
Post No. 11,702
Date uploaded in London – 23 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்
பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா?
ச.நாகராஜன்
பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?
காலம் காலமாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு மஹாபாரதத்திலேயே பதில் உள்ளது.
மஹாபாரத கதாபாத்திரங்களுக்கும் இந்த சந்தேகம் வர அது கேட்கப்பட்டது; உரியவரால் உரிய பதில் அளிக்கப்பட்டது.
வேதமே அனைத்து தர்மங்களுக்கும் ஆதாரம்.
“வேதத்தில் அன்னையைத் தெய்வமாகக் கொள், தந்தையை தெய்வமாகக் கொள்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே தாயும் தந்தையும் எதைச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகிறது.
ஆனால் அதே வேதத்தில் இதற்கு முரணான ஒன்றும் காணப்படுகிறது.
“அயுக்தமாக – அதாவது யுக்திக்குப் பொருந்தாத – ஒன்றைப் பெரியோர் சொன்னால் அது பெரியோர் வாக்கியமாயினும் , குரு வாக்கியமாக இருந்தாலும் அதை அங்கீகரிக்கக் கூடாது” என்று இப்படி வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி இரு வகையான அறிவுரைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போல உள்ளவை கூறப்பட்டுள்ளனவே என்ற சந்தேகம் யாருக்கும் எழலாம்.
ஆனால் சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள், சாஸ்திரங்களை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தவர்கள் இதை முரண்பாடான வாக்கியங்களாகக் கருதவில்லை.
யுக்திக்குப் பொருத்தமில்லாத ஒன்றை குரு சொன்னாலும் அதைக் கேட்கும் அவசியம் இல்லை என்பது யாருக்குப் பொருத்தமானது?
குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது யாருக்குப் பொருந்தும்?
குரு சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற வாக்கியம் குருவையே அண்டி அவருடனேயே வசிக்கும் பிரம்மசாரிகளுக்கே பெரிதும் பொருந்தும்.
குரு வாக்கியமும் தள்ளத் தக்கதே என்ற வாக்கியம் பிரம்மசாரி அல்லாத இதர ஆச்ரமங்களில் உள்ளவர்களுக்கே பொருந்தும்.
இதற்கு ஆதாரமாக உள்ள மனு வாக்கியம் இதோ:
“அக்நியாதானம், பூமியில் சயனம், பிக்ஷாடனம், குரு சொல்வதைச் செய்தல் ஆகிய இவைகளை உபநயனமான குருகுலவாசம் செய்யும் பிரம்மசாரியானவன், அவன் குருகுலவாசம் முடியும் வரையில் செய்து தீர வேண்டும்.”
இது அதிகாரி நிர்ணயத்தின் கீழ் வந்திருப்பதால் குரு சொல்வதைச் செய்தே ஆக வேண்டும் என்று ஏற்படுகிறது.

இந்த குருத்வம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.
,மாதா, பிதா, குரு ஆகிய இம்மூவர்களுமே குரு என நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வேளை தந்தை இறந்து போனால் அந்த குருத்வமும் தாயிடமே வந்து சேரும்.
அதே போல ஒரு ஆசார்யர் தன் சீடர்களை யாரிடம் ஒப்புவித்திருக்கிறாரோ அவரும் குருவே தான்.
முதலில் பாண்டு மஹராஜன் குந்தியிடம் பாண்டவர்கள் ஐவரையும் ஒப்புவித்தான். துரதிர்ஷ்டவசமாக மாண்டு போனான்.
பின்னர் ஆசாரியர் துரோணர் வந்தார். அவரும் பாண்டவர் ஐவரையும் குந்தியிடமே ஒப்புவித்தார்.
ஆக இப்படி பாண்டவர்களை நோக்கும் போது குந்தி தேவியின் குருத்வம் மூன்று வகையாலும் நிரம்பி உள்ளது.
அவளுக்கு மூன்று வகை குருத்வ அதிகாரம் ஏற்பட்டுள்ளபடியால், குந்தியின் வார்த்தையைத் தட்டவே முடியாது என்பது பெறப்படுகிறது.
ஆதிபர்வத்தில் 12வது உபபர்வமாக அமைவது ஸ்வயம்வர பர்வம்.
அர்ஜுனன் வில்லை வளைத்து லக்ஷியத்தை நோக்கி அடித்து பந்தயத்தில் வென்றவுடன் திரௌபதி அவனுக்கு உரியவளாகி விட்டாள்.
அன்னையிடம் தாங்கள் வென்றதைச் சொன்ன போது, குந்திதேவி, “ஐவரும் புஜியுங்கள்” என்று கூறினாள்.
ஆகவே ஐவரும் திரௌபதியை மணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனால் துருபதனோ இதை ஆக்ஷேபிக்கிறான்.
யுதிஷ்டிரர் தனது தாயின் சொல்லையே கேட்பேன் என்ற திடத்துடன் இருந்தார்.
ஜடிலை, ஸப்த ரிஷிகளிடம் இருந்ததையும் அவர் சொல்கிறார்.
அப்போது வியாஸர் அங்கு வருகிறார். நளாயினியே குந்தி தேவி என்ற ரகசியத்தை அவர் கூறி அருள்கிறார்.
சங்கரர், நளாயினிக்கு அவள் ஐந்து முறை கேட்டதால் ஐந்து கணவரை வரமாக அளித்தார்.
இப்படி விவரமாக வியாஸர் கூறியதைக் கேட்ட துருபதன் திரௌபதியை பாண்டவர் ஐவருக்கும் மணம் முடித்துத் தர சம்மதித்தான்.
