் காண்பித்தார்.

வரலாற்று விஷயங்களைக் காட்டுவதற்காக, லண்டனில் இரண்டு புகழ்பெற்ற மியூசியங்கள் இருக்கின்றன ; ஒன்று உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் மியூசியம். மற்றொன்று விக்டோரியா (V&A) ஆல்பெர்ட் மியூசியம்,  இது தவிர ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு மியூஸியத்திலும் அதை ஒட்டியுள்ள லைப்ரரியிலும் (Bodleian Library) கொள்ளை அடித்த பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர் . இவை மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள் . பிரிட்டன் முழுதும் ஆயிரத்துக்கும் மேலான  காட்சி சாலைகள் இருக்கலாம். எல்லாம் கொள்ளை அடித்த பொருட்களே .

வேல்ஸ் மாகாணத்தில் கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ் மியூசியம் உள்ளது ; அவன் கொள்ளை அடித்ததால் இறுதியில் தொண்டையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அவன்தான் இந்தியாவில் ஸ்தாபித்தான் என்று சொல்லி, அவனுக்கு லண்டன் உள்பட பல இடங்களில் சிலை வேறு வைத்த்துள்ளனர் . அவனைப் பற்றி பிரிட்டிஷாரே திட்டுவார்கள்; அவன் இந்தியாவுக்கு வரும் முன்னர்,  மஹா ரவுடி; அவன் இறந்த பின்னர் புகழ் பெற்ற ஆங்கிலே எழுத்தாளர் , ஆங்கில அகராதியின் தந்தை சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) சொன்னார் ; அவன் செய்த அக்கிரமங்களால் அவனுடைய மனச்  சாட்சியே அவனைத்  தற்கொலை செய்ய வைத்தது என்று . நீங்கள் , “எங்கள் பொருட்களைத் திருப்பித்தாருங்கள்” என்று எந்த மியூசியத்துக்கு கடிதம் எழுதினாலும் அவர்கள், போட்டோ காப்பி செய்த ஒரு கடிதம் வைத்துள்ளனர். 1963-ம் ஆண்டு பிரிட்டிஷ் சட்டப்படி திருப்பி அனுப்புதல் முடியாது என்று எழுதி விடுவார்கள்.

இந்த விஷயங்களை இப்பொழுது நான் எழுதக்காரணம் லண்டனிலுள்ள புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதும் சத்னம் சங்கேரா (Sathnam Sanghera) என்பவர் எம்பையர் லாண்ட் (Empireland)  என்ற புஸ்தகத்தை 2012ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார் ; உலகம் முழுதும் பிரிட்டிஷார் செய்த படுகொலைகள், கற்பழிப்புகள் , கொள்ளைகள் பற்றி நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் இருக்கின்றன. ஆயினும் சத்னம் சங்கேரா புஸ்தகத்தின் சிறப்பு என்னவென்றால் 200 புஸ்தகங்களை ஆராய்ந்து பிரிட்டிஸ்காரர்களே கக்கிய உண்மைகளைத் தொகுத்து தந்துள்ளார்.

xxx

என்னிடம் தமிழ் படித்த ஒரு ஆங்கிலப் பெண்மணியிடமிருந்து நானும் ஒரு உண்மையை அறிந்தேன். அதாவது பிரபல ஏல நிறுவனங்கள் (famous Auction Houses in Western countries) பெரிய , அரிய விலை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கேட்டலாக் மூலமாக  ஏலம் விட்டு விற்பனை செய்கின்றன. சிறிய, அதிக விலை மதிப்பில்லாத பொருட்களைத் திரைக்குப் பின்னால் சட்ட விரோதமாக (Underhand Dealing) கை மாற்றி விடுகின்றன. இதற்கு இந்தியாவிலுள்ள தேச விரோதிகளும் , பேராசை பிடித்தவர்களும் காரணம். ஒரு கோவிலில் இருந்து விக்ரகம் களவு போவதும் சரஸ்வதி மஹால் போன்ற நூலகங்களில் இருந்து அரிய நூல்கள், சுவடிகள் மறைவதும் உட்கைகளின் உதவி இல்லாமல் நடைபெறவில்லை.

நான் குறிப்பிட்ட அப்பெண்மணி, நிறைய நாணயங்களை கொள்முதல் செய்தார். எத்தனை சட்ட விரோத முறையில் வந்தனவோ, இறைவனுக்கே வெளிச்சம். இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிடும், இந்தியா மீது பற்று கொண்ட, வெள்ளையர்கள் வீடுகளில் நிறைய இந்தியக் கலைப் பொருட்கள்  ஷோ கேஸ்களில் (Show Cases) இருக்கும். இவை எல்லாம் கலைப் பொருட்களை விற்கும் கடையிலிருந்து  வாங்கியதாகச் சொல்லுவார்கள்;  அது  பாதி உண்மை; பாதிப் பொய் கலந்தது  ; எல்லாம் நம்ம ஊர் லஞ்ச ஊழல் அதிகாரிகள் மூலம் கிடைத்தவையே. இப்போது தினமும் வரும்  சிலைக் கடத்தல் செய்திகளைப்  படித்து வருவோருக்கு நான் சொல்லுவது நன்கு விளங்கும்..

