
Post No. 11,707
Date uploaded in London – – 24 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வால்மீகி இராமாயண உத்தர காண்டத்தில் வியப்புமிகு செய்திகள் பல உள . ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் நிறைய இடைச் செருகல்களைக் கொண்டு இருப்பதால் பலரும் இதை வால்மீகி மஹரிஷி எழுதி இருக்க முடியாது என்பர். ஆயினும் பகதர்கள் எல்லாவற்றையும் நம்புகின்றனர். என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பான ஹரிப் பிரசாத் சாஸ்திரி புஸ்தகத்திலும் எல்லா ஸ்லோக மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவர் இடைச் செருகல் (INTERPOLATIONS) என்ற தலைப்பில் நாய் கதை, கழுகு-ஆந்தை சண்டைக் கதை (VULTURE AND OWL) முதலியவற்றைக் கொடுத்துள்ளார்.
நேற்று நாய்க் கதையைச் சொன்னேன். இன்று அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
நாய்க் கதையின் சுருக்கம்:
ராமபிரான், பிராஹ்மணர்களையும் பிசினஸ் கம்யூனிட்டி வி.ஐ.பிக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபின்னர் , “தம்பி லெட்சுமணா, குறைதீர்க்கும் மனுக்களுடன் வாசலில் காத்திருப்போரை அழைத்து வா” என்கிறார்; அவனும் அரண்மனை வாசலுக்குச் சென்றான். தலையில் அடிபட்ட நாய் ஒன்று மட்டுமே நின்றது. ஒரு பிராமணன் தன்னைக் காரணமின்றி தாக்கியதாக சொல்லவே பிராமணனையும் அழைத்து விசாரித்தார் ராமபிரான். அவன் பசி, கோபத்தில் இவ்வாறு செய்ததாக உண்மையை விளம்பினான். உடனே அவனுக்கு மணியக்காரர் பதவியைக் கொடுத்து அனுப்பினார். அவன் சந்தோஷமாக யானை மீது ஏறி வீட்டுக்குச் சென்றான். அடிபட்ட நாய், மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டு, பின்னர் காசிக்குச் சென்று சாகும் வரை உண்ணாவிரத நோன்பு அனுஷ்டித்து உயிர் நீத்தது .
இதற்கு அடுத்துவரும் ஸ்லோகம்தான் மிகவும் சுவையானது :
யமிச் சேந் நரகம் நேதும் ஸ புத்ர பசு பாந்தவம்
தேவேஷ்வ திஷ்டிதம் குர்யாத் கோஷு ப்ராஹ்மணேஷு ச
நிரயாந் நிரயம் ஸைஷ பதத்யேவ நராதமஹ
மக்கள், விலங்கினங்கள் , உறவினர்கள் இவர்களுடன் கூடிய எவனை நரகத்திற்கு அனுப்ப விருப்பமுண்டோ அவனைக் கோவில்களிலும், பசு மடங்களிலும் , பிராமணர்களின் அன்ன சத்திரங்களிலும் அதி காரியாகச் செய்துவிடவேண்டும் . அவன் ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் போய்க்கொண்டே இருப்பான் .
வால்மீகி முனிவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்று ஆராய்வோம். பொதுவாகவே பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது குற்றம் என்பதை , எல்லா மத நூல்களும் செப்புகின்றன. அதிலும் புனிதமான பொருள்களைத் திருடுவது பெரிய குற்றம்; அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள் என்று எல்லா தமிழ்க் கல்வெட்டுக்களும் எச்சரிக்கின்றன. ஏனெனில் அது வேலியே பயிரை மேய்ந்ததற்குச் சமம் ஆகும்.

மேலும் சிவன் சொத்து குல நாசம் என்ற தமிழ்ப் பழமொழியை எல்லோரும் அறிவர். கோவில்கள், பசு மடங்கள் , அன்ன சத்திரங்களில் பொய்க் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டுவது எளிது. தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இவ்வாறு (H R C E) கோவில் ஊழியர்கள் திருடுவதும், லஞ்சம் வாங்கி கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதும் நாம் .அறிந்ததே. திருடர்களுக்கு நரகம் கிடைக்கும் என்பதை எல்லா சமயங்களும் எழுதியுள்ளன . இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷியும் எழுதியுள்ளது அடிக்கோடிட்டுக் காண்பிப்பது போல பளிச்சிடுகிறது.
வாழ்க வால்மீகி ; வளர்க ராமாயணம்
–SUBHAM—tags- கோவில் அதிகாரி, நரகம் , வால்மீகி, எச்சரிக்கை