
WRITTEN BY B .Kannan, New Delhi
Post No. 11,717
Date uploaded in London – – 27 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WRITTEN BY B.KANNAN, NEW DELHI
இங்கு மற்றொரு கவிஞர் சீனிசக்கரைப் புலவரைப் பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. இவர் பழநி முருகன் மீது புகையிலை விடு தூது பாடியுள்ளார். அதில் மூக்குப்பொடி பற்றி இருகண்ணிகள் இயற்றியுள்ளார். முதலில் பீங்கான் ஜாடியில்அடைத்திருந்தும் மணம் பரப்பும் நுகட்காரத்தைச் சிலாகிக்கிறார்.
வாடைப்பொடி கதம்பமான வெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ?
வாசனைப் பரப்பும் ஜவ்வாது, அத்தர் போன்ற பொருள்களும் கதம்பம் எனில் எல்லா நறுமணமும் கலந்த சுகந்த மணம் வீசும் பொடியும், ஜாடியில் இருக்கும் மூக்குப் பொடிக்கு இணையாகுமோ? என்பது இதன் பொருள்.
அடுத்தக் கண்ணியில் நக்கலடிக்கிறார்.
சொற்காட்டு நல்ல துடிகார ராரை
பற்காட்ட விட்ட பழிகாரா!
ஓரு சிட்டிகைப் பொடிக்காகத் தம் நிலையையும் மறந்து, பிறரைக் கெஞ்சும் மனிதர் பலரைப் பார்க்கிறோம். அதைத்தான் புலவரும் சுட்டிக் காட்டுகிறார்.
கடைசியாக மறுபடியும் தமிழ்த் தாத்தா உ.வே.சாவை அணுகுவோம்….அவரது என் சரிதம் கட்டுரை ஒன்றில் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
உ.வே.சாவுக்கு கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியப் பணி கிடைக்க உதவியவர் வித்துவான் தியாகராசச் செட்டியார். அவர் ஒரு தீவிரப் பொடி பக்தர். அவரிடம் பயின்ற மாணவர் சோமசுந்தரம் பிள்ளை என்பவர் திருவானைக்காவில் ஒரு பொடிக் கடை நடத்திவந்தார். அங்கு, பொடி வாங்கக் கூட்டம் அலைமோதும். சுடச்சுடப் புதுப் பொடியை வாங்கி சூடு ஆறுவதற்குள் மூக்கில் ஏற்றிக்கொள்ள முண்டியடித்துப் பலர் அங்கே கூடிவிடுவர். வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். அது தரும் லாபத்தின் ஒரு பகுதியைச் (அட,பீரங்கி மூக்குகள் அவ்வளவா இருந்திருக்கும்!) சிவாலயத்தர்மப்பணி களுக்காகச் செலவிட்டு வந்தார்.
தினமும் காவிரியில் குளித்துவிட்டு, கோயில் தரிசனத்தையும் முடித்துக் கொண்டுத் திரும்பும் செட்டியார், பிள்ளயின் பொடிக்கடைக்குத் தான் நேராக வருவார். குறிப்ப றிந்த வேலையாள் பொடிப்பட்டை ஒன்றை இவரருகில் வைத்துவிட்டு, போட்டுப் பார்ப்பதற்காக வேறொரு பட்டையிலும் கொண்டுவந்து கொடுப்பான். செட்டியார் அதையும் மூக்கில் திணித்தவாறு பேசாமல் சிறிது நேரம் இருப்பார். பொடியின் இனி மையைத் தடையேதுமின்றிச் சுகமாக அனுபவிக்கத்தான் அந்த மௌனம். இப்படிப்பட்டச் சூழலில் ஒருநாள் அவரைச் சந்திக்க வந்தார் உ,வே.சா. அது சமயம் நடந்தக் காட்சியை அவர் விளக்குவதைப் பாருங்கள்….

