
Post No. 11,706
Date uploaded in London – – 24 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பலவாணக் கவிராயர், பகைக்கக்கூடாதவர்கள் யார் யார் என்று ஒரு லிஸ்ட்/ List பட்டியல் தருகிறார்.; அந்த 15 பேரைக் கனவிலும் பகைக்கக்கூடாது என்கிறார். யார் அந்த 15 பேர்?
அரசர், மந்திரிகள், தீயோர், கோள் சொல்லுவோர்,
தூதர்,மர்மமான ஆசாமிகள் , வலிமையுடையோர், கணக்கர்,
சமையற்காரர், மந்திர வாதிகள், பணக்காரர், இழிந்தோர்,
உபதேசியர், மருத்துவர், புலவர்கள்.
நல்ல அறிவுரைதான். சமையல்காரனை பகைத்தால் சாப்பாட்டில் உப்பு அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துவிடுவான்; டாக்டரைப் பகைத்தால் ஊசி மருந்து ஏற்றுவதாகச் சொல்லி தண்ணீரை ஏற்றிவிட்டு காசு வாங்குவார். கீழோரைப் பகைத்தால் தூக்கணங் குருவிக்கூட்டைப் பிய்த்தெறிந்த பஞ்ச தந்திரக் கதை நினைவுக்கு வரும். பலசாலியைப் பகைத்தால் கைகால்கள் முறியக்கூடும்; பணக்காரர்களைப் பகைத்தால் அடியாட்களைக் கொண்டு தாக்குவார்கள். புலவர்களை பகைத்தால் அறம்பாடி நம்மைக் கொன்றுவிடுவார்கள் .அரசர்/ ஆளும் கட்சியினரைப் பகைத்தால் போலீஸ் கேஸ் கூட பதிவு செய்ய மாட்டார்கள். அம்பலவாணர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.
Xxxx
அடுத்த பாடலில் இன்னுமொரு அறிவுரை வழங்குகிறார்; கரும்பு போன்ற பொருள்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் பலன் கிடைக்கும். சாறு வேண்டுமென்றால் நசுக்க வேண்டும். திருவள்ளுவர் கூட கருமிகளை கையை முறித்து முகவாக்கட்டையில் ஒரு குத்துவிட்டால்தான் காசு தருவான் என்று சொல்கிறார் (காண்க வள்ளுவரும் வன்முறையும் என்ற எனது கட்டுரை). இன்னும் சிலரைப் புகழ்ந்து வேலை வாங்க வேண்டும். சின்னப் பையனாக இருந்தால், அட என் ராஜா , உன்னைப்போல இன்டெலிஜெண்ட் INTELLIGENT யாரும் கிடையாது ; உன் டீச்சர் என்னிடம் சொன்னார். வா, வா, ஹோம் ஓர்க்கை HOME WORK வேகமாக செய் என்று சொன்னால் செய்வான். ஒரு பெண்ணை விரும்பினால், உன்னைப்போல அழகியை நன் உலகிலேயே கண்டதில்லை. அடடா, நீ நல்ல குணங்களுக்கு இலக்கணம்.BEAUTY AND FULL OF GOOD VIRTUES என்று புகழ் வேண்டும். அந்த அசடும் ( DIMWIT)மயங்கி, சொக்கிப் போகும். இது அம்பலவாணர் கண்ட உண்மை.
XXXXXXXXX
இதோ பாடல் எண் 92
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 92
92. பகை கொள்ளத் தகாதவர்

மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
மாறாத மர்மம் உடையோர்,
வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்
மடையர்,மந் திரவா தியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்
சூழ்வயித் தியர்,க விதைகள்
சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்
நானிலத் தென்பர் கண்டாய்!
நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்
நம்பனே! அன்பர் நிதி யே!
அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) நாரி ஓர் பாகனே – உமையொரு பங்கனே!, வேத ஆகமம்
பரவும் நண்பனே – மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,
அன்பர் நிதியே – அன்பரின் சேமப்பொருளே!, அன்னம் ஊர் பிரமனும்
கண்ணனும் காணாத அண்ணலே – அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்
திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை …….. தேவனே!,
மன்னர் – அரசர், அமைச்சர் – மந்திரிகள், துர்ச்சனர் – தீயோர், கோளர் –
கோள் சொல்லுவோர், தூதரொடு – தூதர்களுடன், மாறாத மர்மம்
உடையோர் – நீங்காத செற்றம் கொண்டவர்கள்,
வலுவர் – வலிமையுடையோர், கருணீகர் – கணக்கர், மிகு பாகம் செய்து
அன்னம் இடும் மடையர் – சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர்,
மந்திர வாதியர் – மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் – செல்வ
மிக்கவர்கள், புலையர் – இழிந்தோர், உபதேசமது செய்வோர் – உபதேசியர்,
சூழ் வயித்தியர் – ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும்
புலவர் – செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்தபேர் இந்நானிலத்து பகை
செய்திடார் – இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி
அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்பர் – என்று கூறுவர்.
(வி-ரை.) கண்டாய் : முன்னிலை அசைச் சொல் : நன்மை + நெறி –
நன்னெறி, மடை – சோறு. மடையர் – சமையல் செய்வோர். உபதேசம்
புரிவோர் – ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.
Xxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 93
93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்
சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும்நல் நெல்லை எள்ளைத்
தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழுதொ ழும்பை
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்
நற்றமிழ்க் கவிவா ணரை
நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க
நயமுள்ள நாரியர் தமைப்
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர்வீர ரைத்தூ யரைப்
போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்
புகழ்பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே – தீய
அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே!, அண்ணலே –
தலைவனே!, அருமை ….. தேவனே!, சுவைசேர் கரும்பை – சுவை பொருந்திய
கரும்பையும், வெண் பாலை – வெண்மையான பாலையும், பருத்தியை –
பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை – சொல்லப்படுகின்ற நல்ல
நெல்லையும், எள்ளை – எள்ளையும், தூய தெங்கின் கனியை – தூய்மை
பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை – மதிக்காத
தீயவர்களையும், தொண்டரை – அடிமையாளரையும், தொழு தொழும்பை –
குற்றேவேல் செய்வோரையும், நவைதீருமாறு – குற்றம் நீங்கும்படி, கண்டித்தே
– கண்டனம் செய்தே, பயன் கொள்வர் – அவர்களால் ஆன பயனைப்
பெறுவார்கள், நல் தமிழ் வாணரை – நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த
புலவரையும், நலம் மிக்க செழுமலரை – நன்மை மிகுந்த செழித்த பூவையும்,
ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை – ஓவியத்தில் எழுதிய
பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில்
உபகார நெஞ்சரை – பூமியின் மீதில் உதவி செய்ய வேண்டுமென்று மனம்
படைத்தோரையும், சிறுவரை – சிறுவரையும், போர் வீரரை – போர்
வீரர்களையும், தூயரை – தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும்
பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் – மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.
(வி-ரை.) தொழும்பர் – குற்றேவல் செய்வோர். நவை – குற்றம்.
Xxxx
To be continued……………………………………………
tags- அறப்பளீசுர சதக, பாடல் எண் 93, பகை, தகாதவர், பகைக்காதே