
WRITTEN BY Dr Ganesan, Tenkasi
Post No. 11,678
Date uploaded in London – – 17 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பொங்கல் பண்டிகை – அன்றும் இன்றும் என்றும்
(முனைவர் தென்காசி கணேசன்)
நுழை வாயில்
நமது தேசத்தின் அடித்தளம் மற்றும் முக்கியப் பெருமையே, அதன் கலாச்சாரமும், பண்பாடும் தான். அவற்றின் வெளிப்பாடுதான், நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகள்.
ஒவ்வொரு பண்டிகையும் மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், வாழ்வியல் நெறிகளையும், கற்றுக் கொடுக்கிறது என்றால் மிகை ஆகாது. பண்டிகைகளின் சிறப்பு என்பது, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மட்டுமல்ல, இயற்கையைப் போற்றி, வணங்கி, பாதுகாத்து, வேளாண்மை மற்றும் உயிரினங்களை வாழ்த்தி வணங்கும் நிகழ்வும் ஆகும். இந்த வரிசையில் மிக முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.
இந்திய நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு”
எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.
காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும்.பொங்கல் பண்டிகை என்பது வேளாண்மை சார்ந்த ஒரு கொண்டாட்டம் என்பதே உண்மை.
பொங்கல் பண்டிகை – வரலாற்றுக் காலம்
சங்க காலமான கி.மு 200 – கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்க்ருத புராணத்தில் திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முன்னோர்கள் பொங்கல் சங்க காலத்தில் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாவை நோன்பு சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பல்லவர் காலத்தில் பல்லவர்களின் காலமான கி.பி 400 – கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மரபும், சடங்குகளும் நிறைந்த இந்த பொங்கல் கொண்டாட்டம். திருப்பாவை குறிப்பு ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவ கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப பண்டிகை, இஸ்லாமியப் படைஎடுப்பு, ஆங்கில ஆட்சி, எல்லாக் காலங்களிலும், பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், இந்தப் பண்டிகை, குறிப்பாக, இந்த மண்ணின் மாண்பை, விவசாயத்தை, நீர் மேலாண்மையை இணைத்து இருப்பதால், தொடர்ந்து கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை – 50 வருடங்கள் முன்னால்
1970களில் எங்கள் ஊரான தென்காசியில் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தக் கொண்டாடத்தில், நான் பள்ளி மாணவன். ஜாதி, இனம், பணக்காரர், இல்லாதார் என்ற வேறுபாடு நாங்கள் பார்த்ததேயில்லை. மார்கழி மாதம் பஜனையில் இருந்தே எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிடும். பள்ளிகளும் குறைந்தது ஒரு வாரம் விடுமுறை இருக்கும். ஜனவரி முதல் வாரத்திலேயே வீடுகள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு, காவி, வண்ணங்கள் பூசப்படும். பெரும்பாலும்,வீட்டில் உள்ளவர்களே, சுண்ணாம்புக்கல் வாங்கி, வீட்டின் கொல்லைபுறத்தில் வெள்ளாவி வைத்து, நீலம் சேர்த்து, வெள்ளை அடிப்பார்கள். தெருக்களே பளிச்சென்று இருக்கும்.
ஒரு வாரம் முன்னாலேயே, மஞ்சள்குலை, கரும்பு, கடைவீதி மட்டுமல்லாமல், வீதியிலும் வைக்கப்படும், எனது தந்தையின் நண்பர் திரு பழனியாண்டி முதலியார் என்பவர், குறைந்தது 6 கரும்புகள், மஞ்சகுளை, கிழங்குகள் என வீட்டில் கொண்டு வைத்துவிடுவார். வீட்டின் முற்றத்தில் அவை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பொங்கல் மறுநாள் தான் கரும்பு வெட்டப்படவெண்டும், அதாவது மறுநாள் காகத்திற்குப் படைத்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்பது சாஸ்திரம் என்பார்கள் வீட்டில். மறுநாள் விடியலுக்கு காத்துக்கொண்டிருப்போம். எவ்வளவு தான் தந்தாலும், உடன் பிறப்புக்களுடன் (என் உடன் பிறந்தவர்கள் தான்) சண்டை உண்டு. நண்பர்களிடம் ஒப்பீடு என்ற பெயரில் சண்டையும் உண்டு.
அம்மாவின் வெங்கலப்பானை (வெறும் பானையைத் தூக்குவதேற்கே, 10 டம்ளர் ஆர்லிக்ஸ் குடிக்கவேண்டும்). சர்க்கரைப்பொங்கல், அவியல், வடை என அன்று முழுவதும் , உள்ளே போய்க்கொண்டிருக்கும்.
மறுநாள் யானைகள் வரும் – கரும்பின் தோகை மற்றும் கரும்பு, சொளகு நிறைய அரிசி, வெல்லம் என கொடுப்போம். அன்றைய ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைக் காளை என்பதை உணர்த்தும் விதமாக, நீண்ட வரிசையாக, இரட்டைக் காளைகள் கொம்புகளில் அன்றைய காங்கிரஸ் கொடியுடன் நடைபோடும். மாலை நேரத்தில் அதை பார்த்து ரசிப்பதே தனி அழகு.
இல்லம் முழுவதும் மக்கள். தெரு முழுவதும் மக்கள். எல்லாரது வீடுகளும் திறந்தே இருக்கும், பாவுள், குச்சில் என்று பொருட்கள் வைத்திருக்கும் அறைகள் இருந்தன. தனியாக எனக்கு தெரிந்து privacy என்று பகலில் மெத்தையுடன், படுக்கை அறை பார்த்த நினைவில்லை. எந்த வேறுபாடும் இல்லாமல் மகிழ்ந்து கொண்டாடிய தருணங்கள் அவை. இனி வருமா – காலம் தான் பதில் கூறவேண்டும்.
தொடர்ந்து, எனது மனைவி, மகன்கள் மற்றும் உறவு, நட்புக்களுடன், இது தொடர்கிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நாங்கள் இருந்த 10 வருடங்களிலும், பாரம்பரியமான மற்றும் விமர்சையான பொங்கல் விழாவைப் பார்த்து இருக்கிறோம்.
பொங்கல் பண்டிகை – இன்று
இன்றும் பொங்கல் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது என்பதில் இரு கருத்துகள் இல்லை. மகிழ்ச்சி, பண்டிகை, சாப்பாடு, உறவுகள் (கொஞ்சமாக என்றாலும்), ஏதோ ஒன்று குறையாகவே நெருடுகிறது. அதற்கு காரணம் காலத்தின் ஓட்டமா, பணிச்சுமையா, பணம் தேடும் வேகமா, தொலைகாட்சி மற்றும் கைப்பேசிகளின் பாதிப்பா – பதில் தெரியவில்லை , பண்டிகை, நாட்களாக கொண்டாடப்பட்டது , நாள் என்று வந்து விட்டது. இருப்பினும , அந்தப் பண்பாடு தொடர்வது மகிழ்ச்சியே.
பொங்கல் பண்டிகை – என்றென்றும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
என்ற உலக மாகலைஞன் நடிகர் திலகம் நடித்த பழனி படத்தில் வரும் கவியரசின் வரிகளுகேற்ப நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாமே இயற்கை மற்றும் மக்கள் வாழ்வு சார்ந்து இருப்பதால், இந்தப் பண்டிகைகள் நிச்சயம் எல்லாக் காலத்திற்கும் தொடரும். நமது கலாச்சாரம், பண்பாடு தொடரும், இது தான் உண்மை,
—xxxxxx—–