“செட்டியார் சோமசுந்தரம் பிள்ளையின் கடையில் உட்கார்ந்தார். நானும் அவரருகே அமர்ந்தேன். பொடியின் மணம் எங்கும் பரவி மூக்கைத் துளைத்தது. வழக்கம் போல் வேலையாள் ஒரு பொடிப்பட்டையைச் செட்டியாரிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அப்பட்டையைப் பக்குவப் படுத்துவ தற்கே ஒரு தனித்திறமை வேண்டும் போல் தோன்றியது. அதனுள்ளே இருந்தப் பொடியின் மணம் சிறிதளவும் வெளியே போகாதபடி, வெண்மை வாழை நாரால் இறுக அடி முதல் நுனி வரையிலும் நெருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அதிலிலும் ஓர் ஒழுங்கு காணப்பட்டது. அதன் அழகை உத்தேசித்து அதைப் பொக்கிஷமாக வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றும்.
புதுப்பொடியைச் செட்டியாரிடம் அளித்த வேலையாள் எனக்கும் கொடுக்க வந்தான்.
அதன் அருமையைச் சிறிதும் அறியாத நான் வழக்கமில்லை எனச் சொன்னேன். உரையாடலின் நடுவே,”பொடியின் இனிமையை நுகர்ந்த ஒரு புலவர் முன்பு ஒரு பாடல் இயற்றி இருக்கிறார் எனக் கூறிய நான் அப்பாடலைப் பாடிக் காட்டினேன்.
“ஊசிக் கழகு முனைமுறி யாமை; உயர்ந்த பர
தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்; திரள்நகில்சேர்
வேசிக் கழகு தன் மேனி மினுக்கல்; மிகப் பெருத்த
நாசிக் கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே!”
(ஊசிக்கு அழகு முனை உடையாமலிருப்பது; சாதுக்களுக்கு அழகு இந்திரியங்களை அடக்கி ஆள்வது; திரண்ட மார்பகம்-நகில்-கொண்ட வேசிக்கு அழகு மேனியைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது; பெருத்த மூக்குக்கு அழகு பொடி என்று சொல்லுவர் நாவலரே)
சோமசுந்தரம் பிள்ளை அப்பாடலைத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டு மிகவும் பாராட்டினார். செட்டியாரோ,” இச் செய்யுள் பொத்தாம் பொதுவாக அல்லவோ இருக் கிறது? இதேமாதிரி நம் சோமசுந்தரத்தையும், அவர் கடைப் பொடியையும் சிறப்பித்து ஒரு பாடல் செய்யலாமே!” என்றார். உடனே தியாகேசரும், உவேசாவும் இணைந்து, கீழ்கண்ட பாடலை இயற்றினர்.

“கொடியணி மாடம் ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்
படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்த
பொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே!”
(சைவச் சின்னம் கொடி கட்டி உயர்ந்தோங்கி நிற்கும் மாடங்கள் நிரம்பிய திருவானைக்காப் பதியில் வாழும் பாக்கியம் பெற்றோர் நன்றாக அறிவார், பொடி கலக்கி எடுத்துச் சிவந்தக் கைகளை உடையவரும், மங்கையர் காமுறும் மன்ம தனை ஒத்த சோமசுந்தரன் கடையில் தயாரித்த மூக்குப்பொடியைப் போடாத மூக்கு புண்ணியம் செய்யாத மூக்கு என்றே!)
என்பதாக அமைகிறது மூக்குப்பொடி விளம்பரப் பாடல், ஆம், பிள்ளை அவர்கள் இப்பாட்டைத் தனியே அச்சிட்டு ஊர் முழுதும் ஒட்டச் செய்ததோடு அனைவருக்கும் விநியோகித்தும் வந்தார். வியாபாரம் மேல்மேலும் பெருகிற்று என்பதைச்சொல்லவா, வேண்டும்! பொடியின் மகிமை அப்படிப் பட்டதாயிற்றே!
— subham—
tags- மூக்குப்பொடி, மகிமை – part 2, ஊசிக் கழகு முனைமுறி யாமை, கொடியணி மாடம்