பாண்டவர் வரிசைப்படி கிருஷ்ணையை (திரௌபதியை) மணம் செய்து கொண்டனர்.
திரௌபதியை பந்தயத்தில் ஜெயித்து வந்த போது, ‘ஐவரும் புசியுங்கள்’ என்று தான் சொன்ன வாக்கியம் நடக்காமல் போய்விடக் கூடாது என்ற கவலையுடன் இருந்த குந்தி தேவி கூறினாள் :
“தர்மசாரியாகிய யுதிஷ்டிரர் சொல்லுவது உசிதமே. நான் அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ, எனும் பயம் எனக்கு மிகவும் உள்ளது. இந்த அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ”
இப்படி தன் தாயான குந்தி தேவி வருத்தப்படுவதைக் கேட்டுப் பொறுக்காத தர்மர், ஐவர் ஒருத்தியை மணம் புரியக்கூடாது என்பது சரியே என்றாலும் கூட, பிதா, மாதா, குரு ஆகிய மூவரின் குருத்துவமும் ஒருங்கே கொண்ட தன் தாயான குந்தியின் வார்த்தையின் படி நடக்காமல் போனால் அதுவே மஹாபாபம் என்பதை உணர்ந்து ஐவரும் ஒருத்தியைக் கல்யாணம் செய்வதை ஏற்றுக் கொள்ளத் துணிந்தார்.
துருபதன் கூறுகிறான்” “ ஓ, குருநந்தனரே, ஒருவனுக்குப் பல மனைவி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருத்திக்குப் பல கணவன்மார்கள் விதிக்கப்பட்டதாக ஓரிடத்திலும் காணப்படவில்லையே”
“ஓ, கௌந்தேயரே! உலகத்திற்கும் வேதத்திற்கும் எதிராக உள்ள அதர்மத்தைத் தர்மம் போலச் செய்வது சரியல்ல. உமக்கேன் இப்படி புத்தி போகிறது?” என்று இப்படி துருபதன் தர்மரை நோக்கிச் சொல்ல,
அவர் பதில் கூறுகிறார்:-
“ஓ! மஹாராஜனே! தர்மம் மிக்க சூக்ஷ்மமாய் உள்ளது. இதன் கதியை எம்மால் அறிய இயலவில்லை. முன்னோர்கள் சென்ற வழியை அநுசரிக்கின்றோம்.
என் வாக்கு அந்ருதத்தில் செல்வதில்லை. மனம் அதர்மத்தில் செல்லாது. இவ்விஷயத்தில் என் மனம் செல்லுகின்றபடியால் இது எந்த வகையிலும் அதர்மமாகாது.”
முன்னோர் வழியையே பின்பற்றுவேன் என்பதனால் ஶ்ரீ ராமர் எவ்வளவு பாபமாயினும் பிரம்மசாரியானவன் குரு சொன்னபடி நடப்பதே தர்மம் என வாழ்ந்து காட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார். தாடகையை பெண் என்ற போதும் கூட குரு வாக்கியத்தை மேற்கொண்டு வதம் செய்தார் ஶ்ரீராமர்.
“குருவின் வாக்கியமே தர்மம் என தர்ம தத்துவம் உணர்ந்த பெரியோர் சொல்லுகின்றனர். மூன்று வகையாலும் குருவாயுள்ள எனது தாயே எமக்குப் பரம குரு” என்கிறார் தர்மர்.
இதுவே தர்ம ரஹஸ்யம்.
இதைக் கேட்ட வியாஸர், “இதுவே விஹித தர்மமாம். யாதொரு காரணத்தினால் இதுவே சனாதனமோ, தர்ம புத்திரர் எப்படிச் சொல்கின்றாரோ அப்படியே தர்மம் உள்ளது. இதில் சந்தேகமில்லை.”
என்று உறுதிபடக் கூறுகிறார்.
இப்படிப்பட்ட இதிஹாஸ நிகழ்ச்சிகளினாலேயே, முரண்பாடு உள்ளது போலத் தோன்றும் நிகழ்வுகளில், உள்ளே புதைந்திருக்கும் தர்ம ரகசியங்களை அறிய முடிகிறது.
இதையே முன்னோர் விளக்கமாக இப்படிக் கூறியுள்ளனர்:
“இதிஹாஸ புராணங்களால் வேதத்தின் அர்த்தம் விளங்கச் செய்யப்பட்டுள்ளது”.
இனி, ஐவருடன் சேர்ந்து வாழ திரௌபதி பல நிபந்தனைகளை விதித்தாள். இதனால் கதையில் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. அதை மஹாபாரதத்தில் படித்து பிரமிக்கலாம்.
இனி விதண்டாவாதிகளுக்கு ஒரே பதில் தான்:
“ஐவர் ஒருத்தியை மணந்த போது நாங்கள் விதண்டாவாதிகள் ஐவரும் ஒருத்தியை மணக்கப்போகிறோம். இதில் என்ன தப்பு?” என்று கேட்டால் பதில் இது தான்: “ நீங்கள் ஐவரும் தர்மர், பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் போன்றவர்களைப் போன்ற வீரமும் இதர குணாதிசயங்களுக் கொண்டவர்கள் என்றால், நீங்கள் மணக்கத் துடிக்கும் பெண்ணும் யாக அக்கினியில் திரௌபதியைப் போல நெருப்பிலே உதித்தவள் என்றால், உங்கள் ஐவரின் அன்னை, அதற்குச் சம்மதித்தால் அப்படியே செய்யலாம்” என்பதே.
கிரிமினலான புத்தி தரும் விதண்டாவாதம் எப்போதும் தோற்கும்! தர்மமே வெல்லும்.
***
tags- திரவுபதி , பஞ்சபாண்டவர்