
Post No. 11,705
Date uploaded in London – 24 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.
இறைவனின் அருளுக்கு ஜாதி பேதம் கிடையாது, உயர்ந்தோர், பட்டியல் இனத்தோர் என்ற வேறுபாடு கிடையாது என்பதை நமது பண்டைய இலக்கியம் தெளிவு பட விளக்குகிறது.
பின்னால் அரசியல் காரணங்களுக்காக வேறுபாடு உருவாக்கப்பட்டு பல்வேறு சொற்றொடர்களில் அமைக்கப்பட்டு பட்டியல் இனத்தோர், தலித், ஹரிஜன், முன்னேறிய வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்றெல்லாம் சொல்லப்பட்டு பிளவை ஏற்படுத்தியது.
சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் இடம் பெற்ற ஒரு சுவையான வரலாறு இறைவனின் அருள் எல்லோருக்கும் பொது என்பதை விளக்குகிறது.
இறைவனே பள்ளன் ஆன நிஜ வரலாறு இது.
சுந்தரர் தனது உளத்திலிருந்து எழுந்த அருள் பாடல்களைப் பாடியவாறே ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபிரானைத் தரிசித்து வந்தார்.
‘சுந்தரர் பாடிக் கொண்டே வருகிறார். அவருக்குத் தேவையான பொன்னைக் கொடுக்க என்னிடம் பொன் இல்லையே’ என்று ஒளிந்தாற் போல ஒரு திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் கொண்ட பட்டிப் பெருமான் ஒளிந்து கொண்டார்.
இந்த வரலாறு நடந்ததும் கொங்குமண்டலத்திலே தான் என்று பெருமையுடன் இதைப் பதிவு செய்கிறது கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.
பாடல் :
கடுவாள் விழியினை யாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச்சிவன் கொங்கு மண்டலமே
பொருள் : ‘சுந்தரர் பாடி வருவார், அவருக்குக் கொடுக்க பொன் இல்லையே நம்மிடம்’ என்று ஒளிந்தார் போலப் பட்டிப் பெருமானார், பள்ள வடிவு கொண்டு ஒளிந்ததும் பேரூரில், அந்தப் பேரூரும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.
உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோலமிட்டுரைக்கும்
வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகி முன்காட்டிப்
பயந்தரு மிறையவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்
நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா
என்று பேரூர்ப் புராணம் இதைக் கூறுகிறது.
பேரூர் தலம் பற்றிய குறிப்பு :
கோவை மாநகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி பேரூர் பட்டீஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கரிகால் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பச்சைநாயகி அம்மன் பட்டிஸ்வரருடன் இருந்து அருள் பாலிக்கும் தலம் இது. இங்குள்ள லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்.
இதற்கு பிப்பலாரண்டயம், பட்டிபுரி, காமதேனு புரி எனப் பல பெயர்கள் உண்டு.
ஒரு முறை பிரம்மா அயர்வுற்று, தூங்கி, படைப்புத் தொழிலைச் செய்யவில்லை. இதை அறிந்த மஹாவிஷ்ணு காமதேனுவை அழைத்து, ‘நீ சிவனை நோக்கித் தவமிருந்து அவர் அருள் பெற்று படைப்புத் தொழிலைச் செய்வாயாக’ என்றார். அதன் படி காமதேனு இமயமலையில் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் சிவன் அருள் சித்திக்கவில்லை.
நாரதர் ஒரு சமயம் அங்கே சென்றார். ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சியில் அருள் பாலிக்கும் சிவபெருமான் பற்றிச் சொல்ல, காமதேனு அங்கு சென்று தினமும் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.
ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி அந்த லிங்கத்தின் மேல் எழுந்திருந்த புற்றை விளையாட்டாய்க் கலைத்து விட்டது.
கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியின் மீது படிந்து விட்டது.
இதை அறிந்த காமதேனு பெரிதும் வருத்தமுற்றது.
காமதேனுவின் வருத்தத்தைப் போக்க சிவபிரான் காமதேனு முன் தோன்றினார்.
“கவலையுற வேண்டாம். பட்டியின் குளம்படித் தழும்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.இங்கே தொடர்ந்து நீ தவம் செய். எனது நடன தரிசனத்தை நீ எப்போதும் இங்கு காணலாம். இந்தத் தலம் பட்டீஸ்வரம் என இனிப் புகழ் பெறும்.” என்று கூறி அருளினார்.
இன்றும் சிவபிரான் திருமுடியில் இந்தக் குளம்படித் தழும்பு உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக இறைவன் பட்டீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்தத் தலத்தில் பல அருளாளர்களும் வருகை புரிந்து பாடல்களைப் பாடித் தொழுதுள்ளனர்.
இன்றும் பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து சிவபிரானை வணங்கும் மாபெரும் தலமாக பட்டீஸ்வரம் உள்ளது.
***
.