வையாவிக்கோப் பெரும் பேகன்! (Post No.11,690)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,690

Date uploaded in London –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம்  பாடல் 44

வையாவிக்கோப் பெரும் பேகன்!

ச.நாகராஜன்

இன்று நாம் வழங்கி வரும் பழனித் திருத்தலத்தின் பெயர் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது.

அதை பேகன் என்னும் பெரும் வள்ளல் ஆண்டு வந்தான். இவன் வேளிர் தலைவரில் ஒருவனான ஆவியர் குடியில் பிறந்ததனால் வையாவிக்கோப் பெரும் பேகன் என அழைக்கப்பட்டான்,

கடைச் சங்க காலத்தில் இருந்த ஏழு வள்ளல்களில் இவனும் ஒருவன்.

‘ஒரு நாள் பேகன் மலை வழியே சென்று கொண்டிருந்தான்.  அங்கு ஒரு மயில் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

அது குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதாக நினைத்த பேகன் தன் மீது போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்து அந்த மயில் மீது போர்த்தி மகிழ்ந்தான்.

இந்தக் கொடை மடத்தைக் கண்ட புலவர்கள் அவனைப் போற்றினர்.

கண்ணகி என்ற கற்புடைய மங்கையோடு வாழ்ந்து வந்த போது ஒரு சமயம் பரத்தையர் வலையில் சிக்கி மயங்கி இருந்தான் அவன்.

இதனை அறிந்த கபிலரும் அரிசில் கிழாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, ‘நாங்கள் பரிசில் பெற உன்னைப் பாட வரவில்லை. மனதிலே துயர் கொண்டு தனித்து வாழ்கின்ற உனது மனைவியுடன் நீ கூடி வாழ வேண்டும்’  என்றே பாடினோம் என்றனர்.

இதைக் கேட்ட பேகன் மனம் திருந்தி தன் மனைவியோடு வாழத் தொடங்கினான்.

இந்தச் சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

இவன் வாழ்ந்து வந்த நாடு வையாபுரி நாடு என்ற பெயரையும் பெற்றது.

“உடா அ போரா ஆகுத லறிந்தும்

படா அ மஞ்ஞைக் கீந்த்த எங்கோ

கடா அ யானைக் கலிமான் பேகன்”  என பரணரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்

படா அ மீத்த கெடாஅ நல்லிசைக்

கடா அ யானைக் கலிமான் பேக!” என்று வன்பரணர் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்கன் னாடன் பேகன்” என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் – தொல்லை

இரவாம லீந்த இறைவர்போ னீயுங்

கரவாம லீகை கடன்”  என்று இப்படி ஐயனாரிதனார் கூறுவதைப் பார்க்கலாம்.

அருணகிரிநாதர் தனது திருப்புகழில்,

ஆதி யந்தவு லாவா சுபாடிய

   சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

      ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே”

என்று பாடுவதையும் நாம் காண்கிறோம்.

(பாடல் எண் 170 ‘நாத விந்து கலாதி நமோ நம’ என்று தொடங்கும் பாடல்)

 இப்படிப்பட்ட பழம் பெருமையைக் கொண்ட திருத்தலமான பழனிக்கு மிக அருகில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது.

(தென்காசி அருகேயும் ஆய்க்குடி என்ற பெயரில் பிரசித்தமான ஒரு ஊர் இருக்கிறது)

 இது பல ஊர்களைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு ஜமீனின் தலைநகரம்.

ஜமீந்தார் வேட ஜாதி, ஆய் எயினன் என பாணர் முதலியோர் அகநானூற்றில் கூறும் ஆய்க்கும், இந்த ஆய்க்குடிக்கும் அதை ஆள்வோருக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்குமோ என அறிஞர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

 இப்படிப்பட்ட வையாவிக்கோப் பெரும் பேகன் வாழும் மண்டலம் கொங்கு மண்டலமே தான் என கொங்குமண்டல சதகம் தனது 44ஆம் பாடலில் புகழ்ந்து கூறுகிறது.

 பாடல் இதோ:

 கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கமருள்

செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்

வையாவிக் கோப்பெரும் பேக னெனும்பெரு வள்ளறங்கு

வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே   

 இப்பாடலின் பொருள் :

 காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு ஆற்றாமல் நடுங்குகிறது என்று நினைத்து, தான் மேலே போர்த்திருந்த உயர்ந்த ஆடையை அதன் மேல் சார்த்திய, வையாவிக்கோப் பெரும் பேகன் வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஊரே தான் என்பதாம்.

 வாழ்க பேகன் புகழ்!

***

Tags- பேகன், கொங்குமண்டல சதகம்  , வையாவி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: