
Post No. 11,670
Date uploaded in London – 15 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 11
(95 முதல் 104 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
95) கயிலை மலை
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்த கவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
பாடல் எண் 521 – ‘புமி அதனில் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இந்த பூமண்டலத்தில் தனிப்பெரும் தலைவரும், சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல. இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் தந்தருள்வாயாக!
96) திருவேங்கடம்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
பாடல் எண் 525 – ‘சரவணபவ நிதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (சரவணபவ நிதி அறுமுக குருபர என) பலமுறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற, பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக!
97) திருவேங்கடம்
துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழிய மெய்
வழிபட லொழிவனை யருள்வாயே
பாடல் எண் 526 – ‘நெச்சுப் பிச்சி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக!
98) திருவேங்கடம்
மலமாங்கடு மோகவி காரமு
மிவை நீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
பாடல் எண் 529 – ‘வரி சேர்ந்திடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் திருவடிகளைத் தந்த்ருள்வாயாக!
99) வள்ளிமலை
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க அருள்வாயே
பாடல் எண் 536 – ‘ககனமும் அநிலமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக!
100) வள்ளிமலை
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே
பாடல் எண் 539 – ‘சிரம் அங்கம் அம் கை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக!
101) மயிலம்
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ளருள்வாயே
பாடல் எண் 546 – ‘கொலை கொண்ட‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு ஆகியவற்றுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதர்கள் என் உயிரைக் கொண்டு போய்விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருள்வாயாக!
102) திருசிராப்பள்ளி
பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே
பாடல் எண் 547 – ‘அங்கை நீட்டி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக!
103) திருசிராப்பள்ளி
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் றருள்வாயே
பாடல் எண் 552 – ‘பகலவன் ஒக்கும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மூடன், கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? அருள்வாயாக!
104) இரத்னகிரி
பல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாத பத மருள்வாயே
பாடல் எண் 566 – ‘சுற்ற கபடோடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற (என்னுடைய) உடல் நைந்து போய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்
***