மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்! (Post.11,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,674

Date uploaded in London –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்!

ச.நாகராஜன்

மயூர கவி இயற்றிய சூரிய சதகத்தில் 36, 70, 94 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் அவர் ஒரே அக்ஷரத்தைப் பல முறை பயன்படுத்தி இருக்கிறார், அதனால் அந்த அக்ஷரம் வலூவூட்டப்பட்டு ஒரு வித மந்திரசக்தியை ஏற்படுத்துகிறது என்பதை சென்ற கட்டுரையில் குறிப்பிட்டோம்.

எடுத்துக்காட்டாக 36வது ஸ்லோகத்தை விரிவாகப் பார்த்தோம்.

அடுத்து இங்கு 70வது ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

நி: ஸ்பந்தானாம் விமாந வஸி

  விததிவாம் தேவவ்ருந்தாரகாணாம்

வ்ருந்தை: ஆனந்த – ஸாத்ரோத்யமமபி

  வஹதாம் விந்ததாம் வந்திதும் நோ |

மந்தாகின்யாம் – அமந்த: புலிநப்ருதி

  மருதுர்மந்தரே  மந்திராபே

மந்தாரை: மண்டிதாரம் தததரி

   திநக்ருத் ஸ்யந்தந: ஸ்தான்முதே வ: ||

மயூர கவி இந்த அற்புதமான ஸ்லோகத்தில் சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடுகிறார்.

பாடலின் திரண்ட பொருள் :-

பெரிய மாடங்களைக் கொண்டு அதில் வாழும் தேவர்கள் மகிழ்ச்சி பொங்க சூரியனைக் கண்டு வணங்க விமானங்களில் செல்கினறனர்.  ஆயினும் அவர்களால் வணங்க முடியாதபடி மிகவும் தூரத்தில் சூரியன் இருக்கிறான். காரணம் சூரியனின் உத்வேகமே. சூரிய ரதத்தைத் தொடர்ந்து தேவ விமானங்கள் செல்ல முடியாமல் அவை ஆங்காங்கே நிற்கின்றன.

இவ்வளவு வேகமுடன் செல்கின்ற ரதம் ஆகாய கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் செல்லும் போதே, நகரம் போலக் காணப்படும் மந்தா மலைக் குன்றின் முகடுகளிலும் , குகைகளிலும் மெல்ல மெல்லச் செல்கின்றது. இத்தகைய சிறப்புடையதும் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சூரியனின் ரதம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.

இங்கு நாம் ரசிக்க வேண்டியது சூரியனின் ரதம் செல்லும் பாணியையே. பொதுவாக ஜனசந்தடி அதிகமுள்ள ஒரு நகரத்தில் ரதம் செல்லும் போது அது மெதுவாகவே செல்ல வேண்டி வரும். ஆனால் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் அதன் வேகம் கூடுதலாகும்.

இங்கு மாடமாளிகை போல உள்ள மந்தார மலைக் குன்றுகளில் மெதுவாகவும் ஜன சஞ்சாரமற்ற மந்தாகினி மணற் பரப்பில் வேகமாகவும் சூரிய ரதம் செல்கிறது. இதை மெல்ல மெல்லச் செல்லும் சூரிய ரதம் என மயூர கவி அழகுறக் குறிப்பிடுகிறார்.

இந்த ஸ்லோகத்தில் ‘ந்த’ என்னும் அக்ஷரம் 12 முறைகளுக்கும் மேலாக வருவதைக் காணலாம்.

உரை நூல்கள்

சூரிய சதகத்திற்கு  15 உரை நூல்கள் உள்ளன.

அவையாவன:

1)  மதுசூதனர் இயற்றிய பாவபோதினீ  என்னும் உரைநூல்

2)  ஜகன்நாதர் இயற்றிய உரை நூல்

3)  வல்லபதேவர் இயற்றிய ஸூர்யானுவாதினீ என்னும் உரை நூல்

4)  யக்ஞேஸ்வர சாஸ்திரி இயற்றிய உரை நூல்

5)  திரிபுவநபாலர் இயற்றிய உரை நூல்

6)  ஜயமங்களர் இயற்றிய உரை நூல்

7)  ரங்கதேவர் இயற்றிய உரை நூல்

8)  கங்காதரர் இயற்றிய உரை நூல்

9)  பாலமபட்டர் இயற்றிய உரை நூல்

10)ஹரிவம்சர் இயற்றிய உரை நூல்

11) கோபிநாதசூரி இயற்றிய ப்ரபாவளீ என்னும் உரை நூல்

12) ராமபட்டர் இயற்றிய உரை நூல்

13) அன்வயமுகர் இயற்றிய உரை நூல்

14)ராமச்சந்திரர் இயற்றிய உரை நூல்

15) லிங்கையர் இயற்றிய உரை நூல்

இவற்றில் பல நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை.

சுவடியில் இருந்த மயூர பட்டரின் சூர்ய சதகம் நூலை சரஸ்வதி மஹால் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.

மேலே உள்ள தமிழ் அர்த்தம் சிறந்த ஆய்வை மேற்கொண்ட வேதாந்த சிரோம்ணி, தமிழ் வித்வான் திரு என்.சீனிவாசன், ஸம்ஸ்கிருத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் அவர்களால் ஆய்ந்து எழுதப்பட்டு 1998ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நன்றி : திரு என். சீனிவாசன்

   சரஸ்வதி மஹால் நூல் நிலையம்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: