
Post No. 11,703
Date uploaded in London – – 23 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மன்மதன்- ரதி பற்றி அறியாத இந்துக்கள் எவருமில்லை. சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரே வருணனைதான் காணப்படுகிறது. அவனிடம் 5 மலர் அம்புகள் உள்ளன. அதை அவன் எய்தால் ஒருவர், காதல் வசப்படுவர். பின்னர் அவர்கள் செய்யும் வேலையை அப்பர் சுவாமிகள் முதல் பலரும் வருணித்துள்ளனர். அப்பர் இந்தக் காதலை சிவன் மீதுள்ள காதலாக வருணிக்கிறார். அவரோ காமனை எரித்தவர். பற்றுக பற்றற்றான பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்ற வள்ளுவன் வாக்கினுக்கிணங்க சிவனை நினைத்தவர் மன்மத லீலையில் இருந்து விடுபடுவர்.
வேறு எங்கும் சொல்லாத ஒரு விஷயத்தை அம்பலவாணர் கற்பனை செய்து சொல்லுவது நன்கு ரசிக்கத்தக்கது. அதாவது ஒவ்வொரு மலரும் காதல் வயப்பட்டோரின் உடலில், மனதில் என்ன செய்யும் என்பது கவிஞரின் புது கற்பனை.
Xxxxx

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது
அஷ்டாங்க மைத்துனம்
ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச
——விருத்த வசிஷ்டர்
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முது வசிட்டன் சொல்லுகிறான்.
இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:. இதுதான் மன்மத லீலை.
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்..
Xxxxxxxxxxxx
தமிழ் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கிய எம். கே தியாகராஜ பாகவதர் பாட்டு
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?
உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? – மனம் கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 90.
காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்
வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதிலா சையையெ ழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, வனசம்
செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள்
கணைகள் ஆம் – தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை
செயும் குணம் – இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில்
ஆசையை எழுப்பும் – தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்,
வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் – வினவுமிடத்துச்
சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர்செயும் – அசோக மலர் மிகவும்
துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் – குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் – நீலமலர் உயிரை ஒழிக்கும், மேவும் இவை செயும் அவத்தை – பொருந்தும் இவை உண்டாக்கும்
நிலைகளாவன : நினைவில் அதுவே நாக்கம் – எண்ணத்தில் அதுவே
கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் – மற்றொன்றில் ஆசை நீங்கல்,
நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் – பெருமூச்சுடன் பிதற்றுதல், நெஞ்சம் திடுக்கிடுதல்- உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் – உணவில் வெறுப்பு, காய்ச்சல் -உடல் வெதும்புதல், நேர்தல் – மெலிதல், மௌனம் புரிகுதல் – பேசாதிருத்தல்,அனைய உயிர் உண்டு இல்லை என்னல் – ஆசையுற்ற உயிர் உண்டோ
இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் – (ஆகிய இவை)
பத்தும் ஆகும்.
xxxxx
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 91. காமன் துணைப்பொருள்கள்
வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) எளியோர்க்கு எலாம் அமுதமே – ஆற்றல் அற்றவர்கள்
எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை …… தேவனே!, அஞ்சுகணை
மார வேட்கு – ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங்
கழை – கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், நாரி கருவண்டு இனம்
– அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). மேல் விடும் கணைகள் அலர்
ஆம் – (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், தேர் வீசிடும்
தென்றல் – தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்), பரிகள் பைங்கிள்ளையே
– குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). வேழம் கெடாத இருள் ஆம் –
யானை அழியாத இருளாகும். பெருஞ்சேனை வஞ்சியர் – மிகுபடை பெண்கள்
(ஆவர்), உடைவாள் கைதை – உடைவாள் தாழை மடல் (ஆகும்), முரசம்
நெடிய வண்மைபெறு கடல் ஆம் – போர் முரசு நீண்ட கொடைத்தன்மை
பொருந்திய கடலாகும், பதாகை மகரம் – கொடி மகர மீன் ஆகும், காகளம்
வரு கோகிலம் – சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், பெரும்
போர்க்களம் மனதே – பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,
பாடல் சஞ்சரிக இசை – பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், கவிகை
குமுதம் நேயன் – குடை சந்திரன் (ஆவான்); மனைவி சார் இரதியே ஆம் –
காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், மகுடம் தறுகண் மடமாதர்
இளமுலை ஆம் – அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்
முடி ஆகும், தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் – எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், என்பர் – என்று அறிஞர் கூறுவர்.
Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன் …
https://tamilandvedas.com › tamil-hin…
2 Nov 2022 — Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA …
Tags-மன்மதன், ரதி, லீலை, அம்பலவாணர், சதகம், ஐந்து மலர் அம்பு