xxx

மைசூரிலும் திபெத்திலும் அடித்த கொள்ளை

அந்தக் காலத்தில் கலைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மியூசியங்களே பண உதவியும் செய்தன ; ஆராய்ச்சியாளர்கள் எப்படிக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டும் காணாதது போல இருந்துவிடுவார்கள். திபெத்தில் (Younghusband Expedition)  யங் ஹஸ்பண்ட் என்பவர் நடத்திய படைஎடுப்பில் 3000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். அ வர் அடித்த கொள்ளைப் பொருட்கள் இப்பொழுது அடிக்கடி டெலிவிஷனில் காட்டப்படும் ஆன்ட்டிக் (Antique Shows) ஷோக்களில் வருகின்றன

எங்கிருந்து இந்த அரிய பொருள் உங்களுக்குக் கிடைத்த து?  என்று கேட்டால், என் கொள்ளுத் தாத்தாபிரிட்டிஷ் ஆர்மியில் இந்தியாவில் பணியாற்றினார். அவர் இமய மலையில் பனிக்கட்டியில் கண்டு எடுத்த பொருள் என்பார். அல்லது வேறு ஒரு கலைப் பொருள் கடையில் வாங்கியது என்பார்.அதாவது உண்மை மறைக்கப்படும். பின்னர் அவை ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் இரண்டு லட்சம் பவுன்களுக்கு விற்கப்படும்.

சுருங்கச் சொன்னால், கொள்ளை அடித்த பொருட்களை அங்கீகாரம் பெற்ற ஏல நிறுவன சர்ட்டிபிகேட்டோடு விற்பார்கள். அதாவது நம்ம ஊர் பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளில் வெள்ளைப்பணமாக மாற்றுவது போல.

மைசூரில் திப்பு சுல்தானை வெள்ளையர்கள் தோற்கடித்த பின்னர் அந்த ஊர் முழுதும் கொள்ளை அடிக்கப்பட்டது. வெள்ளைக்கார சிப்பாய்கள் வீடு வீடாகச் சென்று கிடைத்ததை எல்லாம் சுருட்டினர். இதை வெள்ளைக்காரரே அவர் அம்மாவுக்கு எழுதிய கடித்தல் குறிப்பிடுகிறார்:

1782 முதல் 1799 வரை மைசூரை ஆண்ட திப்புவை கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தோற்கடித்தன; அவருடைய தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினம் கொள்ளை அடிக்கப்பட்டது அப்போது ராணுவ அதிகாரியாகவும் பின்னர் வெல்லிங்டன் பிரபுவாகவும் , இரு முறை பிரிட்டிஷ் பிரதமராகவும் இருந்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesley)  அவருடைய அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறார் ” அம்மா, அன்று அந்த ஊரில் கொள்ளை அ டிக்கப்படாத வீடே இல்லை அம்மா. பின்னர் ஆர்மி/ ராணுவ  பஜாரில் மிக விலை மதிப்புடைய நகைகளும், தங்கக் கட்டிகளும் விலைக்கு வந்தன.

இதன் பிறகு அரண்மனையில் மிஞ்சிய பொருட்களை அதிகார பூர்வமாகப் பட்டியலிட்டு கொள்முதல் செய்தனர். ஏராளமான தங்கக்கட்டிகள், தட்டுகள், ரத்தினக் கற்கள், பல்லக்குகள், பட்டாடைகள் என்று நீண்ட பட்டியல் அது. ஒரு வெள்ளைக்காரனைக் கொல்லும் செயற்கை புலி (Tippu’s Tiger)  பொம்மையை மட்டும் இப்பொழுது விக்டோரியா ஆல்பெர்ட் மியூஸியத்தில் (V&A Museum in London)  காட்சிக்கு வைத்துள்ளனர்.

பிபிசி BBC நடத்திய ஒரு சர்வேயில் 90 சதவிகித கலைப் பொருட்கள் கிடங்கில் இருப்பதாவதும், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் மிகவும் குறைவே என்ற செய்தியும் அம்பலமானது .

இன்னொரு ரகசிய கடிதமும்  அம்பலத்துக்கு வந்தது. அண்மையில்  பிரிட்டிஷ்  கலாசார அமைச்சராக  இருந்தவர் Oliver Dowden ஆலிவர் டவ்டன். மியூசியங்களுக்கு அவர் எழுதிய ரகசிய கடிதம் அது.

“நீங்கள் காட்சிக்கு வைத்த பொருட்களைத் திருப்பிக் கொடுத்தீர்களானால் உங்களுக்கு நாங்கள் வழங்கும் நிதி உதவியை நிறுத்தும் அபாயம் இருப்பதை அறிவீர்களாகுக”. என்ற கடிதம் பத்திரிகைகளுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது.

ஆக, அரசாங்க அல்லது பெரிய மியூசிய பண உதவியுடன்தான் இந்தக் கலைக் கொள்ளை நடைபெற்றுவருகிறது . தெரிந்தே செய்யப்படும் அக்கிரமம் இது. உலகில் நியாயமும் தர்மமும் நிலைபெற்றால் , பெரும்பாலான நாடுகளில் உள்ள — குறிப்பாக, அமெரிக்கா , பிரிட்டன், பிரான்ஸ் , ஆஸ்திரேலியா , ஜெர்மனி , ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளில் உள்ள மியூசியங்கள் காலியாகி, மூடப்பட்டுவிடும்.

–சுபம் —

 Tags- ஆளுக்கு ஒரு மயிர், கோஹினூர் , வைரம், பிரிட்டிஷ் , கொள்ளை, மியூசியம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: