
Post No. 11,709
Date uploaded in London – 25 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16
பேரூர்த் தாண்டவமூர்த்தி!
ச.நாகராஜன்
(சென்ற கட்டுரையில் பேரூர் பட்டீஸ்வரம் கோவில் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து இதோ…)
கோமுனி, பட்டி முனி காண பட்டீஸ்வரர் நடனம் ஆடிய தலம் மேலைச் சிதம்பரம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற திருத்தலமாகு.
இதைப் பற்றி கொங்குமண்டல சதகம் பாடல் 17இல் சிறப்புறக் கூறுகிறது இப்படி:-
பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பாணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே
பொருள் : கோமுனி, பட்டிமுனி காண, மரகதவல்லி சமேதரான பட்டீஸ்வரர் நடனம் செய்தது மேலைச் சிதம்பரமான பேரூரில்.
அந்தப் பேரூரும் கொங்குமண்டலம் சார்ந்த திருத்தலமே என்பதாம்.
கொங்குமண்டலத்தில் ஆறை நாட்டில் உள்ளது திரு அவிநாசி.
இங்கு ஒரு பெரிய அற்புத சம்பவம் நடைபெற்றது.
திருநாவலூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு சமயம் அவிநாசிக்கு எழுந்தருளினார். அப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலி எழுந்தது. ஆனால் அடுத்த வீட்டிலோ அழுகுரல் கேட்டது.

நடந்தது என்ன என்று கேட்டார் சுந்தரர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சில சிறுவர்கள் அங்குள்ள குளத்திற்குச் சென்றனர். ஒரு சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென்று விழுங்கி விட்டது. அந்தச் சிறுவனுடன் கூடச் சென்ற சிறுவனுக்கு இன்று உபநயனம். ஆகவே அந்த வீட்டில் மங்கல ஒலி எழுகிறது. ‘நம் குழந்தை இருந்தால் அவனுக்கும் இது போலவே உபநயனம் நடந்திருக்குமே’ என்று அச்சிறுவனின் தாயார் அழவே, அந்த அழும் ஒலி அங்கு கேட்டது.
சுந்தரமூர்த்தி நடந்தை உணர்ந்தார். அந்தச் சிறுவனின் தாயார் அழுவதைக் காணப் பொறாத அவர் நேராக் குளக்கரைக்குச் சென்றார்.
“காலனைக் குழந்தையைக் கொடுக்கச் சொல்” என்று பதிகம் ஓதினார்.
என்ன ஆச்சரியம்! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் முதலையின் வாயிலிருந்து கக்கப்பட்டு வெளியே வந்தான்.
அனைவரும் இந்த அதிசய சம்பவத்தைக் கண்டு பிரமித்தனர்.
உலகெங்கும் இந்தச் செய்தி பரவியது.
இன்றும் அதன் நினைவாகத் திருவிழா அங்கு நடை பெறுகிறது.
சுந்தரர் பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாயிற்று.
அவர் பாடிய பாடல்:
உரைப்பாருரையிகந் துள்கவல்லார் தங்களுச்சியா
யரைக்காடரவா வாதியு மந்தமுமா னாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூரவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே
இதைச் சுட்டிக் காட்டும் அவிநாசிப் புராணம் தரும் பாடல் இது:
“உரைப்பாருரையென் றுள்குறவல்லா குச்சியின்மீதே யொளிவிடுசுடரே
யரைக்காடரவா வாதியு நடுவு மந்தமுமளவு மல்லவுமானாய்
புரைக்காடவை சூழ்புக்கொளியூரா புகழவிநாசிப் புண்ணியமுதலே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனையென்றே கட்டுரை செய்தார்”.
இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் பாடல் 16 சிறப்புறக் கூறி அவிநாசித் திருத்தலத்தைப் போற்றுகிறது:

பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே
பொருள் : பிள்ளையைக் கொண்டு வா என்று சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாட, விழுங்கிய பிள்ளையை குளக்கரையில் முதலை உமிழ்ந்த அவிநாசித் திருத்தலமும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.
***